G.M.A. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ்.ஆர்., விநாயகா சுனில் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’.
இந்தப் படத்தில் பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா ஆகியோர் நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை – ஷிபின். ஒளிப்பதிவு – யஸ்வந்த் பாலாஜி.கே., படத் தொகுப்பு – அஸ்வந்த் ரவீந்திரன், இசை – சங்கர் ஷர்மா, ஒப்பனை – அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், சண்டை இயக்கம் – முகேஷ் ராஜா, இயக்கம் – ஷிஜின்லால் எஸ்.எஸ்.
‘கிராண்மா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்., தயாரிப்பாளர் ஆர்.ஜெயராஜ், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி, சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை சோனியா அகர்வால் பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ‘கிராண்மா’ என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கதைப்படி அவர்கள் அப்படி வைத்துள்ளார்கள்.
என்னுடன் இதே படத்தில் விமலா ராமன், சார்மிளா நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் சௌகரியமாக இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.
பிரபல கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்படி பெண் பாத்திரத்தை மையமாக வைத்த படங்களில் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அது ஒரு ரகம் இது ஒரு ரகம் அவ்வளவுதான். பிரபல கதாநாயகர்களுடன் நடிக்கும்போது நமக்கான பாத்திரத்தின் அளவு குறைவாக இருக்கும். இது மாதிரி பெண்ணைப் பிரதானப்படுத்தி உருவாகும் படங்களில் பாத்திரத்தின் அளவு பெரியதாக இருக்கும். நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்தப் படத்துக்காக இயக்குநர் சொன்ன கதையும் என் பாத்திரமும் பிடித்திருந்தது எனவே ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்தில் சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளேன். சண்டைக் காட்சியில் நடிப்பது அபாயகரமானதாச்சே என்றார்கள். சண்டைக் காட்சிகளில் நடிப்பது சவாலான ஒன்றுதான். ஆனால் இந்தப் படத்தில் சரியாகத் திட்டமிட்டு எடுத்ததால் எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை.
பொதுவாகப் பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். எல்லா பெண்களுக்குள்ளும் இன்னொரு சக்தி வாய்ந்த பெண் இருப்பாள். இது உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு பெண்ணும் சவால்களைக் கடந்து தான் மேலே வருகிறாள்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அப்படிச் செய்பவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கிறதுதானே? அப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் உடனே சுட்டுக் கொல்லணும் என்று தோன்றும். ஆனால் நாம் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது. சட்டம் அதைப் பார்த்துக் கொள்ளும்.
இந்த கிராண்மா படம் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும். இது திகில் படமா பேய்ப் படமா என்றெல்லாம் கேட்கிறார்கள். பேய் என்றால் அபாயகரமானது, பயங்கரமானது என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘பெண் என்பவள் பேயைவிட பயங்கரமானவள்’ என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் கருத்துதான் படத்தில் சொல்லப்படுகிறது…” என்றார் சோனியா அகர்வால்.









