கத்தி பட சர்ச்சை – லைகா மொபைலை காப்பற்ற நினைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..!

கத்தி பட சர்ச்சை – லைகா மொபைலை காப்பற்ற நினைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..!

இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இலங்கையைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவனம், அங்கே இந்திய மொபைல் நிறுவனமான ஏர்டெல்லை செயலிழக்கச் செய்துவிட்டு வலுவாக காலூன்றியதாகும். இதற்கு அரசியல் ரீதியாக பெருமளவு உதவியவர்கள் ராஜபக்சே குடும்பத்தினர்.

இதற்குக் கைமாறாக ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு இந்த மொபைல் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளை வாரி வழங்கியிருப்பதாக 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலங்கை மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இப்போது ‘கத்தி’ படத்தை இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது என்றவுடன் ராஜபக்சே குடும்பத்துடன் தொடர்புடையவர் தயாரிக்கும் படத்தில் எப்படி விஜய் நடிக்கலாம்..? படம் ரிலீஸாகிவிடுமா..? பார்த்துவிடுவோமா..? என்றெல்லாம் சில தமிழ் அமைப்புகள் முண்டா தட்டிக் கொண்டிருக்கின்றன.

இப்போதுதான் ‘மான் கராத்தே’ வெற்றியோ, தோல்வியா என்ற சர்ச்சையில் இருந்து மீண்டெழுந்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இது அடுத்தத் தலைவலியைக் கொடுத்திருக்கிறது..!

இதனால் அவருடைய ஏற்பாட்டின்படி இன்று மாலை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தினசரி நாளிதழ் பத்திரிகையாளர்களை மட்டுமே சந்தித்த ஐங்கரன் நிறுவனத்தின் தலைவர் கருணாமூர்த்தி.. “கத்தி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தாலும், அதன் உரிமையாளர் ஒரு தமிழர்தான். அந்த நிறுவனம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல நல்ல விஷயங்களை, மக்களுக்கான நிவாரண உதவிகளை நிறைய செய்து வருகிறது.. எனவே இந்த விஷயத்தை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள்..” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கூடவே, லைகா மொபைல் நிறுவனம் பற்றி நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அதில் லைகா மொபைல் நிறுவனம் இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் செய்து வரும் சேவைகள் பற்றி விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

lycamobile-pressnote-2-a

lycamobile-pressnote-3

இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான்.. எப்போதும் சிரித்த முகத்துடன்.. இனிமையான பேச்சுடன்.. “எவ்ளோ பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் காலைல 6 இட்லிக்கு மேல சாப்பிட முடியாதே.. அப்புறம் எதுக்கு இப்படி கோடி, கோடியா சம்பாதிக்கணும்..?” என்றெல்லாம் பேசத் தெரிந்தவர். ஆனால் அவருடைய குணம், பணம் சம்பாதிப்பது என்பதைத் தவிர வேறில்லை..! இந்தப் படத்திற்காக லம்பமாக யார் தனக்குச் சம்பளம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே படம் இயக்க வேண்டும் என்று முன்பேயே முடிவெடுத்துவிட்டார்.

விஜய் கால்ஷீட் கொடுத்தது முருகதாஸுக்குத்தானே ஒழிய.. இப்போதைய தயாரிப்பாளர்கள் ஐங்கரன் மற்றும் லைகா மொபைல் நிறுவனத்துக்கோ அல்ல.. முருகதாஸ் தன்னுடைய சம்பளமான 15 கோடியை மறுபேச்சு இல்லாமல் கொடுக்கும் நிறுவனமே விஜய்யின் படத்தைத் தயாரிக்கும் என்று ஒரு கொள்கையில் இருந்ததால், லைகா மொபைல் நிறுவனம் முருகதாஸ் கேட்ட பணத்தை அலட்சியமாகத் தூக்கிக் கொடுத்து தயாரிப்பாளர் பதவியைக் கைப்பற்றிவிட்டது. ஐங்கரன் நிறுவனம் இதில் வெறும் சப்போர்ட்டிங் ஆக்டர்தான். முழு தயாரிப்பாளர் லைகா மொபைல்தான்..! 

இப்போது விஷயம் வெளிப்பட்டவுடன் முருகதாஸ்தான் பதட்டமாகியிருக்கிறார். எப்படியாவது படத்தை முடித்து, வெளியிட வேண்டும் என்கிற கட்டாயத்திலும் மாட்டிக் கொண்டுவிட்டார்.  இந்தப் படத்தை எடுத்து முடித்தாலும் வெளியிடுவது மிகச் சிரமம் என்றே தெரிகிறது.

இப்போதுதான் ‘இனம்’ படத்திற்கு தமிழகம் தவிர்த்த பிற நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர்கள் புறக்கணித்ததுடன் அடுத்து வரும் லிங்குசாமியின் அனைத்து படங்களையும் புறக்கணிப்போம் என்று எச்சரிக்கைவிட்ட பின்புதான் லிங்குசாமி பணிந்து வந்தார். அதேபோல் இந்தப் படத்துக்கும் புறக்கணிப்பு என்கிற வார்த்தைகள் ஈழத் தமிழர்களிடிருந்து வந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

ஒருவேளை, வேறு தயாரிப்பாளரிடம் படம் கை மாறினால் பிழைக்க வாய்ப்புண்டு. ஐங்கரனே உடன் இருந்தாலும்  விஜய் படமாகவே இது இருந்தாலும்.. வெளிநாட்டு உரிமை விற்பனையிலும், அங்கே தமிழர்களைத் திரட்டி படம் பார்க்க வைப்பதிலும் சிக்கல்தான்..

தமிழ்நாட்டில் பல துண்டுகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழர் அமைப்புகளும் இதனை சும்மாவிடாது.. இவர்களுக்கும் நடிகர் விஜய்க்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்.. ஒருத்தரை கூல் செய்தாலும், மற்றொருவர் படையெடுத்து வருவார்..

ஏற்கெனவே ஆளும்கட்சியுடன் கசப்புணர்வில் இருக்கும் விஜய்க்கு, இந்தப் படத்தின் ரிலீஸின்போது, ‘தலைவா’ பட ரிலீஸ் சமயத்தில் நடந்த காட்சிகள் மீண்டும் நடந்தால்.. என்ன ஆகும்..?

இன உணர்வை விற்க நினைத்தால் இதுதான் நடக்கும்..!

Our Score