full screen background image

கொலை – சினிமா விமர்சனம்

கொலை –  சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, நடிகர் முரளி சர்மா, சித்தார்த்த ஷங்கர், ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பாலாஜி K.குமார், பேனர் – Infiniti Film Ventures & Lotus Pictures, தயாரிப்பாளர்கள் – கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப் P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & R.V.S.அசோக் குமார், ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன், இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – K.ஆறுசாமி, VFX மேற்பார்வையாளர் – ரமேஷ் ஆச்சார்யா, ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், மறுபதிவு கலவை – A.M.ரஹ்மத்துல்லா, ஆடை வடிவமைப்பு – ஷிமோனா ஸ்டாலின், சண்டை பயிற்சி இயக்கம் –  மகேஷ் மேத்யூ, நடன இயக்கம் – சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா – ரேகா (D’One).

மிகச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பாக 2013-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று வெளியானது ‘விடியும் முன்’ என்ற தமிழ்த் திரைப்படம். ஒரு புதுமையான வடிவில், அதுவரையிலும் பார்த்திராத ஒரு திரை அனுபவத்தை அத்திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தது.

அந்தப் படத்தின் இயக்குநரான பாலாஜி கே.குமார் 10 ஆண்டுகளுக்குப் பின்பு இயக்கியிருக்கும் அடுத்தப் படம்தான் இந்தக் ‘கொலை’.  ‘விடியும் முன்’ போலவே இந்தக் ‘கொலை’யும் ஒரு மாஸ்டர் கிளாஸ் படம்தான்.

பிரபலமான மாடல் அழகியான ‘லைலா’ என்ற மீனாட்சி செளத்ரி. மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கை போலீஸ் அதிகாரிகளான ‘சந்தியா’ என்ற ரித்திகா சிங்கும், ‘விநாயக்’ என்ற விஜய் ஆண்டனியும் இணைந்து துப்புத் துலக்குகிறார்கள்.

முடிவில் கொலையாளி யார்..? எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பதைக் கண்டறிவதுதான் இந்தக் ‘கொலை’ படத்தின் கதை.

‘விநாயக்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு மிகப் பொருத்தமான வேடம்தான். கொஞ்சம் நரைத்த முடியுடன் அவர் தோன்றும் முதல் படம் இதுதான். போலீஸ் அதிகாரிகளுக்கே உரித்தான மிடுக்கான நடை, கூர்மையான பார்வை, கண நேர அவதானிப்பு, ஊகிக்கும் தன்மை, விசாரணையை நடத்தும் வேகமும், விவேகமும் என்று அவரது தொடர்ச்சியான நடிப்பினால் படம் நெடுகிலும் அவரை ஆழமாக ரசிக்க முடிந்திருக்கிறது.

இவருக்காக சிறப்பு திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் சொந்தக் கதையில், அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் அளவுக்கான அவரது கதாப்பாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தியா’வாக ரித்திகா சிங். ஜான் விஜய்யின் நக்கல் பேச்சுக்களைத் தாங்கிக் கொண்டும் இந்த வழக்கின் உண்மையைக் கண்டறிய துடிக்கும் கேரக்டர். ஸ்கீரின் பிரசன்ஸூக்கு பெரிதும் உதவியிருக்கிறது இவரது ஸ்டைலிங்கான டிரெஸ்ஸிங் சென்ஸூம், தோற்றமும், நடிப்பும்..!

போலீஸ் உயரதிகாரியான ஜான் விஜய், தனது கோணல், மாணல் மாடுலேஷனின் மூலமாக நக்கல் நையாண்டியாகப் பேசியே நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

இந்தியாவின் ‘மிஸ் ஃபெமினா’ அழகிப் போட்டியில் பட்டம் பெற்ற ‘மாடல்’ மீனாட்சி சௌத்ரி, இந்தப் படத்தில் ‘லைலா’ என்ற மாடல் அழகியாக நடித்திருக்கிறார்.

