full screen background image

‘கத்தி’ கதை திருட்டு – மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..!

‘கத்தி’ கதை திருட்டு – மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..!

“எந்திரன் திரைப்படத்தின் வசூலையே முறியடித்துவிட்டது கத்தி..” என்று இணையத்தில் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆனால் அவருடைய பெருமை உண்மையாக வெளியில் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.. மீஞ்சூர் கோபி என்கிற ஒரு ஏழை எழுத்தாளர்-உதவி இயக்குநரின் சொந்த கற்பனையில் உதித்த கருவையும், திரைக்கதையும் திருடிக் கொண்டு தனது சொந்தக் கதை போல ‘எழுத்து’ என்று டைட்டிலில் போட்டு ‘கத்தி’யை உருவாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்..

ஏற்கெனவே இது குறித்து ‘கத்தி’ படத்தின் உண்மையான கதாசிரியரான எழுத்தாளர் மீஞ்சூர் கோபி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இது பற்றி ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அது தொடர்பான செய்தி இந்தப் பதிவில் உள்ளது.

அதில் சொல்லியிருந்தபடியே அட்வகேட் கமிஷனரான சங்கரிடம் கடைசிவரையிலும் முருகதாஸ் ‘கத்தி’ படத்தின் ஸ்கிரிப்ட்டின் காப்பியை கொடுக்கவே இல்லை.. ஆனால் இறுதியில் வழக்கு சில டெக்னிக்கல் காரணங்களினால் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் அந்தச் சமயத்தில் கோபிக்காக ஆஜரான வழக்கறிஞரின் தவறும் இருக்கிறதாம்.

முகநூலில் சிலர் கூறியதுபோல “இதற்காக எந்தவித சமரசமும் இன்றைய நிமிடம்வரையிலும் தான் செய்து கொள்ளவில்லை” என்று உறுதியாக மறுக்கிறார் எழுத்தாளர் கோபி.  மிக நீண்ட தேடுதலுக்கு பின்பு இன்றுதான் கோபியின் செல்போன் நம்பர் கிடைத்து, அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அது பற்றிய செய்திக்கு போகும் முன்பு ‘குமுதம்’ பத்திரிகையில் நீண்டகாலமாக செய்தியாளராகப் பணியாற்றியவரும், ‘நியூஸ் சைரன்’ பத்திரிகையில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய பா.ஏகலைவன் தனது முகநூல் பக்கத்தில் கோபி பற்றியும், இந்தப் படத்தின் கதை பற்றியும் எழுதியிருப்பதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்..

இது பத்திரிகையாளர் பா.ஏகலைவன் சொல்வது :

“சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். நான் ‘குமுத’த்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா மூலம் அறிமுகமானார் கோபி. அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. திரைப்படக் கதை மற்றும் இயக்கம் பற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கு வந்தாரானால் மணிக்கணக்கில் விவாதம் நீளும்.

அப்படித்தான் தண்ணீருக்கான அரசியல், பன்னாட்டு பெரு முதலாளிகளின் பங்கு என்ற விதத்தையும் விவரித்தார் – அவரது பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து. எப்படி என்றால் திரைக்கதையாகவே.

முற்போக்கு சிந்தனையோடு இப்படி மக்கள் பிரச்சனையை அணுகும்விதம் சினிமாவில் குறைவு. இப்படியான சந்திப்பின்போதுதான் ஒரு நாள் எனக்கும் அவருக்குமான ‘எடக்கு முடக்கான’ கதையும் நடந்தது.

‘காவிரி தண்ணீர் பிரச்சனை என்றால் தஞ்சை விவசாயி மட்டும்தானே போராடுறான். அங்கிருந்து கொஞ்சம் விவசாயிகள் சென்னை வந்து நம்ப கண்ணு முன்னதான் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு நடத்துறான். இதை சென்னைவாசிகள் வேடிக்கை பார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்று போகிறானே… ஏன்? தண்ணீர் கஷ்டம் பற்றி அவனுக்கு தெரியல. தெரியணும்னா என்ன செய்யணும்? வீராணம் குழாய உடைக்கணும். பூண்டி நீர்தேக்கத்தை முடக்கணும். அதுவும் விவசாயிகளே செய்யணும். நமக்கு சோறு போடுற விவசாயிகளோட கஷ்டம் அப்பதான் இந்த நகரவாசிகளுக்கு புரியும். ரெண்டு நாள்… இரண்டே இரண்டு நாள், குடிக்கவும் குடிநீர் இல்லாம தவிச்சானா, காவிரி நதி நீர் பிரச்சனையும், தஞ்சை விவசாயிகளோட போராட்டத்தையும் புரிஞ்சுக்குவான்… இல்ல?” என்று கோபி உணர்ச்சிவசப்பட்டு பேச, ‘அது தீவிரவாதமில்லையா..?’ என்று நான் கூற, ‘காவல் துறையை ஏவி மக்களை தாக்குவது என்ன, புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா..?’ என்று அவர் கேட்க, கடைசியில் கரடுமுரடாக முடிந்தது…

பிறகு ஒரு நாள் வந்தார். பிரபல(!) இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் இந்த கதையை பற்றி சொன்னதாக கூறினார்.

