full screen background image

“சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?” – ‘கீ’ பட விழா மேடையில் வெடித்த கலவரம்..!

“சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?” – ‘கீ’ பட விழா மேடையில் வெடித்த கலவரம்..!

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் ‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் ஜீவா, நாயகி நிக்கி கல்ராணி மற்றும் படக் குழுவினருடன் ஏராளமான திரைக் கலைஞர்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நடிகை சுஹாசினி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கே.வி.ஆனந்த், ஜாக்குவார் தங்கம், கே.ராஜன், விஜய் சேதுபதி, பி.எல்.தேனப்பன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது “மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியாகி படுதோல்வியடைந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.

அந்த மனு மீது தயாரிப்பாளர் சங்கம் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதுவுமே செய்யாமல் சங்கத்தின் தலைவர் மட்டும் அனைத்து விழாக்களுக்கும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்…” என்று விஷாலை மேடையில் வைத்துக் கொண்டு நேருக்கு நேராக குற்றம் சாட்டி பேசினார்.

அப்போது திடீரென்று எழுந்த தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், தயாரிப்பாளருமான ‘வின்னர்’ ராமச்சந்திரன், தேனப்பனின் பேச்சை இடைமறித்தார்.

“நீங்க இதை சங்கத்துல வந்து கேக்கலாமே.. இங்க எதுக்கு தேவையில்லாமல் பேசுறீங்க..?” என்று எதிர்க் கேள்வி கேட்டார். தேனப்பனும் பதிலுக்கு மேடையிறி வந்து பதில் சொல்லும்படி அழைக்க.. ராமச்சந்திரன் பதில் சொல்வதற்காக மேடைக்கு வர… அதற்குள்ளாக எழுந்து வந்த தயாரிப்பாளர் கே.ராஜன், ராமச்சந்திரனை சமாதானப்படுத்தி மீண்டும் கீழே அனுப்பி வைத்தார்.

ஆனாலும் தேனப்பன் தொடர்ந்து “நானும் அதே நடிகரை வைத்து ‘வல்லவன்’ என்ற படத்தையெடுத்து மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த அனுபத்தினால்தான் சொல்கிறேன். சங்கத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல.. அதற்கு பிறகு இருவரும் இணைந்து ஒரு செல்பி போட்டோவை வெளியிட்டாரே.. அதுதான் எனக்கு கோபம்..” என்றார் ஆத்திரம் தீராமல்..!

இதைக் கேட்டு இன்னும் கோபமான ராமச்சந்திரன் கீழேயிருந்தபடியே தேனப்பனுடன் வாக்குவாதம் செய்யத் துவங்கினார். இப்போது ஜாக்குவார் தங்கமும் எழுந்து வந்து ராமச்சந்திரனை சமாதானம் செய்யத் துவங்கினார்.

நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தார் தலைவர் விஷால். விஷாலின் அருகே அமர்ந்திருந்த நடிகர் விஜய் சேதுபதி மிகுந்த கோபத்துடன் எழுந்து நின்று விஷாலிடம் ராமச்சந்திரனை சமாதானப்படுத்தும்படி கேட்டார். ஆனால் விஷால் அதற்கு பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

இதையடுத்து தேனப்பன் தன் பேச்சை முடித்துக் கொண்டு போக.. வின்னர் ராமச்சந்திரனும் அமைதியானார்.

இதன் பின்பு பேச வந்த விஜய் சேதுபதி நடந்த களேபரங்களை பார்த்து மனம் வெதும்பிப் போய் பேசினார். “இது தயாரிப்பாளர் சங்கமா இல்ல.. கமலா தியேட்டரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.. நமக்குள்ள ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். மனஸ்தாபங்கள் இருக்கும். அதையெல்லாம் இப்படி பொதுவில் போட்டு நாம் பேசக் கூடாது. தனியா அமர்ந்து நமக்குள்ளயே பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை இப்படி வெளியில் பேசினால் நம்மை யார் மதிப்பார்கள்..?

ஏற்கெனவே சினிமாக்காரங்களுக்கு மரியாதையே இல்லை. இங்க ஜெயித்தால்தான் மரியாதையும், பெருமையும். படம் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா அவ்ளோதான்.. பணம் சம்பாதிப்பது மட்டும்தான் முழு நேர தொழிலா போயிருச்சு. எதுவுமே செய்ய முடியலைன்னா வெறுமனே நக்கிட்டுப் போயிர வேண்டியதுதான்..” என்று அதிர்ச்சிகரமாகப் பேசினார்.

கடைசியாக பேச வந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், பிரச்சினையை சுட்டிக் காட்டி பேசும்போது, “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் சிம்பு தரப்பில் இருந்து இதுவரையிலும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. அதனால்தான் இந்த பிரச்சனையில் காலதாமதம் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்வது என்பது யோசனையாக இருக்கிறது..!

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் நிலைமையை அறிந்துதான், எனது ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 9-ல் இருந்து மீண்டும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளேன்.

மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில், ஒரு பைசாகூட வாங்காமல் நடிக்க தான் தயாராக இருக்கிறேன். அந்த படம் வெற்றி பெற்றால் அதன் பிறகு அவர் எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறாரோ அதை நான் பெற்றுக் கொள்கிறேன்…” என்று சமாதானம் சொன்னார் விஷால். 

“விஷால் பிரச்சினையை முடித்து வைத்து நஷ்ட ஈட்டை வாங்கித் தருவார் என்று பார்த்தால், ‘அதையெல்லாம் மறந்திருங்க.. அடுத்து என்னை வைத்து படமெடுங்க’ என்கிறாரே…!” என்று அரங்கம் முழுவதும் பேச்சு எழும்பியது.

பொதுவாக இது போன்ற நஷ்ட ஈடு கோரும் விவகாரங்களில் அந்த நபர் வழிக்கு வராவிட்டால், சம்பந்தப்பட்ட நபரை அடுத்து எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தனது சக தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தும்.

பின்பு பெப்சியிடம் பேசி ‘அந்த நபர் நடிக்கும் படத்திற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டாம்’ என்று சொல்வார்கள். ஆனால், இதனை எழுத்துப்பூர்வமாக செய்ய முடியாது என்பதால், வாய்மொழி வார்த்தையாகவே இது பகிரப்படும்.

இப்படி செய்தால் சம்பந்தப்பட்ட நபர் வழிக்கு வந்து பேச்சுவார்த்தைக்கு வருவார். பிரச்சினையும் தீரும். இதுதான் தமிழ்ச் சினிமாவில் காலம்காலமாக நடந்து வருகிறது.

ஆனால் சிம்பு விஷயத்தில் இதைச் செய்ய விஷால் தயங்குகிறார். இன்றைக்கு சிம்புவுக்கு ரெட் கார்டு போட்டால்… நாளைக்கு ஒரு படம் தோல்வியடைந்தால் மற்ற நடிகர்களிடம் இதேபோல் நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்று பல நடிகர்கள் விஷாலுக்கு அறிவுரை சொன்னதால்தான் விஷால், சிம்பு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்..!

நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து தவறு செய்யும் நடிகர்களைத் தட்டிக் கேட்க வேண்டிய விஷால், தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்பில் இருப்பதுதான் அவருக்கு இப்போது சிக்கலாகியிருக்கிறது.

இதைத்தான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போதே பலரும் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் அதையும் மீறி ஜெயித்துவிட்டார் விஷால். இப்போது அதன் பலனை விஷால் நன்றாகவே அறுவடை செய்கிறார்.

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள்தான் பாவம்.. மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்..!

Our Score