மாடல் அழகி என்பதால் அதற்கேற்ற காட்சிகளில் அனாயசமாக தனது பாடி லாங்குவேஜ் மூலமாக ஒரு ஈர்ப்பை உண்டு செய்திருக்கிறார். முரளி சர்மாவிடம் “அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு முடியாது” என்று சொல்லுமிடத்தில் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

ராதிகா சரத்குமார் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் என்றாலும் தென்னிந்திய நடிகைகளில் மாடர்ன் டிரெஸ்ஸிங்சென்ஸில் இன்னமும் தான்தான் அரசி’ என்பதைக் காட்டியிருக்கிறார். அதேபோல் ராதிகாவின் ஆங்கில வசன உச்சரிப்பு அதே லண்டன் ஸ்டைலில் அவரது கேரக்டருக்கான கவர்ச்சியைக் கூட்டுகிறது.

மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர் தனது முன் கதைச் சுருக்கத்தைச் சொல்லி யாமினியை நமக்குக் காட்டும்போது பரிதாப உணர்வை எழ வைக்கிறார்.

முன்னாள் காதலரான அர்ஜுன் சிதம்பரம், பப்லுவாக நடித்தவர் என்று சிலரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டிய மற்றுமொரு கதாப்பாத்திரத்தில் முரளி சர்மா நடித்திருக்கிறார். “தனக்குப் பணிந்து நடந்தால் மிகப் பெரிய ஸ்டாராக்கி காட்டுகிறேன்..” என்று லைலாவிடம் மிக நைச்சியமாகச் சொல்லும் அழகும், லைலாவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஆண்களுக்கே உரித்தான அந்த இனிமையான தருணத்தை எதிர்பார்க்கும் மன நிலையைக் காட்டும் காட்சியில் ஆண் ரசிகர்கள் அத்தனை பேரின் உள்ளத்தையும் தொட்டுவிட்டார் முரளி சர்மா. கங்கிராட்ஸ் ஸார்!

இயக்குநர் பாலாஜி குமாரின் பலமே அவரது தொழில் நுட்பக் கலைஞர்கள்தான். படம் நெடுகிலும் ஏதோ வண்ணக் கலைவைகளைக் கொண்டு ஓவியம் வரைந்தாற்போன்று காட்சிகள் மின்னலடிக்கின்றன. ஒவ்வொரு காட்சியின் முடிவின்போது வேறொரு அதிசயம் நிகழ்ந்து இன்னொரு காட்சி துவங்குவது புத்தம் புதிய வித்தை..!

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு இதுவரையிலும் நாம் பார்த்திராத அழகுணர்ச்சியைக் காட்டியிருக்கிறது. கேமிராவின் கோணங்கள் ஒவ்வொரு காட்சியிலும் 360 டிகிரியிலும் மாறி நமக்கு புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது.

ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கேற்பவும் ஒளிப்பதிவின் கலரும் மாறி, அதன் மூலமாக ரசிகர்களின் மனநிலையையும் மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர். பாடல் காட்சிகளிலும், வீட்டின் உட்பறக் காட்சிகளிலும், கிரீன் மேட் காட்சிகளிலும் இப்படியெல்லாம் வித்தை காட்ட முடியுமா என்று நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்துடன் இணைந்தே வந்திருக்கிறது. திரைக்கதையின் வேகத்திற்கு ஈடாக அதை நகர்த்திச் செல்லும் பாங்கில் பின்னணி இசையும் ஒலிக்கிறது.

காலத்தால் அழியாத பாடலான “பார்த்த ஞாபகம் இல்லையோ..” பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறா்கள். இதுவொன்றுதான் இந்தப் படத்தில் நம்மால் ஏற்க முடியாதது. அதேசமயம் பழைய பாடல்களை தோற்கடிக்கும் அளவுக்கான திறமைசாலி இசையமைப்பாளர்கள் இப்போதைக்கு யாரும் இல்லை என்பதை இந்தக் காட்சி உணர்த்துவதால் இதை இன்னொரு பக்கம் வரவேற்கலாம். ஆனால் ரீமீக்ஸ் செய்ததற்குப் பதிலாக அந்தப் பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே இயக்குநரே..!?

இந்தப் படத்தில் எத்தனை காட்சிகள், எத்தனை ஷாட்டுகள் இருந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்கவே முடியவில்லை. நிறைய ஆங்கில வசனங்களுடன், குறிப்பால் உணர்த்தும் காட்சிகளை வைத்துக் கொண்டு, முக்கியமான திருப்பு முனையாக ப்ளாஷ்பேக் திரைக்கதையும் படத்தில் இருந்தாலும் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் படத்தைக் கச்சிதமாக நறுக்கித் தந்திருக்கும் படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வாவுக்கு நமது பாராட்டுக்கள்.

