full screen background image

கவிஞர் பா.விஜய் தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடிக்கும் பேய்ப் படம் ‘ஸ்ட்ராபெரி’

கவிஞர் பா.விஜய் தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடிக்கும் பேய்ப் படம் ‘ஸ்ட்ராபெரி’

‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ படங்களில் ஹீரோவாக நடித்து தன்னையும் ஒரு கதாநாயகனாக நிறுத்திக் கொண்ட கவிஞர், பாடலாசிரியர் பா.விஜய் தற்போது மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்போது இவரே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். கூடுதலாக இந்தப் படத்தை இவரே இயக்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ‘ஸ்ட்ராபெரி’ என்று இந்தப் படம் ஒரு விஞ்ஞான மனோதத்துவம் கலந்த பேய்ப் படம்.  

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவினா பார்த்தவி, அவனி மோடி என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும்  தம்பி ராமையா,  தேவயானி, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கத்தில் ஈடுபட்டது குறித்து பா விஜய் கூறுகையில், “ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ என்று இரண்டு படங்களில் நடித்த பிறகு, அடுத்து ஒரு வெற்றியைப் பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடிச்சாச்சு. இதைவிட்டுவிட்டு போகவும் மனசில்லை. மறுபடியும் நடித்தே தீர வேண்டும் என்று ஆசை வந்தது..

இந்தக் கதையை பலரிடமும் சொன்னேன். ஆனால் யாரும் தயாரிக்க முன் வராத்தால் வேறு வழியில்லாமல் நானே தயாரிப்பில் இறங்கிவிட்டேன். இயக்குநர், நடிகர் என்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதுதான் கஷ்டம். அதை இந்தப் படத்தில்தான் உணர்ந்தேன்.

இது பேய்ப் பட சீஸன். இந்த மாதிரி படங்களுக்குத்தான் இப்போது மக்கள் கூட்டம் ஓடி வருகிறது.  அதனால்தான் நானும் பேய் சம்பந்தமான கதையையே தயார் செய்தேன்.  

இந்தப் படத்தில் ஸ்ட்ராபெரி ஒரு முக்கியக் கேரக்டராக வருகிறது. அதனால்தான் படத்துக்கு அந்தப் பெயரை தலைப்பாக வைத்தோம்.  இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். பேய்கள் உண்டா இல்லையா என்பதைப் பற்றி ஆய்வு செய்யும் ஒருவரைச் சுற்றி நிகழும் கதை இது. முற்றிலும் திகில் கலந்த சிரிப்புக் கதை இது. நானும் நிறைய ஆய்வுகள் செய்துதான் இந்தக் கதையை உருவாக்கினேன்.

ஒரு கால் டாக்சி டிரைவர் எதிர்பாராதவிதமாக ஒரு பேயை சந்திக்கிறான். முன்பேயே அந்தப் பேயை சந்தித்த உணர்வு அவனுக்குள் இருக்கிறது. அந்தப் பேய் ஒரு நல்ல மனிதரை அநியாயமாக கொல்ல  முயல்கிறது. ஏன் அப்படி செய்கிறது..? அந்த பேயின் நியாயங்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை..

பேய் இருப்பதை நான் நம்புகிறேன். எனக்குள்ளும் ஒரு பேய் அனுபவமும் உள்ளது. நான் இத்தாலியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, யாரோ அறைக் கதவைத் தட்டினார்கள். திறந்ததும் வெளியே மங்கலாக ஒரு உருவம் நின்றிருந்தது. என்னிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டியது. வாங்கி வந்து வைத்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்களில், யாரோ என் மீது உட்கார்ந்து கொண்டு என்னை அமுக்குவதை போல உணர்ந்தேன். எனக்கு மூச்சு முட்டியது. உடனே திமிறிக் கொண்டு எழுந்து வெளியில் ஓடினேன். பக்கத்து அறைகளிலிருந்த நண்பர்களை எழுப்பிக் கேட்டால், அவர்களும் இதையேதான் சொன்னார்கள். இது பற்றி அங்குள்ள ஒரு ஆவியுலக நிபுணரிடம் கேட்டபோது ‘ஆவிகள் எதையோ நம்மிடம் கூற வரும்போது, இப்படி நடக்கும்’ என்றார். நான் அதை நம்பினேன்.

இந்தப் படத்தில் சுமார் நாற்பது நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன.  அந்தக் காட்சிகளை முதலில் வீடியோவில் படம் பிடித்து பின்பு அதவை வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை முடிவு செய்து மீண்டும் படமாக்கினோம். மொத்தப் படமும் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் எடுத்து இருக்கிறோம். படத்தின் ஒளிப்பதிவாளர் மாறவர்மன் உட்பட பல புதிய இளைஞர்கள் கூட்டணியுடன் களம் இறங்கி இருக்கிறேன். நிச்சயம்    ஜெயிப்பேன்    என்றே       நம்புகிறேன்..“ என்றார் பா. விஜய்.

படத்தின் இசையமைப்பாளர் தாஜ் நூருக்கு இது இரண்டாவது பேய்ப் படம். ”படத்தில் விஜய் எழுதி இருக்கும் ‘சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை. அதுல உடைஞ்சு போச்சு டியூஸ்டேயின் மண்டை‘ என்ற பாடல் ரொம்ப சிறப்பா வந்திருக்கு. படத்தின் ரீ-ரிக்கார்டிங்கை முடிக்க அறுபது நாட்கள் ஆனது..” என்றார் தாஜ் நூர்.

எத்தனையோ பேய்களை பார்த்துட்டோம். இதையும் பார்த்திருவோம்..!

Our Score