full screen background image

கோ-2 – சினிமா விமர்சனம்

கோ-2 – சினிமா விமர்சனம்

அரசியல் அதிகாரம் எப்படி ஒரு நல்லவனை அதர்மப் பாதையில் நடக்க வைக்கிறது என்பதை ‘கோ’ திரைப்படம் சொன்னது. இதன் இரண்டாம் பாகமான இது அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி மதியால் வீழ்த்துவது என்பதைச் சொல்கிறது.

இந்த மாதிரி படத்தை எடுப்பதற்கு இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்களே இல்லை என்று நினைத்திருந்த நேரத்தில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இதோ நானிருக்கிறேன் என்று சொல்லி தைரியமாக துணிச்சலுடன் களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நமது முதற்கண் வாழ்த்துகளும், பாராட்டுக்களும், கூடவே கோடானு கோடி நன்றியும்தான்..!

தமிழகத்தின் முதலமைச்சரை கடத்தி வைத்து இதன் மூலமாக அவருடைய அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் உள்துறை அமைச்சராக இருக்கும் தில்லை நாயகத்தின் முகமூடியைக் கிழிப்பதுதான் படத்தின் கதை.. அவ்வளவுதான்.. மூன்று வரியில் சொல்லப்படும் அளவுக்கு சுருக்கமாகவே திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே முதல் அமைச்சரைக் கடத்திவிடுகிறார்கள். அதன் பின்னர் ஏன் கடத்தினேன் என்பதை கடத்தல்காரரான ஹீரோ பாபி சிம்ஹா ஒவ்வொரு சுவாரஸ்ய முடிச்சுக்களை வெளியில் சொல்லிக் கொண்டே வர.. படத்தின் சுவாரஸ்யமும் கூடிக் கொண்டே செல்கிறது.

முதல் பாதியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்.. என்ன செய்துவிட்டார் இந்த முதலமைச்சர் என்கிற கேள்வியையெல்லாம் பலமாக நமக்குள் தூண்டிவிட்டு பிற்பாதியில் இதற்கு நேர் எதிரான திரைக்கதையுடன் படம் படு வேகமாக பயணிக்கிறது. இறுதியில் இது போல நாமும் ஒரு நாளைக்குச் செய்தால்தான் என்ன என்று பார்வையாளனையும் தூண்டிவிட்டிருக்கிறது இந்தப் படம். இதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டம் போடும் அரசியல்வியாதிகளைத் தண்டிப்பதென்பது இந்த நாட்டில் முடியாத காரியமாக இருக்கிறது. இந்தத் தண்டிக்கும் வேலையையே இன்னொரு அரசியல்வியாதியே முனைந்து செய்தால்தான். ஊழல் அரசியல்வியாதி ஜெயிலுக்குப் போக முடிகிறது. நம் நாட்டில் இப்படியொரு சூழல் இருக்கும் நிலையில் சாதாரணமான காமன்மேன் என்னதான் செய்வான்..? அவனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு உதாரணக் கதையாகவும் இந்தப் படம் இருக்கிறது.

பாபி சிம்ஹாவுக்கு மிகப் பெரிய ரோல் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக திரையில் ஒலிக்கிறார். நடித்திருக்கிறார். படத்தில் பேசப்பட்டிருக்கும் பல அரசியல் வசனங்களை தைரியமாக முன் வந்து பேசியிருக்கும் பாபிக்கு நமது பாராட்டுக்கள். பழம் தின்னு கொட்டையையும் முழுங்கும் அளவுக்கு நடிப்பவர்கள்கூட இது போன்ற அரசியல் வசனங்களை தப்பித்தவறிக்கூட வெளியில் பேச மாட்டார்கள்.

ஆனால் இதில் செம்பரப்பாக்கம் ஏரி, வெள்ளம், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, ஏரிகளை தூர் வாராதது.. அணைகளை பரமாரிக்காதது.. தொலை நோக்கு பார்வையில்லாமல் திட்டங்களை கையாள்வது.. ஊழலையும், லஞ்சத்தையும் ஊக்குவிப்பது என்று பலவித அம்சங்களையும் பாபி சிம்ஹா மாநிலத்தின் முதலமைச்சரான பிரகாஷ்ராஜிடம் பளிச்சென்று கேட்கிறார்.

எதற்கெடுத்தாலும் இதுவொரு மிடில் கிளாஸ் மனோபாவம் என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளும் அரசியல்வியாதிகளால், பதிலே சொல்ல முடியாத பல விஷயங்களையும் இதில் பட்டியலிட்டிருக்கிறார் இயக்குநர்.