ஒரு வீடு, போலீஸ் ஸ்டேஷன், அலுவலகம், ஹோட்டல்கள் என்று கதை பல இடங்களுக்குள் சென்று வந்தாலும் லைலாவின் வீட்டையும், போலீஸ் ஸ்டேஷனையும் வடிவமைத்திருக்கும் கலை இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த வீடு செட்டப்பை புதிய வீடு கட்டுபவர்கள் நிச்சயமாக விரும்புவார்கள். அப்படியொரு வித்தியாசமான, புத்திசாலித்தனமான டிஸைனிங்கில் கட்டியிருக்கிறார்கள்.

இந்தக் ‘கொலை’ படம் வழக்கமான மர்டர், மிஸ்டரி க்ரைம் மூவியாக இருந்தாலும், தனது  வித்தியாசமான மேக்கிங் திறமையால் ஹாலிவுட் படம் பார்க்கும் அனுபவத்தினை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே.குமார்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மொத்தக் கதையும் நமக்குத் தெரிந்து விடுகிறது. உடனேயே நாமும் கதைக்குள் இழுக்கப்பட்டுவிட்டோம். இதன் பிறகு யார், இந்தக் கொலையை செய்தது என்று நமக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்துவதைப் போல ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மீதும் சந்தேகம் வருவதைப் போல எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையால்தான் படம் மிக சுவாரஸ்யமாகச் செல்கிறது.

முதல் பாதியில் ஜெட் வேகத்தில் சென்ற திரைக்கதை, இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனியின் சொந்த வாழ்க்கை சோகத்தில் மாட்டிக் கொண்டு டேக் ஆஃப் ஆகாமல் சிறிது நேரம் மாட்டிக் கொண்டது. கிளைமாக்ஸில் கொலையாளி யார் என்பதை விஜய் ஆண்டனி சொல்லும்விதம் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக அமைந்திருப்பதும் படத்தை கொஞ்சம் அன்னியமாகிவிட்டது.

ஆனால் முதல் காட்சியின் தொடர்ச்சிதான் படத்தின் கடைசி காட்சியாக அமைந்திருக்கும் திரைக்கதை வித்தை ஒரு விந்தையாகி நம்மை அந்த நேரத்திலும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

விஜய் ஆண்டனியின் தொடர் விசாரணைகளில் லைலாவின் வாழ்க்கைக் கதையும், அவளை சுற்றியிருப்பவர்களின் கதைகளும் ஒவ்வொன்றாக வெளிப்படும் புத்திசாலித்தனமான திரைக்கதையும் ஆச்சரியத்தைத் தருகிறது.

தமிழக ரசிகர்களின் ஹாலிவுட் படங்களின் தாக்கம் கமர்ஷியல் சண்டை காட்சிகள் அடங்கியவைகள் மீதுதான் இருக்கும். அந்த மாதிரியான படங்களில் நமது ரசிகர்களுக்கு வசனங்கள் முக்கியமில்லை. ஆனால் இந்தப் படம் வசனங்களால் நகரும் படம். இதிலிருக்கும் அதிகப்படியான ஆங்கில வசனங்கள் ஏ சென்டரில் இருப்பவர்களால்கூட புரிந்து கொள்ள முடியாதபடிக்கு உள்ளது. இது பி அண்ட் சி சென்டர்களில் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்ற பயமும் நமக்குள்ளது. இயக்குநர் இந்த ஒரு பிரச்சினையை மட்டும் முன்பே கருத்தில் கொண்டு வசனங்களை எழுதியிருக்கலாம்.

இதேபோல் படத்தில் விஜய் ஆண்டனியின் சொந்த வாழ்க்கைக் கதை இந்தப் படத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்தக் காட்சிகள் படத்துக்குத் தேவையில்லாமல் தனித்த  நிலையில் இருப்பது படத்திற்குக்  கூடுதல் சுமையாகத்தான் இருக்கிறது. இந்தத் திரைக்கதையை மாற்றியிருக்கலாம்.

மொத்தப் படமும் வித்தியாசமான திரைக்கதையில், நினைத்துப் பார்த்திராத ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டு, ஒரு ஆங்கில படம் பார்க்கும் உணர்வினை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படைப்பாற்றலுக்காகவே இந்தக் கொலை’ படம் நிச்சயமாக நமது ரசிகர்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமும்கூட..!

மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

RATING : 4.5 / 5

Our Score