கோவை கவிஞர்கள் திருவிழாவில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் :
“இங்கு நான் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் உட்கார்ந்திருக்கும்போது முத்தமிழும் உட்கார்ந்திருப்பது போல தோன்றுகிறது. நான் பாரதிராஜாவின் முதல் படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தப் படத்துக்கு முதல் விமர்சனம் எழுதியதும் நான்தான்.. அந்தப் படத்தின் பெயர்..” என்று சொல்லி யோசிக்க.. தன் இருக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்த பாரதிராஜா, “இவர் ‘பதினாறு வயதினிலே’ படத்தை வாழ்த்தி எனக்கு எழுதிய கடிதத்தை இந்னமும் என் வீட்டின் பொக்கிஷ அறையில் வைத்திருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு பாலசந்தரின் காலில் விழுந்து வணங்கினார்.
மீண்டும் தொடர்ந்தார் பாலசந்தர். “இயக்குநர்களுக்கு ஆளுமைத் திறன் இருந்தால்தான் சிறந்த படங்களை உருவாக்க முடியும். அந்த ஆளுமைத் திறன் பாரதிராஜாவுக்கு இருந்ததை அவரது முதல் படத்திலேயே பார்த்தேன். பாரதிராஜாவின் படங்கள் வெற்றி பெறும்போதெல்லாம் எனக்கு பொறாமை ஏற்பட்டது. என்னை பாரதிராஜா முந்தி விடுவாரோ என்றுகூட நினைத்து பயந்ததுண்டு..
கண்ணதாசனுக்கு பின்பு நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் வைரமுத்து. எங்களது தயாரிப்பான ‘ரோஜா’ படத்தில இவர் பாடல் எழுதட்டும்னு மணிரத்னம்கிட்ட அழைச்சுட்டு போனேன். ‘இந்தப் படத்தில் வைரமுத்துவை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும்’ என்று நான் சொல்ல முதல்ல தயங்கினார் மணிரத்னம். ‘வைரமுத்துவை இப்போது பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், பின்பு எப்போதும் உங்களால் பயன்படுத்த முடியாது’ என்றேன். அதற்குப் பின்னர்தான் சமாதானமானார் மணிரத்னம். இப்போ அவரோட எல்லா படத்துக்கும் இவர்தான் பாட்டு எழுதறார்.
‘ரோஜா’ படத்தில் வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை பதிவு செய்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த எனக்கு கொடுத்தனுப்பினார் மணிரத்னம். என் வீட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து, வீடு திரும்பும்போது 40 முறை அந்த ‘சின்ன சின்ன ஆசை’யைக் கேட்டுக் கொண்டே வந்தேன். அந்தக் கேட்க வைத்தல் வைரமுத்துவின் வரிகளுக்கு மட்டுமே இருக்கிறது.. அந்தளவுக்கு எல்லோருக்கும் பிடிச்ச கவிஞர் வைரமுத்து.
பாரதிராஜவை போன்று மணிரத்னமும் தான் செய்யும் தொழிலில் அர்ப்பணிப்போடு செயல்படக்கூடியவர். சங்கத் தமிழ், கண்ணதாசன் தமிழ் வரிசையில் அடுத்தது வைரமுத்துவின் தமிழ் என்று கூறலாம். அவர் தமிழின் அடையாளம்.. சங்கத் தமிழும் சினிமா தமிழும் சேரும் புள்ளிதான் வைரமுத்து..” என்றார் பாலச்சந்தர்.