full screen background image

“இந்தப் படம் என் குரு பாக்யராஜ் ஸாருக்கு சமர்ப்பணம்..” – சிஷ்யன் பார்த்திபனின் பேச்சு

“இந்தப் படம் என் குரு பாக்யராஜ் ஸாருக்கு சமர்ப்பணம்..” – சிஷ்யன் பார்த்திபனின் பேச்சு

இயக்குநர், நடிகர் என இரு முகங்களைக் கொண்ட பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பின்பு இயக்கியிருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

Reel Estate Company LLB மற்றும் Bioscope Film Framers என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளார். நடிகர் சிம்ரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

koditta-idangalai-nirappuga-poster

இசை – சத்யா, ஒளிப்பதிவு – அர்ஜூன் ஜெனா. பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன். இப்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து டப்பிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் இந்தப் படம் பற்றி நிறைய விஷயங்களை பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார் நடிகர் பார்த்திபன்.

அவர் பேசும்போது, “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. படமும் வெற்றி பெற்று, அந்த வெற்றியின் காரணமாக நிறைய தயாரிப்பாளர்கள் அந்த நேரத்தில் என்னைத் தேடி வந்தார்கள்.

வந்த எல்லோருமே முந்தைய படம் போலவே இன்னொரு காதல் கதையை எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னார்கள். மூன்று தயாரிப்பாளர்கள் முன் வந்து எனக்கு செக் கொடுத்தார்கள். ஒருவர் 3 கோடிக்கு செக் கொடுத்தார். இன்னொருவர் 1 கோடிக்கு செக் கொடுத்தார். ஆனால் அத்தனை செக்குகளுமே வங்கிக்குச் சென்று பணமில்லாமல் திரும்பிவிட்டன.

நானும் அவர்கள் சொன்னது போலவே கதையை தயார் செய்துவைத்துவிட்டு அவர்களுக்காக காத்திருந்தேன். ஆனால் அவர்கள்தான் வரவில்லை. எனக்கு நேரம்தான் வீணானது. இதனால் என்னை நம்பி என்னிடம் கதை என்ன என்றுகூட கேட்காமல் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் சிலரை பங்குதாரர்களாக கொண்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறேன்.

தயாரிப்பாளராகவே இருந்தாலும் யாராவது என்னிடம் ‘படத்தின் கதை என்ன?’ என்று கேட்டால் எனக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். சினிமா என்பது கதை சொல்லுதல் அல்ல. ஒரு விஷயத்தை இயக்குநர் மிக சுதந்திரமாக சிந்தித்து எடுத்திருப்பார். அது கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும். அப்படித்தான் இந்தச் சின்னப் படத்தையும் உருவாக்கியிருக்கிறேன்.

koditta-idangalai-nirappuga-stills-42

என் குரு பாக்யராஜ் ஸாருக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். என்ன செய்தால் அவருக்கு பிரதியுபகாரமாக இருக்கும்ன்னு யோசிச்சேன். அப்பத்தான் சாந்தனுவை நமது இயக்கத்தில் நடிக்க வைப்பது ஒன்றுதான் இப்போதைக்கு நம்ம குருவுக்கு செய்ற மிகப் பெரிய காணிக்கையா இருக்கும்னு எனக்கு தோணுச்சு.

அதனால சாந்தனுகிட்டதான் இந்தப் படம் பத்தி பேசினேன். முதல்ல நிறைய தடவை தினமும் மீட் பண்ணி கதை பத்தி பேசி டிஸ்கஸ் செஞ்சோம். கடைசியா முடியையெல்லாம் ட்ரீம் பண்ணி, தாடி வைச்சு ஒரு கெட்டப்பை சேஞ்ச் பண்ணி பார்த்துட்டு ஓகேன்னு முடிவு செஞ்சுதான் ஷூட்டுக்கு கிளம்பினோம்.