“1000 ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி புகைப்படத்தை நீக்கிவிட்டு ஒரு நோட்டை புதியதாக அச்சடித்துக் கொடுங்கள்..” என்பதில் இருக்கும் உள்ளர்த்தமே வேறு. இப்போதைய நிலைமையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து கருப்புப் பணத்தையும் ஒழிக்க ஒரே வழி.. இதுதான் என்கிறார் இயக்குநர். செய்யலாம்தான். ஆனால் அரசியல்வியாதிகள் விடுவார்களா..?

பேட்டா செருப்பிற்கு சொல்லும் விலை போலவே பல பொருட்களுக்கும் 50 பைசா.. 60 பைசாக்களை விலையாக வைத்து.. அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அடிக்கும் கொள்ளைப் பணமாக மாதம் 85000 கோடி ரூபாய் சேர்கிறது. அதனை மாநிலங்களுக்கு முறைப்படி கொடுத்தாலே மக்கள் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கலாமே என்கிறார் இயக்குநர். இதுவும் நல்ல யோசனைதான்.. ஆனால் செய்ய மனம் வேண்டுமே..?

பாபி சிம்ஹாவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சும் அதன் முடிச்சும் சுவாரஸ்யமானது. குமரன் என்னும் பாபி சிம்ஹா அனாதையாக வளர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டு நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு பத்திரிகையாளராகப் பணியில் சேர்கிறார். அங்கேதான் ஹீரோயின் நிக்கி கல்ரானியை பார்க்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

இந்த நேரத்தில்தான் பாபி சிம்ஹாவை சின்ன வயதில் இருந்தே ஹோமில் ஸ்பான்ஸர் செய்த ஒருவரைப் பற்றி அவருக்குத் தெரிய வர.. அவர் யாரென்று விசாரித்து தெரிந்து கொள்ள வருகிறார். வந்த இடத்தில் அந்தப் பெரியவர் குமாரசாமி என்னும் நாசர் காணாமல் போய் பல நாட்கள் ஆகிறதென்பது தெரிகிறது.

சென்ற முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உள்துறை அமைச்சர் தில்லை நாயகம் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனாலும் தனது பண பலத்தால் தான் ஜெயித்துவிட்டதாக அறிவிக்க வைத்து ஆட்சியிலும் பங்கேற்று அமைச்சரவையிலும் இடம் பிடித்துவிட்டார்.

இதை எதிர்த்து குமாரசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க.. இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க அமைச்சர் தில்லை நாயகம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அது பலனளிக்காமல் போக.. கடைசியில் குமாரசாமியை கொலை செய்திருக்கிறார். இதையறியாமல் தனது அப்பா திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையில் பிரிண்டிங் வேலை செய்து வரும் அவரது மகன் கருணாகரனையும் அமைச்சரின் ஆட்கள் கொலை செய்துவிட.. நீதி, நியாயம் கேட்டு வேறு வழியில் போராடும் சூழலுக்கு வருகிறார் பாபி. இந்தச் சூழலை மிக எளிமையான திரைக்கதையில் குழப்பமில்லாத திரை மொழியில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

பிரகாஷ்ராஜ் வழக்கம்போல நடிப்புக்கென்றே பிறந்தவர்போல நடித்திருக்கிறார். காமன்மேன்களை திட்டித் தீர்ப்பது.. தனது ஆட்சி, அதிகாரத்தைச் சொல்லி பயமுறுத்துவது.. உண்மை தெரிந்து அதையும் ஜீரணித்துக் கொள்வது.. கடைசியாக பாபியின் செயலில் இருக்கும் நீதியை உணர்ந்து அமைதியாக திரும்பிச் செல்வதுவரையிலும் ஒரு அக்மார்க் இந்தியாவில் எங்குமே கிடைக்காத ஒரு முதலமைச்சரை காட்டியிருக்கிறார்.  இப்படியொரு நல்ல முதலமைச்சரை இந்தியாவில் தேடித்தான் பார்க்க வேண்டும். இதுதான் இந்தப் படத்தில் இருக்கும் மிகப் பெரிய முரண்பாடு..!

