நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸாகவிருந்த ‘கத்துக்குட்டி’ திரைப்படம், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அன்வர் கபூரின் வழக்கினால் திரைக்கு வராமல் போனது.
தயாரிப்பாளர் அன்வர் கபூர், தனக்குத் தர வேண்டிய 1 கோடியே 30 லட்சம் ரூபாயை இன்னொரு தயாரிப்பாளரான ராம்குமார் கொடுக்கவில்லையென்றும். எனவே படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ‘கத்துக்குட்டி’ படத்தை வெளியிட 2 வாரங்கள் தடையுத்தரவு பிறப்பிதிருந்தது.
இதனால் கடந்த 1-ம் தேதி ‘புலி’யுடன் போட்டிட வந்திருக்க வேண்டிய ‘கத்துக்குடி’ படம் வராமல் முடங்கியது. இந்த நிலையில் ‘கத்துக்குட்டி’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.ராம்குமார் பட வெளியீட்டை சுட்டிக் காட்டி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.
இதன் பலனாக நீதியரசர் ரவிச்சந்திர பாபுவின் உத்தரவின்பேரில் 58 லட்சம் ரூபாயை நீதிமன்றப் பதிவாளர் பெயரில் தயாரிப்பாளர் ராம்குமார் கட்டினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர் ‘கத்துக்குட்டி’ படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ‘கத்துக்குட்டி’ திரைப்படம், வரும் அக்டோபர் 9-ம் தேதி தமிழகம் முழுக்க ரிலீஸாகிறது
கிராமியப் பதிவாகவும் காமெடி கொண்டாட்டமாகவும் திரைக்கு வரவிருக்கிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.









