கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்திருக்கும் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனம், ‘தனி ஒருவன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக தயாரித்து வரும் படத்தை இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கி வருகிறார்.
விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, டி.ராஜேந்தர், வெள்ளித்திரையில் தனக்கே உரிய பிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார்.
மேலும், மடோனா செபாஸ்டின், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களிக்கின்றனர்.
‘காதலும் கடந்து போகும்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும் மடோனா செபாஸ்டியனும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. இளமை ததும்பும் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார் ‘ஹிப் ஹாப்’ தமிழா. அதிலும் குறிப்பாக டி.ராஜேந்தரும், ‘ஹிப் ஹாப்’ தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப் பாடல், இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும்.
கே.வி.ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்களான சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-அபிநந்தன் ராமானுஜம், வசனம் – சுபா, கபிலன் வைரமுத்து, படத் தொகுப்பு – ஆண்டனி, கலை – D.R.K. கிரண், நடனம் – பிருந்தா, ஷோபி, பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – திலிப் சுப்புராயன், ஆடை வடிவமைப்பு – சமீரா சனீஷ், ஒப்பனை – A.R.அப்துல், புகைப்படம் – மோதிலால், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயரிப்பு மேலாளர்கள் – S.R.லோகநாதன், D.சரவணக்குமார், நிர்வாகத் தயாரிப்பாளர் – S.M.வெங்கட் மாணிக்கம், தயாரிப்பாளர்கள் – கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்.
இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார். நேயர்கள் பெருமளவில் தங்கள் யூகங்களைக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு ஏ.ஜி.எஸ். நிறுவனமும், இயக்குநர் கே.வி. ஆனந்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக் கருவி, ‘கவண்’ என்று கருதப்படுகிறது.
இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட ‘கவண்’ பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன. ‘விசைவில் பொறி’(catapult), ‘கல்லெறி கருவி’(sling) என்று இலக்கியத்திலும், ‘உண்டிக்கோல்’ என்று வழங்கு தமிழிலும் ‘கவட்டை’ என்று பழக்கு தமிழிலும் அழைக்கப்படுகிறது இந்த ‘கவண்’.
‘மாற்றான்’, ‘அநேகன்’ படங்களை அடுத்து, கே.வி.ஆனந்த், ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு, இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அதில் படமாக்கப்பட்டுள்ளன.
தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து தற்போது நிறைவடையும் கட்டத்துக்கு வந்திருக்கிறது. வரும் நவம்பரில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.














