கவிஞர் தாமரை தனக்கு தொலைபேசி மூலம் மோசமான அழைப்புகள் வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவரே தனது முகநூலில் செய்தி வெளியிட்டுள்ளார்.
“நான் தற்சமயம் சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கடந்த சில மாதங்களாகவே எனக்கு மோசமான தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன.
நீண்ட பொறுமைக்குப் பிறகு இன்று வெளிப்படையாகப் புகார் கொடுப்பதென்று முடிவெடுத்தேன். தியாகு வீட்டை விட்டு ஓடிய பிறகு, நான் துணிந்து வெளியில் வந்து நியாயம் கேட்டுப் போராடியதன் பின்விளைவுதான் இது.
அதாவது சமூகத்தின் பார்வையில் நான் தனியாக இருக்கிறேன், என்னை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம் என்கிற வக்கிரமான மனநிலைதான்..! இப்படி என்னை அச்சுறுத்துவதன் மூலம் கணவர்களின் அக்கிரமங்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் அனைத்துப் பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவே கருதுகிறேன்.
இந்த வகை ஆபாச அச்சுறுத்தல்கள் எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நிலைகுலையச் செய்வது இயல்பே..! இப்படியான நிலை சமூகத்தில் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் வாய்மூடி மௌனிகளாய் இருக்கிறார்கள். என் புகாரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால், அது மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நினைத்தே புகார் கொடுக்கிறேன். (எனக்கும் என் மகனுக்கும் பாதுகாப்பு கொடுக்குமாறு காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்)..” என்று குறிப்பிட்டுள்ளார்.