இன்னும் சில மாதம் கழித்து சந்தித்தபோது, ‘ஷாட் பை ஷாட்டாக முருகதாஸிடம் சொல்லி விவாதித்துள்ளேன். படத்தை அவர் தயாரிப்பதாகவும், நான் இயக்குவதாகவும் திட்டம்..’ என்றார். ‘மகிழ்ச்சி. உங்களது தீவிர உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும்..’ என்றேன்.

அடுத்த ஓரிரு மாதம் கழித்து சந்தித்தபோது, ‘தினமும் முருகதாஸிடம் கதை விவாதம் நடப்பதாக சொல்கிறீர். முன் பணம் ஏதாகிலும் கொடுத்தாரா? அல்லது செலவுக்கு ஏதேனும் தந்தாரா?’ என்றேன்.

நக்கலாக சிரித்துவிட்டு, ‘இந்த ஒன்றரை வருஷத்தில் நாலே நாலு இட்லி, ஒரு டீ… அவ்வளவுதான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூறு ரூபாய் மட்டும் கொடுத்தார். அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார்..’ என்றார் வேதனையோடு.

இப்படி ஒன்றரை வருடமாக சிரமப்பட்டு போய் கதை சொல்லி விவாதித்து முடிந்த படம்தான் இன்றைய ‘கத்தி’ திரைப்படம். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே ‘சொந்தமா யோசிச்சு’ எடுத்த படம்…!

போகட்டும். இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் நண்பர் கோபி. இவருடைய கதை ஸ்கிரிப்ட்டை, ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கு சொதப்பலானது. காரணம் வேற… ஆனால் நண்பர் கோபி நீதிமன்றத்தில் கதையை கொடுத்ததை போல தைரியமாக எதிர்த் தரப்பு கொடுக்கவில்லை. உதவாத காரணங்களைச் சொன்னது.

இப்போது படத்தை பார்த்துவிட்டு கோபி கதறுகிறார். ‘ஒவ்வொரு காட்சியும் நான் சொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனையில், ‘பூண்டி நீர்த்தேக்கத்தை முடக்கணும், வீராணம் குடிநீர் குழாயை மூடணும்’ என்று சொன்னதைகூட எடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமும் அப்படியே இருக்கு..’ என்கிறார். இப்போது புதிய வழக்கறிஞரை பிடித்து, மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்..” என்கிறார் பா.ஏகலைவன்.

பத்திரிகையாளர் பா.ஏகலைவனை போலவே எழுத்தாளர் கோபியை நன்கு அறிந்த முத்துகிருஷ்ணன் என்கிற எழுத்தாளரும் இது பற்றி தனது முகநூலில் எழுதியிருக்கிறார்.

இது முத்துகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது :

“இன்று தீபாவளி ரிலீஸ்’ கத்தி’யை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது அதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் ஸ்டேடஸ் போட்டு பலர் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,.

ஆனால் இந்த படத்தின் கதையை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது நண்பன் கோபியிடம் கேட்டிருக்கிறேன். அவன் இதற்கு வைத்திருந்த பெயர் ’மூத்த குடி’.

ஒன்றரை ஆண்டுகள் அவன் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற வண்ணம் இருந்தான். அவனுக்கு எல்லா உயரிய உபசரிப்புகளும் வழங்கப்பட்டது, இறுதி உபசரிப்பாக அவனது கதை களவாடப்பட்டுவிட்டது.

சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான். வாய்தா மேல் வாய்தா. அவனது கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தான். வழக்கம் போலவே பணம் பாதாளம்வரை பாய்ந்தது. சாதி படுக்கை அறைவரை பாய்ந்தது. மிச்ச மீதி எல்லாம் பாய வேண்டிய அளவுக்கு பாய்ந்தது.

இரு மாதங்கள் முன்பு நக்கீரன், ஜீ.வி.யில் கோபியின் கதை பெரும் செய்தியாக பிரசுரமானது. ஆனால் இன்று மொத்த உலகமும், வேறு ஏதேதோ கதைத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்… இது போல் ஓராயிரம் கோபிக்கள் சென்னையின் ஏதோ ஒரு மொட்டை மாடியில் இரவு உணவுக்கு வழி இல்லாமல் உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருப்பார்கள். அல்லது தங்களின் அடுத்த கதையை பற்றி சிந்தித்துக் கொண்டு நட்சத்திரங்களையும் வான வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருப்ப்பார்கள். உலகமே வழுத்தவர்கள் பக்கம் நின்றாலும்கூட எனது மனம் இவர்களின் பக்கமே நிற்க முயலுகிறது..” 

