full screen background image

கத்தி பட விவகாரம் – நடிகர் விஜய்க்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் எச்சரிக்கை..!

கத்தி பட விவகாரம் – நடிகர் விஜய்க்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் எச்சரிக்கை..!

‘கத்தி’ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழக மாணவர் இயக்கங்களுக்கு சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளதை திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கண்டித்துள்ளார்.  அதே நேரம் “உண்மையான தமிழனாக இருங்கள்” என்று நடிகர் விஜய்க்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

director-pugazhenthi

அவருடைய அறிக்கை இது :

செஞ்சோலையில் அப்பாவி ஈழத் தமிழ்க் குழந்தைகள் 63 பேரை இலங்கைப் பே’ய’ரசு விமானத்திலிருந்து குண்டு வீசிக் கொன்ற ஆகஸ்ட் 14-ம் நாளில் கனத்த மனத்துடன் இந்த செய்தி அறிக்கையை எழுதுகிறேன்.

இன்று – ஆகஸ்ட் 14-ம் நாள் உலகெங்குமுள்ள 10 கோடி தமிழர்களின் இதயம் அந்தக் குழந்தைகளின் ரத்தத்தால் நனைந்த நாள். இந்த நாளில், ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அந்த மழலைகளை நினைவுகூரும் விதத்தில், அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும், அவர்களின் நினைவாக வன்னி மண்ணில் விளக்கேற்றப்பட்ட நாளைய தினமும் ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றப்படவேண்டும் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பணிவோடு வேண்டுகிறேன்.

ஆண்டுகள் கடந்த பின்னும் இதயத்தை உறைய வைக்கும் அந்தச் சம்பவத்தை மறக்க இயலாமல் நாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கண்ணீரில் நம்முடன் இரண்டறக் கலக்க வேண்டிய நண்பர்கள் சிலர், மனித மிருகம் ராஜபக்சேவின் நண்பர்கள் தயாரித்துள்ள ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்க்கலாமா – என்று கண்ணீர் மல்கக் கேட்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது.

செஞ்சோலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் குண்டு வீசிக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே விமானத்தில் மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவின் விருந்தினர்களாக விண்ணில் உலா வந்த லைகா மொபைல் நிறுவனத்தினர்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது எம் இனிய நண்பர்களுக்குத் தெரியுமா தெரியாதா..? அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் இருக்கிறார்களா?

‘கத்தி’ – என்கிற இந்தப் படத்தை எடுத்தவர்கள் தரப்பிலிருந்து, ‘தமிழர்களின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் நாங்கள் படமெடுப்போமா’ என்றெல்லாம் தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் நண்பர்கள் – ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளிகள் – ராஜபக்சே குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர்கள் – எடுக்கிற படம்தான் இது என்பது அம்பலமான பிறகு, ‘இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது’ என்கிற அடுத்த கேள்வியோடு அரங்குக்கு வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது.

எம் நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேரடியாக தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க முடியாது என்பதால்தான், லைகா மொபைல் – என்கிற தனக்கு நெருக்கமான சிநேகிதனின் முகமூடியுடன் தமிழ் சினிமாவில் கால் வைக்க முயல்கிறது ராஜபக்சே குடும்பம். இதைக் கூடவா நீங்கள் புரிந்து கொள்ளவில்லை?

இன்று நீங்கள் லைகா மொபைலை அனுமதித்தால், நாளை – மகிந்த ராஜபக்சேவும், கோதபாய ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும், நமல் ராஜபக்சேவும் தமிழ்த் திரையுலகில் தங்களுக்கு நம்பகமான நண்பர்களை வெவ்வேறு முகமூடிகளுடன் திணிப்பதை உங்களால் எப்படித் தடுக்க முடியும்…?

‘இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது’ என்கிற உங்களது கேள்வி, உங்களிடமே அப்போது எழுப்பப்படாதா..? உங்கள் வார்த்தைகளாலேயே உங்கள் வாய் அடைக்கப்படாதா..?

என் இனிய நண்பர்களே, எச்சரிக்கையாயிருங்கள்.

‘கத்தி’ – திரைப்படத்தின் கதை என்ன என்பதைக் குறித்து இங்கே எவரும் கேள்வி எழுப்பவேயில்லை. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வதைப் போல், இந்தியாவுக்கு வரும் ஆபத்தை தம்பி விஜய் எப்படித் தடுக்கிறார் – என்பதேகூட கதையாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இந்தியாவாலும் இலங்கையாலும் எம் ஈழ உறவுகளுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம்.

‘கத்தி’ திரைப்படத்தின் கதை என்ன? அதில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய குத்தாட்டம் இருக்கிறதா இல்லையா – என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி எழுப்பாமல், அது எவருடைய முதலீட்டில் எடுக்கப்படுகிறது என்றுதான் கேட்கிறார்கள் தமிழகத்தின் மாணவக் கண்மணிகள்.

‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அவர்களது கேள்வி. அந்த நியாயமான கேள்வியை எழுப்பும் எங்கள் மாணவத் தம்பிகளை மிரட்ட முயற்சிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம்.

ராஜபக்சேவின் பினாமிகளோ – என்கிற சந்தேகம் எழுகிற அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எடுக்கும் ஒரு படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் அந்த மாணவத் தம்பிகள் மீது ஒரு துரும்புபட்டால்கூட ‘கத்தி’ படத்துடன் தொடர்புடைய தம்பி விஜய் உள்பட அத்தனை பேரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று பணிவன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் ஒரு தெருப் பாடகன். எம் மக்களுக்காகத் திரைப்படம் எடுக்கிற எளிய கலைஞன். என்னுடைய அடுத்த திரைப்படம் முடிவடையும் நிலையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், என்னுடைய பட வெளியீட்டின்போது நான் இடைஞ்சல்களைச் சந்திக்க நேரலாம். அதற்காக அஞ்சி இதைப் பேசாதிருப்பது கோழைத்தனம் என்பதாலேயே இதைப் பேசுகிறேன். இப்போது பேசாமல் வேறெப்போது நான் இதைப் பேசமுடியும்?

என் இனிய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான்……..

செஞ்சோலையில் கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடியுங்கள்…….. அவர்கள் மீது குண்டு வீசிய விமானத்தில் உல்லாசப் பயணம் சென்றவர்களுக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்!

தம்பி விஜய்க்கும் ஒரு வேண்டுகோள்….

பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக் கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய இருப்பும் நம் இதயத்தில் ஏந்தியிருக்கிற நெருப்பும்தான் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும் நாளைய தினமும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்காக அன்புத் தம்பி விஜய் உணர்வோடும் உணர்ச்சியோடும் தன் இல்லத்தில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்..”

– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்..

Our Score