full screen background image

கவிஞர்களுக்குள் ஒற்றுமையில்லை – கவிஞர் சினேகனின் வருத்தம்..!

கவிஞர்களுக்குள் ஒற்றுமையில்லை – கவிஞர் சினேகனின் வருத்தம்..!

தமிழ்ச் சினிமாவில் கவிஞர்களுக்குள் சண்டை என்பதே அபூர்வம். ஏனெனில் அவர்கள் அதிகமாக மக்களுக்குப் புரியும்படியாக சண்டையிட்டுக் கொள்வதே இல்லை. அவ்வப்போது எழுதும் பாடல்களில் மறைமுகமாக ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்கள். திட்டிக் கொள்வார்கள். தீட்டியும் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயே போட்டிகள், பொறாமைகள் நிறையவே உண்டு.

இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் சினேகன் இது குறித்தும் பேசி வருத்தப்பட்டார்.

“முன்பு கவியரசர் கண்ணதாசன் இருந்தார். வாலி ஐயா இருந்தாங்க. ஒரு பாடலுக்கு சிச்சுவேஷனை சொல்லி எழுதச் சொன்னா.. ‘இது நான் எழுதினா நல்லா வராது.. வாலிதான் பெஸ்ட்.. அவர்கிட்ட போங்க’ன்னு கண்ணதாசனே சொல்லி அனுப்பிருவாரு. வாலி.. இன்னொரு பாடலை ‘இந்தத் தத்துவமெல்லாம் கண்ணதாசனுக்கு மட்டுமே வரும். அவர்கிட்டயே போங்க’ என்று அன்பாகச் சொல்லி அனுப்பி வைப்பார்.

அந்த அளவுக்கு அன்றைய காலக்கட்டத்தில் கவிஞர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது.. ஈகோ இல்லை. ஆனால் இப்போது இருக்கின்ற கவிஞர்களுக்குள் ஒற்றுமையே இல்லை.. ஒரு படத்தில் ஒல்லா பாடல்களையும் நாமளே எழுத வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கு. இன்னொருத்தருக்கும் பாடல் எழுத வாய்ப்பு தருவோம் என்ற எண்ணமெல்லாம் சிலருக்கு வருவதில்லை. இதனால் பல கவிஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை 3 கவிஞர்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.. இது இன்னமும் தொடர வேண்டும்..!” என்றார்.

Our Score