மூன்று தலைமுறையாக தாங்கள் பயன்படுத்தி வரும் கட்டில் ஒன்றை விற்க மனமின்றி தன் வீட்டோடு வைத்துக் கொள்ள நாயகன் போராடும் போராட்டமே இந்தக் “கட்டில்” திரைப்படம்.
இ.வி.கணேஷ்பாபு இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே, மம்மோ இருவரும் நடித்துள்ளனர்.
மேலும், இந்திரா செளந்தர்ராஜன், செம்மலர் அன்னம், கீதா கைலாசம், சம்பத்ராம், ‘காதல்’ கந்தாஸ், ‘மெட்டி ஒலி’ சாந்தி, மாஸ்டர் நிதிஷ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பிரபல எடிட்டரும், இயக்குநருமான லெனின் கதை, திரைக்கதை எழுதி எடிட்டிங்கும் செய்திருக்கிறார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
பாட்டன் காலத்தில் இருந்து தாங்கள் வசித்து வரும் பூர்வீக வீட்டை, வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்ட அவ்வீட்டின் இந்நாள் வாரிசுகள் விற்க முடிவு செய்கிறார்கள்.
அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு, அதேவீட்டில் அம்மா, மற்றும் தன் மனைவி மகனோடு வசித்து வருகிறான் நாயகன்.
அவனுக்கும் அவன் தாய்-க்கும் இந்த வீட்டை விற்பதில் உடன்பாடில்லை. இருப்பினும் நாயகனின் அண்ணன், அக்காள் என அனைவரும் வீட்டை விற்று வரும் பணத்தில் தங்கள் பங்கைப் பிரித்துக் கொண்டு தொழில் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால் நாயகனும் அவன் தாயும் வேறு வழியின்றி வீட்டை விற்க சம்மதிக்கிறார்கள்.
வீட்டை விலை பேச வந்தவர்கள் அவர்களின் பூர்விக கட்டிலைப் பார்த்துவிட்டு, அதற்கும் விலை பேச, நாயகனும் அவன் தாயும் பிடிவாதமாக அதை விற்க மறுத்து விடுகிறார்கள்.
வீடு விற்கப்படும் தேதிக்கு முன்னர் நாயகன் புதிய வீடு ஒன்றை வாங்கி தங்கள் பூர்விக கட்டிலை இடம் பெயர்த்து செல்ல முடிவு செய்கிறான்.
அப்படி அவன் நினைத்தது போல் வீடு பார்த்து கட்டிலை பத்திரமாக மாற்றிக் கொண்டு போனானா..? அதில் எத்தனை சிக்கல்கள் வந்தன..? என்பதை விவரிக்கிறது இதன் திரைக்கதை.
கதையாகப் பார்க்கும்போது மிக எளிமையான கதைதான். அதை யதார்த்தமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
கதையின் மையமே அந்த கட்டிலும் கட்டில் மீது கதை மாந்தர்களுக்கு இருக்கும் பிணைப்பும்தான் என்னும்போது அது தொடர்பான காட்சிகள் பெரிதாக இல்லாததும், இருக்கும் ஓரிரு காட்சிகள் வலுவின்றி பலவீனமாக இருப்பதும் பெருங்குறை.
கட்டிலும் அதை புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலும்தான் மையக்கதை என்று நினைத்துக் கொண்டிருக்க, இடைச் செருகலாக வரும் செம்மலர் அன்னம் தொடர்பான கதையும், நாயகியாக வரும் சிருஷ்டி டாங்கேவின் முடிவும் மனதை கனக்கச் செய்யும் ஒரு வசீகரத் தன்மை கொண்ட சிறுகதையாக நெஞ்சை கணக்கச் செய்கிறது.
