கேரள மாநில தியேட்டர் அதிபர்கள் சங்கத்தை உடைத்தார் நடிகர் திலீப்..!

கேரள மாநில தியேட்டர் அதிபர்கள் சங்கத்தை உடைத்தார் நடிகர் திலீப்..!

கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்துள்ளது. மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் புதிய சங்கத்தில் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

கேரளாவில் படத்தைத் தியேட்டர்களில் திரையிடும்போது கிடைக்கும் பணத்தை ஷேர் செய்வதில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மூவருக்குள்ளும் பிரச்சினை வந்ததையடுத்து சென்ற மாதத்தில் இருந்து கேரளா முழுவதிலும் பல தியேட்டர்கள் மூடப்பட்டன.

cinema_theatres-1

இதுவரையிலும் இருந்த வந்த வசூலில் 60 சதவிகிதம் விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளருக்கும்.. மீதமிருக்கும் 40 சதவிகிதம் தியேட்டர்காரர்களுக்கும் என்றிருப்பதை மாற்றியமைத்து இனிமேல், இரு தரப்பினருக்கும் சரி சமமாக 50 சதவிகிதமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் இதனை கேரளா மாநில தயாரிப்பாளர் சங்கமும், கேரளா மாநில விநியோகஸ்தர் சங்கமும் ஏற்றுக் கொள்ளாததையடுத்து தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் புதிய மலையாளப் படங்களை வெளியிடுவதில்லை என்று கூறி தன்னிச்சையாக ஸ்டிரைக் அறிவித்தனர்.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்கார்ர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர்களது தியேட்டர்களில் இப்போது இதே 50 : 50 முறையில்தான் வசூல் பணம் ஷேர் செய்து கொள்ளப்படுகிறது. இதே முறையில்தான் மற்ற சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்காரர்களும் கேட்கிறார்கள். “அவர்களுக்கு ஒரு நீதி.. எங்களுக்கு ஒரு நீதியா..?” என்கிறார்கள் மற்றவர்கள்.

“மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூடுதல் செலவு இருப்பதால்தான் 10 சதவிகிதத் தொகையை விட்டுத் தருகிறோம்..” என்கிறார்கள் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும். ஆனால் இதனை மற்ற தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

இதையடுத்து 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் கேரளாவில் சென்ற மாதத்தில் இருந்தே புதிய படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் இருந்தன. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைத் தவிர மற்ற இடங்களில் இருக்கும் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இதனால்தான் இந்த மாதத் துவக்கத்தில் இருந்து விஜய்யின் ‘பைரவா’ உட்பட சில படங்கள் மட்டுமே அங்கு மிகக் குறைந்த தியேட்டர்களில் வெளியாகின.

cinema_theatres

கேரள அரசு இரு தரப்பினரையும் நேரில் அழைத்து பேச வைத்தும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. தியேட்டர் உரிமையாளர்களின் இந்தப் பிடிவாதத்தால் கேரளாவில் பல புதிய படங்கள் வெளியாகாமல் தேங்கி நின்றன.

இதனையடுத்து முன்னணி நடிகரான திலீப் கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் எந்தப் பலனும் கிடைக்காமல் போக.. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்களை இணைத்து புதிய சங்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் திலீப்.

காரணம் திலீப்பே சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கேரளாவில் நடத்தி வருகிறார். இவரும் ஒரு தியேட்டர் அதிபர் என்கிற முறையில் இந்தப் பிரச்சினையில் தீவிரமாகத் தலையிட்டுள்ளார்.

64 தியேட்டர் உரிமையாளர்கள் திலீப்பின் இந்த புதிய சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். மேலும் கார்னிவல், சென்ட்ரல் பிக்சர்ஸ், ஆசீர்வாதம் பிக்சர்ஸ், ஷெனாய் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கார்ர்களும் இந்தச் சங்கத்தில் விரைவில் இணையவுள்ளார்களாம்.

The Film Exhibitors United Organisation of Kerala(FEUOK) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய சங்கத்திற்கு மலையாள தொழிலாளர் சங்கமான ‘பெப்கா’வும், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வும் ஆதரவளிக்க முன் வந்துள்ளன. இந்த புதிய சங்கத்தை துவக்கும் முடிவை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டியிடம் கலந்தாலோசித்துவிட்டே துவக்கியுள்ளதாக திலீப் தெரிவித்துள்ளார்.

திலீப் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை உடைத்ததை அறிந்த பழைய சங்கத்தினர் உடனடியாக சங்கத்தின் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றதாக அறிவித்தனர். ஆனாலும் திலீபின் பின்னால் சென்றுள்ள பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் புதிய சங்கத்திலேயே தாங்கள் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்தப் புதிய சங்கத்திற்கு தலைவராக திலீப்பும் துணைத் தலைவர்களாக ஆண்டனி பெரும்பாவூர், கே.ஈ.இஜாஸ், ஜி.ஜார்ஜ் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எம்.சி.பாபி செயலாளராகவும், சுரேஷ் ஷெனாய் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய சங்கம் பற்றிப் பேசிய நடிகர் திலீப், “இந்தச் சங்கம் மலையாள சினிமா துறையின் நலனுக்காகவே துவக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுன் நாங்கள் இணக்கமாகப் பேசி எங்களுடைய பிரச்சினைகளை முடித்துக் கொள்வோம்..” என்று கூறியிருக்கிறார்.

Our Score