full screen background image

கிடா – சினிமா விமர்சனம்

கிடா – சினிமா விமர்சனம்

ஷ்ரவந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவி கிஷோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பூ ராம், காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜூ, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ரவி கிஷோர், எழுத்து, இயக்கம் – ரா.வெங்கட், ஒளிப்பதிவு – எம்.ஜெயப்பிரகாஷ், இசை – தீசன், படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், பாடல்கள் – ஏகாதசி, கலை இயக்கம் – கே.பி.நந்து, சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், ஒலிப்பதிவு – தபஸ் நாயக், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ், சிவா(டீம் எய்ம்).

நிமிடத்திற்கு நிமிடம் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகத்தில் அத்திப்பூத்தாற்போலத்தான் நம் மனதைத் தொடும் காவியமான திரைப்படங்களும் வெளியாகும். அப்படி வந்திருக்கும் குறிஞ்சி மலர் போன்ற படம்தான் இந்தக் கிடா.

தீபாவளி பண்டிகையை தனது பேரனுக்காக கொண்டாட நினைக்கும் ஒரு ஏழை தாத்தாவின் கதைதான் இந்தப் படம். தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகத் துவங்கும் படம் தீபாவளியன்று முடிவடைகிறது!

ஏழை விவசாயியான பூ ராம், தனது 8 வயது பேரனுடனும், தனது மனைவியுடனும் ஊருக்கு ஒதுக்குப்புறமான குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய பேரனின் சக வயது தோழர்கள் அனைவரும் தீபாவளிக்கு துணி எடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இதனால் தனக்கும் தான் விரும்பும் வகையான ஒரு டிரெஸ்ஸை வாங்கித் தரும்படி கேட்கிறான் பேரன். அதன் விலை 2000 ரூபாய் என்பதை அறியும் தாத்தா பூ ராமு அந்தத் துணியை வாங்குவதற்கான பணத்தைப் புரட்ட அலைகிறார். பணம் கடனாகக்கூட கிடைக்கவில்லை.

கடைசியில் தனது பேரன் அன்பாக வளர்க்கும் ஆட்டையே விற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஆடு சாமிக்கு நேர்ந்து விட்டது என்பதால் அதை வாங்க உள்ளூர் வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.  ஆனால், வேறு வழியில்லை என்பதால் அந்த ஆட்டை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று பூ ராம் முயற்சிக்கிறார்.

அதே ஊரில் ஒரு இஸ்லாமியரின் கறிக் கடையில் வேலை பார்க்கும் காளி வெங்கட் மகா குடிகாரர். குடித்துவிட்டு தினமும் காலையில் லேட்டாகக் கடைக்கு செல்வதால் கோபமடையும் முதலாளியின் மகன் காளி வெங்கட்டுடன் சண்டையிட.. அந்தக் கடை வேலையும் காளி வெங்கட்டுக்கு பறி போகிறது.

நாளைக்கு தீபாவளியன்று அதே கடையின் எதிரிலேயே நானும் ஒரு கடை போட்டு ஜெயிச்சுக் காட்டுறேன் என்று சவால்விட்டுவிட்டு வருகிறார் காளி வெங்கட். உடனேயே 24 மணி நேரத்தில் கடையை அமைக்க யோசித்தவர், ஆட்டிற்காக அலையத் துவங்குகிறார்.

இதே நேரம் காளி வெங்கட்டின் மகனான பாண்டி தனது சொந்த அத்தை மகளான ஜோதியை தீவிரமாக காதலிக்கிறார். இந்தக் காதலுக்கு பெண்ணின் தந்தை எதிர்ப்பதால் அதே தீபாவளி தினத்தன்று ஊரைவிட்டு ஓடிப் போக முடிவு செய்கிறார்.

ஆடு தேடியலையும் காளி வெங்கட்டுக்கு யாருமே கடனில் ஆடு கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால் பூ ராமுவிடம் ஆடு இருக்கும் செய்தியறிந்து அவரை வந்து சந்தித்து ஆட்டினை கேட்கிறார் காளி வெங்கட். ராமுவும் தருவதற்கு சம்மதிக்க.. இன்னிக்கு சாயந்திரம் முழு பணத்தோட வந்து ஆட்டை ஓட்டிட்டு போறேன் என்று சொல்லிவிட்டுப் போகிறார் காளி வெங்கட்.