நிக்கி கல்ரானி வழக்கம்போல் டூயட்டுகளுக்கும், காதலுக்கும், கொஞ்சம் கடமைக்குமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அசத்தல் நடிப்பைக் காட்டியிருப்பது பால சரவணன்தான். அவர் ஜான் விஜய்யிடம் முதலில் சொல்லும் கதையை அப்படியே நம்பிவிட்டோம். அந்த அளவுக்கு அழுத்தமாக தான் சொல்லும் பொய்யைக்கூட உண்மை போல புலப்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இதுவும் ஒரு சான்று.

நிஜத்தில் தமிழகத்தின் மு்ன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அப்படியே நியாபகப்படுத்துகிறார் உள்துறை அமைச்சர் தில்லை நாயகமாக நடித்திருக்கும் இளவரசு.

“இந்த சி.எம். போயிட்டா அடுத்த சி.எம். நான்தான் தெரியும்ல்ல..?” என்று டி.ஜி.பி.யிடம் உதார் விடுவதிலேயே தெரிந்துவிட்டது.. கூடுதலாக நெற்றியில் இருக்கும் வீபூதிப் பொட்டும், குங்குமப் பொட்டும் வேறு அடையாளம் காட்டுகிறது.

என்ன ஒரேயொரு வித்தியாசம்.. இளவரசுவைபோல படபடவென பேச மாட்டார் ஓ.பி.எஸ்., எண்ணி, எண்ணி அளவோடுதான் பேசுவார்.. பரவாயில்லை. அடுத்த முதலமைச்சர் ரேஸில் இவரும்தானே காத்திருக்கிறார்.

இவரது தம்பியும் பெரியகுளம் நகராட்சியின் தலைவருமான ராஜா, நாகமுத்து என்கிற பூசாரியின் தற்கொலைக்கு காரணம் என்கிற குற்றச்சாட்டில் சிக்கி போலீஸ், வழக்கு என்று இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரிந்ததே..

இதேபோல் மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை, கொலை என்று பல வழிகளில் இறந்து போயிருக்கிறார்கள். இதுவும் அந்த ஊழலில் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகளின் கைவண்ணம்தான்.. இப்படி இப்போது நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் அராஜகங்களை நினைவுபடுத்தும்விதமாகத்தான் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சங்கரபாண்டியனாக வரும் ஜான் விஜய்யின் கேரக்டர் மட்டுமே நம்பக் கூடியதாக இல்லை. ஒரு முதலமைச்சரையே கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது எத்தனை சீரியஸான விஷயம். இதை ஹேண்டில் செய்ய ஒரு காமெடியான ஸ்கெட்ச்சில் ஜான் விஜய் வலம் வருவதுதான் சற்று நெருடலான விஷயம். மற்றபடி போலீஸின் வழக்கமான பேச்சுக்கள்.. மிரட்டல்களை அசால்ட்டாக அவர் பேசுவது பிடிக்கத்தான் செய்கிறது..!

டூயட்டுகளை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாமல் இடையூறு செய்கின்றன. ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு. கலை இயக்குநரின் ஆடம்பரமில்லாத செட்டுகள் கண்ணைக் கவர்கின்றன.

பல லாஜிக் மிஸ்டேக்குகள் படத்தில் இருந்தாலும் இது போன்ற அரசியல் கதைகள் நம் கதைகளைத்தான் பேசுகின்றன என்பதால் அதையெல்லாம் பார்க்கத் தேவையில்லைதான்..!

கடைசியாக கடத்தியவர்களை தேடலாம் என்று இன்னொரு போலீஸ் அதிகாரி சொல்லும்போது “எதற்கு..?” என்று கேட்டு விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் ஜான். ஸோ.. இவரும் இதற்கு உடந்தையா என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. முதல்வரே தேவையில்லை என்றாலும் அது சட்டப்படி சரியாகுமா..? முறையாகுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா இயக்குநரே..?

அமைச்சர் இளவரசுவின் லீலைகளெல்லாம் தெரியாமல் முதல் அமைச்சர் இருந்திருப்பார் என்பதையும் நம்பத்தான் முடியவில்லை. அவருக்கும் இதில் மறைமுகமான பங்கிருக்குமே..? அதற்கு யார் பொறுப்பாவது என்பதையெல்லாம் இயக்குநர் இதில் சொல்லவில்லை. நாமளே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்..! அடுத்த முறை இதே முதலமைச்சரை நாம் கடத்தும்போது அதைப் பார்த்துக் கொள்வோம்..!

‘கோ-2’ தைரியமான ஒரு அரசியல் படம். மிஸ் பண்ணிராதீங்க. அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

Our Score