சர்ச்சைக்குரிய ‘புலிப்பார்வை’ படம் தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், ‘கத்தி’ படம் படம் பற்றியும் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருந்தன.
நேற்று காலையில் இயக்குநர் சீமான் அளித்த பேட்டியில் “கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் மாறப் போகிறார். அந்த வகையில் அந்தப் படத்தின் பிரச்சினையும் தீரப் போகிறது…” என்று சொல்லியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் தொடர்ந்து விசாரித்தபோது இந்தச் செய்தி உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது..
‘கத்தி’ படத்தைப் பொறுத்தமட்டில் அதன் கதையோ, திரைக்கதையோ, வசனமோ, காட்சிகளோ தடையில்லை. அதன் தயாரிப்பாளர் மட்டுமே பிரச்சினை என்பதால் படத்தை வேறொரு தயாரிப்பாளரிடம் மாற்றிவிட்டால் யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் நினைத்திருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி நினைப்பதற்குக் காரணமாக அமைந்தது கடந்த 2 நாட்களாக ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ இரண்டு படங்களின் ரிலீஸுக்கும் தடை விதிக்கலாமா என்று தமிழக அரசு யோசித்து வருவதாக வெளியான தகவல்தான்..
‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின்போது தியேட்டர்களில் பிரச்சினை எழும் என்பதால்தான் படத்திற்கு மறைமுக தடை விதித்தோம் என்று உயர்நீதிமன்றத்தில் வெளிப்படையாகச் சொன்னது மாநில அரசு. அதுபோல் இப்போதும் நடந்தால் அதன் பின்பு ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்வது நடவாத காரியம் என்று யோசித்திருக்கிறார்கள். இதன் பின்புதான் தயாரிப்பாளரை மாற்றலாம் என்கிற முடிவுக்கு வந்தார்களாம்..
தற்போதைய தகவலின்படி ‘கத்தி’ படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது உண்மையானால் இது நிச்சயம் வரவேற்கத்தக்க முடிவு என்றே சொல்லலாம்..!