அன்றைய இரவு நெடுநேரமாகியும் காளி வெங்கட்டால் பணத்தைப் புரட்ட முடியவில்லை. கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து ஆட்டை கேட்போம் என்றெண்ணத்தில் காளி வெங்கட் ராமுவிடம் வந்து கேட்கும் நேரத்தில், ஆடு திருடர்கள் சிலர் வந்து அதே ஆட்டினை களவாடிச் செல்கிறார்கள்.

இப்போது ராமுவும், காளி வெங்கட், அவரது நண்பர், பேரன், காளி வெங்கட்டின் மகன் ஐந்து பேரும் ஆட்டோவில் அந்த ஆட்டை தேடி அலைகிறார்கள்.

விடிந்தால் தீபாவளி என்ற நிலையில், முதல் நாள் இரவு இவர்கள் ஊர், ஊராக ஆட்டைத் தேடி அலைகிறார்கள்.

கடைசியில் என்னவாகிறது.. ஆடு கிடைத்ததா.. அந்தப் பேரனுக்கு புத்தாடை வாங்கிவிட்டார்களா.. காளி வெங்கட்டின் சபதம் நிறைவேறியதா.. பாண்டியின் காதல் என்னவானது.. காதலி என்னவானாள்.. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்தக் கிடா படத்தின் திரைக்கதை.

தன்னுடைய இழப்பு தமிழ்த் திரையுலகத்துக்கு மிகப் பெரிய இழப்பு என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நடிகர் பூ ராம். தாய், தந்தை இல்லாத பேரன் என்பதால் செல்லமாக வளர்த்து வரும் அவனது தீபாவளி புத்தாடை ஆசையை நிறைவேற்ற அவர் படும் கஷ்டமும், துயரமும், அவமானமும்தான் படத்தில் நம்மை ஆழமாக நேசிக்க வைக்கிறது.

உறவினரான பணக்காரனிடம் கேவலமாக அவமானப்படுவதும், பேரனின் நண்பனின் அம்மா அவரது ஏழ்மையை எள்ளி நகையாடுவதை ஒரு சின்ன கோப புன்னகையோடு கடந்து போவதும்.. ஆட்டை விற்றே ஆக வேண்டும் என்று சொல்லி அதே பேரனை சமாளித்தாலும், ஆட்டின் மீது அவருக்குள்ள பாசத்தைக் காட்டுகின்ற இடத்திலும் தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார் பூ ராம்.

இன்னொரு பக்கம் வெள்ளைச்சாமியாக நடித்திருக்கும் காளி வெங்கட், தனது டிரேட் மார்க் நடிப்பின் மூலமாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்து, சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

கறிக்கடை வைக்க பணம் இல்லாமல் வாடிக்கையாளர்களிடமே பணம் வசூலித்து ஆடு வாங்க அவர் முயற்சிக்கும் காட்சிகள் புதிய வியாபார யுக்தியாக பாராட்டுக்குரியது. தனது மனைவியிடம் மிக இயல்பாக பேசுவதும், மகனுக்கும், அம்மாவுக்குமான மறைமுக பாசத்தைக் குத்திக்காட்டி பேசும்போது நெகிழவும் வைக்கிறார்.

பேரனாக நடித்திருக்கும் சிறுவன் கதிர் அப்படியே வெகு இயல்பாக தனது கேரக்டரே அதுதான் என்பதுபோல நடித்திருக்கிறார். தான் பெரிதும் நேசிக்கும் ஆட்டை விற்றுத்தான் புது டிரெஸ் வாங்க முடியும் என்ற பேச்சுவரும்போது எனக்கு ஆடுதான் வேணும் என்று சொல்லி மறுக்கும்போது மிகப் பெரிய கேரக்டராகவே உயர்ந்துவிட்டார்.