ஆனாலும் மையக் கதையோடு அதுவும் ஒட்டவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
அதுபோல் படத்தில் வரும் தொழிற் சங்கம் தொடர்பான போராட்டங்களும் தாமரை இலை நீராகத்தான் கடக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் கனேஷ்பாபு மூன்றுவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். அதில் கட்டிலைப் பாதுகாக்க ஒவ்வொருவரிடமும் கெஞ்சி கூத்தாடும் அப்பா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
சிருஷ்டி டாங்கேவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம். பூர்விக வீட்டைப் பிரியும் சோகத்தை கண்ணில் வைத்தபடி, அந்த வலி வெளியே தெரியாமல் கணவன், மாமியாருடன் வாழும் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறார்.
தொல்பொருட்களை வாங்கி ஒரு கலைக் கூடம் ஒன்றை திறக்க வேண்டும் என்கின்ற லட்சியத்துடன் வாழும் நபராக இந்திரா செளந்தர்ராஜன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.
பாட்டியாக நடித்திருக்கும் கீதா கைலாசம் தன் பிள்ளைகள் தங்கள் பூர்விக வீட்டை எவ்வளவு சொல்லியும் விற்கத் துணிந்துவிட்டார்களே என்கின்ற வலியை சுமக்கின்ற தாயாகவும், அந்த வலியை மறைத்து தன் பேரப் பிள்ளையோடு கொஞ்சி மகிழும் பாட்டியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கணேஷ்பாபுவின் சிறு வயது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் நிதிஷ் தன் குறுகுறுப்பான நடிப்பால் வசீகரிக்கிறார்.
கட்டிலைத் தேடிச் சென்று அதில் கால் மேல் கால் போட்டு தூங்கும் காட்சியில் குழந்தைக்கு அந்த கட்டில் மீதான பிரியம் அப்பட்டமாக புலனாகிறது. கெளரவ தோற்றத்தில் விதார்த் வந்து செல்கிறார்.
வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகுடன் மிளிர்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பெரிதாக வசீகரிக்கவில்லை என்றாலும் கூட, பின்னணி இசை கணம் சேர்க்கிறது. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை மனதை பிசைகிறது.
மாமேதை லெனின் அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.
மையக் கதையை விட கிளைக்கதையாக வரும் செம்மலர் அன்னம் கதாபாத்திரம் வீரியம் உள்ளதாக இருக்கிறது. மையக் கதையிலும் திரைக்கதையிலும் அது தொடர்பான காட்சிகளிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மேலும் கட்டிலை புது வீட்டிற்கு மாற்றுவதில் இருக்கும் சிக்கல்கள் இயல்பானதாக இல்லை.
75 இலட்ச ரூபாய் இருக்கும் பட்சத்தில் ஒரு வீட்டை வாங்கி அதில் கட்டில் நுழைவதுபோல் வாசலை இடித்துக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது, அது தொடர்பாகப் பேசாமல், கட்டிலை உள்ளே கொண்டு செல்ல வழியில்லாமல் அலைகிறான் நாயகன் என்று சொல்வது நம்பகத் தன்மையோடு இல்லை.
கதையின் முடிவு கனமானதாக இருந்தாலும், அது வலியத் திணிக்கப்பட்ட ஒரு முடிவாகத்தான் இருக்கிறது.
மேலும் மொத்த கதையாகப் பார்க்கும்போது, வாயும் வயிறுமாக இருக்கும் பெண்ணை வைத்துக் கொண்டு, வீட்டைக் காலி செய்ததால்தான் இது போன்ற அசம்பாவிதம் நடந்தது என்பதான கருவையே கதை முன் வைக்க வருகிறதோ என்கின்ற அச்சமும் தோன்றுகிறது.
மொத்தத்தில் இந்தக் “கட்டில்” திரைப்படம் ஒரு எளிமையான கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதை யதார்த்தமான முறையில் சொல்ல முற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த முயற்சி முழுமையாக கை கூடவில்லை என்றே சொல்ல வேண்டும்.
கட்டில் – ஆடுகிறது.
RATING 3 / 5