‘கோ’ படத்தின் இமாலாய வெற்றிக்கு பின்னணியில் இருந்த RS Infotainment pvt ltd., நிறுவனத்தினர் தங்களது அடுத்த படைப்பான ‘கோ-2’ படம் மூலம் தங்களது வெற்றியை தொடர உள்ளனர்.
‘கோ 2’ படம் வர்த்தக ரீதியாக ஏற்படுத்தி உள்ள பெரும் எதிர்பார்ப்பு, சமீபத்தில் நடந்த அந்தப் படத்தின் இசை முன்னோட்டத்தில் இளம் இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கம் மூலம் நிரூபணமாகி உள்ளது.
பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் நடிப்பில் புதிய இயக்குனர் சரத் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் இசை நாளை அக்டோபர் 1-ல் வெளியாகவுள்ளது.
தரமான படம், நிறைவான இசை என்ற மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இது பற்றி கூறுகையில், “கோ’ எங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயர் ஈட்டி தந்த திரைப்படமாகும். ‘கோ 2’ பெயரளவில் மட்டுமல்ல.. கதைக் களத்திலும் மட்டுமல்ல… இசை வடிவத்திலும்கூட ‘கோ’-வுக்கு இணையானது என்பதை இப்படத்தின் பாடல்கள் நிரூபிக்கும்.
இளம் இசை அமைப்பாளர் லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு என்று நிச்சயம் பெருமையாகக் கூறலாம். நாளை வெளியாகும் ‘கோ-2’ படத்தின் இசை, பாடல்களின் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் என்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. ஒரு திரைப்படம் பெரும் வெற்றி பெற இசையின் வெற்றிதான் பிரதானமாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் ‘கோ-2’ திரைப்படத்தின் இசை, இப்படத்தின் வெற்றிக்கும் நிச்சயம் உதவும்..” என்றார்.