பூ ராமின் மனைவியாக நடித்திருக்கும் பாண்டியம்மா, ஏழை குடும்பங்களில் பெண்கள் எப்படி தங்களுடைய ஆளுமையைக் காண்பிக்கிறார்கள். குடும்பத்தை நகர்த்த எந்த வகையிலெல்லாம் உதவுகிறார்கள் என்பதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாய் திகழ்ந்துவிட்டார்.

காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் விஜயாவின் மிக இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் கவர்கிறது. காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் பாண்டி, பாண்டியின் காதலியாக நடித்திருக்கும் ஜோதி, மற்றும் திருடர்களாக நடித்திருக்கும் ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எந்தக் கதாப்பாத்திரமும் வீண் என்று சொல்லவே முடியாத அளவுக்கு திரைக்கதையில் தங்களது பங்களி்ப்பை செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு சிறப்புதான். அந்தக் கிராமத்தின் காலை நேர அழகு, பகல் நேர வெளிச்சம், இரவு நேர இருட்டு சூழ அமைந்திருக்கும் வீடுகள்.. ஆட்டை தேடும் காட்சிகளையும், குட்டி யானையைத் துரத்தும் காட்சிகளிலும் உயிரைக் கொடுத்துப் படம் பிடித்திருக்கிறார்.

தீசன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்புதான். கண்ணே நீ பாடலும், அலப்பறை கொடுப்போம் பாடலும் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறது.

மிக எளிய கதை என்றாலும் திரைக்கதையில் முன், பின் இருப்பதையும், தீபாவளிக்கு முதல் நாள் நடப்பதையும் தொகுத்திருப்பதில் படத் தொகுப்பாளரின் பங்களிப்பு சிறப்புதான். அந்த சேஸிங் காட்சியை தொகுத்தவிதம் நிச்சயம் பாராட்டுக்குரியது.

தீபாவளி நாள் பரபரப்புடன், புத்தாடை, பட்டாசுக்காகக் காத்திருக்கும் சிறுவனின் எதிர்பார்ப்பு, பேரனுக்காக என்ன செய்யப் போகிறோம் என்ற தாத்தா பூ ராமின் தவிப்பு, கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் ஊர் மக்களிடம் அவமானப்படப்  போகிறோமோ என்ற காளி வெங்கட்டின் பயம், காதலர்கள் தங்களது காதல் என்னவாகப் போகிறது என்று நினைத்து தவிக்கும் தவிப்பு.. ஊர்க்காரர்களின் தீபாவளி கறி என்னானது என்ற ஆவேசம்.. என்று அத்தனைவிதமான உணர்வுகளின் போராட்டத்தையும் மிக ஆழமாகப் படத்தில் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

காணாமல் போன ஆட்டை தேடி செல்வதுதான் கதைக் கரு என்று வைத்துக் கொண்டு அதைச் சுற்றி குடும்பச் சூழலையும், கிராமிய வாழ்வியலையும், சமூக நல்லிணக்கத்தையும், மதம் தாண்டிய நட்பையும், குடும்பம் மீறாத காதலையும் வைத்துக் கொண்டு இயக்குநர் ரா.வெங்கட் அமைத்திருக்கும் திரைக்கதை. இந்தப் படத்தை நாம் கடைசிவரையிலும் பார்த்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை உண்டு செய்துள்ளது.

ஆடு தேடலில்கூட சின்ன ரத்தத்தைக்கூட சிந்தவிடாமல் வன்முறையைத் துணை கொள்ளாமல், எல்லாம் நன்மைக்கே என்னும்விதமாக படத்தின் இறுதியில் அனைத்தையும் பாஸிட்டிவ்வாக முடித்திருப்பது இயக்குநரின் நல்லெண்ணத்தையே காட்டுகிறது. வாழ்க இயக்குநர்..!

கடைசியாக குடிப் பழக்கத்தை விட்டால் ஒழிய ஒருவன் தனது தொழிலில் முன்னேற முடியாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும்விதத்திற்காக இந்த இயக்குநருக்கு நமது அன்பான நன்றிகள் கோடி..!

இந்த வருடத்திய தீபாவளிக்கு இந்த ‘கிடா’தான் செமத்தியான விருந்து..!

ரேட்டிங் : 4 / 5

Our Score