இப்போ இந்தப் படத்தை டப்பிங்ல பார்க்கும்போது நான் நினைச்சது நூற்றுக்கு நூறு சரின்னே எனக்கு தோணுது. இந்தக் கேரக்டர்ல சாந்தனுவை தவிர வேற யாரையும் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. பெண்களை கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு லவ்வர் பாய் கேரக்டர்ல சாந்தனு நடிச்சிருக்கார்.

koditta-idangalai-nirappuga-stills-6

சென்ற படத்திலும் சாந்தனு ஒரு கெஸ்ட் ரோல்ல நடிச்சார். அப்போ அதுக்கு டான்ஸ் அமைத்துக் கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர், சாந்தனுவை பத்தி என்கிட்ட சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார். ‘சாந்தனு நல்ல திறமையான நடிகரா இருக்காரே.. இவருக்கு ஏன் இன்னும் சரியான பிரேக் கிடைக்கலை. இந்நேரம் அவர் பெரிய நடிகரா வளர்ந்திருக்கணுமே..?’ன்னாரு. அப்பவே நானும் யோசித்தேன். அதைச் செயல்படுத்த என்னுடைய இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன்..

பிழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம். அந்தப் பிழை ஒரு காதலாக இருக்கலாம். அல்லது வாழ்க்கையாக இருக்கலாம். அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்பதை ரசிகர்கள்தான் அந்தக் கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும்.

நான் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தபோது என்னுடைய வாழ்க்கை கோடிட்ட இடங்களாகத்தான் இருந்தது. அந்தக் காலியான இடங்களை நிரப்பியவர் என் குருநாதர் கே.பாக்யராஜ் சார்தான். அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் நான் உருவாக்கிய திரைப்படம்தான் இந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம்.

koditta-idangalai-nirappuga-stills-18

முந்தைய படத்தில் இருந்த காதலை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தில் அதனை முழுமையான கதையாக உருவாக்கியிருக்கிறேன். படத்தில் இருப்பது ஒரு வரி கதைதான். ஆனால் அதை என்னால் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமான முறையில் தந்திருக்கிறேன்.

2 மணி நேரம் மட்டுமே ஓடக் கூடிய இந்தப் படம் காமெடி, ரொமான்ஸ், திகில், ஆக்சன் கலந்த திரைக்கதையில் உருவாகியிருக்கிறது. இந்தக் கதையில் சில தவறான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் தவறான கதையல்ல. அவர்கள் தவறானவர்களாக மாறுவதற்கு சரியான காரணங்கள் இருப்பது போன்று திரைக்கதையை அமைத்துள்ளேன்.

நிஜத்தில் நீங்கள் சந்தித்த, தினமும் நீங்கள் கேள்விப்படும் விஷயங்கள்தான் இதிலும் இருக்கின்றன. காதலில் நல்ல காதல், கள்ளக் காதல் என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாமே நல்ல காதல்தான். அப்படியொரு நல்ல காதலைச் சொல்லும் படம் இது.

koditta-idangalai-nirappuga-stills-44

படத்தை வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று வெளியிட உத்தேசித்துள்ளேன். இப்படியொரு விளம்பரத்தை வெளியிட்டவுடன் நிறைய விநியோகஸ்தர்கள் எனக்கு போன் செய்து, ‘என்ன ஸார் இப்படி விளம்பரம் போட்டிருக்கீங்க..? யார் உங்க படத்துக்கு விநியோகஸ்தர்?’ என்று கேட்டார்கள். ‘யாருமே இல்லை ஸார். இதுவரைக்கும் யாரும் வந்து வாங்கலை. அதனால்தான் நானே ரிலீஸ் செய்யலாம்னு போஸ்டர் அடிச்சிருக்கேன். நீங்க வாங்கிக்கிறதா இருந்தா வாங்கிக்குங்க’ என்றேன். யாருமே வாங்கலைன்னா நான்தானே ரிலீஸ் செய்யணும்..” என்றார் வெள்ளந்தி சிரிப்போடு..!!!

Our Score