இப்படி தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்..!

இவர்கள் இருவரும் சொல்வதை பார்க்கும்போது ‘கத்தி’ படத்தின் கதை முழுக்க, முழுக்க மீஞ்சூர் கோபியின் உருவாக்கம் என்பது நமக்குத் தெரிகிறது..!

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கோபியை நாம் தொடர்பு கொண்டபோது, ‘கத்தி’ படத்தின் கதையை மனப்பாடமாக தொடர்ச்சியாக 2 நிமிடங்களில் சொல்லி முடித்தார். ஆச்சரியமாகத்தான் இருந்தது..

“எல்லாமே நான் சொன்னதுதான் ஸார்.. ஹீரோயிஸத்துக்காக சண்டை காட்சிகளையெல்லாம் சேர்த்து படமாக்கியிருக்காரு முருகதாஸ். தன்னுடைய கதைதான்னு அவர் உறுதியா இருந்தா, படத்தோட ஸ்கிரிப்ட்டை கோர்ட்ல ஒப்படைச்சிருக்கலாமே..? இன்னிக்குவரைக்கும் அவர் செய்யலையே..? ஏன்..? இப்போ உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன்.. இதற்கும் கால அவகாசம் கேட்டிருக்காங்க. நான் இந்த வழக்கை நிச்சயம் விடப் போவதில்லை..” என்கிறார் உறுதியாக..!

உண்மையிலேயே இது முருகதாஸின் கதை என்றால் அந்த ஸ்கிரிப்ட்டை முருகதாஸ் கோர்ட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதனைச் செய்ய மறுப்பதிலேயே இது திருடப்பட்ட கதை என்பது நமக்கு புரிகிறது..!

எழுத்தாளர் கோபி, இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் இல்லை என்பதால் அங்கே போக முடியவில்லை. இதற்கு முன்பு எந்தவொரு திரைப்படத்திலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டதில்லை என்பதால் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. ஆகவே அங்கேயும் இந்தக் கதையை பதிவு செய்ய முடியவி்ல்லையாம்.

ஆனால், “என்னுடைய வீட்டிற்கு நானே ரிஜிஸ்தர் போஸ்ட்டில் இந்தக் கதையை போஸ்ட் செய்து பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதைத்தான் இப்போது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன்…” என்கிறார் கோபி. இதுவொரு சிறந்த ஆதாரம்தான்..!

ஒரு திருடப்பட்ட கதையில், திருடப்பட்ட திரைக்கதையில் பல கோடிகளை சம்பளமாகப் பெற்று இயக்கிக் காண்பித்து.. படம் பல கோடியை வசூலித்துள்ளது என்று வெட்கமில்லாமல் வெளியில் சொல்லி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற திருட்டு இயக்குநர்களை இயக்குநர் சங்கம் என்ன செய்யப் போகிறது..?

கொசுறு நியூஸ் : கதை திருடப்பட்டது என்பதுபோலவே ‘கத்தி’ படத்தின் டைட்டிலும் திருடப்பட்டது என்று சொல்லி ரவி இன்பா என்ற துணை இயக்குநர் அதே நீதிமன்றத்தில் கத்தி படத்திற்கெதிராக வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு பற்றிய செய்தி இந்தப் பதிவில் உள்ளது. இந்த வழக்கும் என்ன ஆனது என்பது பற்றி விசாரித்தபோது இன்னுமொரு பெரிய அதிர்ச்சி நமக்குக் காத்திருந்தது. சத்தியமாக அதனை நாம் வெளியில் எழுத முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் நமக்கு பரிசாகக் கிடைக்கும். வழக்கை தொடர்ந்து நடத்த முடியாமல் மனுதாரர் ரவி இன்பாவே அந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டாராம்..!

ஒரு தனி மனிதனின்.. எதுவும் இல்லாத ஒருவனின் வழக்கை நீதிமன்றத்திலேயே விசாரிக்க வைக்க முடியவி்ல்லையென்றால் இங்கே நடப்பதெல்லாம் வல்லவன் வகுத்ததே நீதி என்பதாகத்தான் தெரிகிறது..!

பாவம் இவர்களை போன்ற அப்பாவிகள்..! திருடர்கள் வாழ்கிறார்கள்.. வாழ்வார்கள்.. இதுதான் இந்த புதிய யுகத்தின் வரம் போல..!

Our Score