ஒரு கதையின் ஆறு பகுதிகளைக் கொண்ட படம்தான் ‘கசடதபற’ திரைப்படம்..!

ஒரு கதையின் ஆறு பகுதிகளைக் கொண்ட படம்தான் ‘கசடதபற’ திரைப்படம்..!

தற்போது இயக்குநர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான ‘கசடதபற’, சமூக வலைத்தள பக்கங்கள், இணையத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் பிரபலமான விஷயமாக மாறியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சினிமா ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ‘கசடதபற’ படத்தின் ஒட்டு மொத்தக் குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

‘கசடதபற’ படத்தை ‘பிளாக் டிக்கட் கம்பெனி’ சார்பில் தயாரிப்பாளர் வி.ராஜலட்சுமி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி.எஸ்., பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகி 6 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி.ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் K.L., விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத் தொகுப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார் கலை  இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

‘கசடதபற’ படம் குறித்து இயக்குநர் சிம்பு தேவன் கூறும்போது, "இத்திரைப்படம் ‘ஆந்தாலஜி’ வகையைச் சார்ந்தில்லை. ‘ஆந்தாலஜி’ என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால், இந்த ‘கசடதபற’ திரைப்படம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு கதையைக் கொண்ட படம்.

இத்திரைப்படத்தில் திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது.

இது சம்பிரதாய அறிக்கையாகக்கூட தோன்றலாம், ஆனால் இதில் உள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைப் பார்க்கும்போது, அது நிரூபணம் ஆகிறது.

ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் என ஒவ்வொருவருமே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர்கள்.

கூடுதலாக, இவர்கள் யாருமே அவசர அவசரமாக எந்த படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை, நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கடுமையான முயற்சியை மேற்கொள்பவர்கள்.

படத்தின் தொழில் நுட்பக் குழுவை பற்றி சொல்வதென்றால், தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான அனைத்து கலைஞர்களும் இத்திரைப்படத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுடன் ஜிப்ரான் மற்றும் சாம் சி.எஸ். போன்ற தற்போதைய பரபரப்பான இசையமைப்பாளர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். இது ‘கசடதபற’ குழுவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்.

இந்தக் கதையையும், முயற்சியையும் நம்பி அதை செயல்படுத்துவதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்கள் வி.ராஜலட்சுமி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவிந்திரன் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும், தொடர்ந்து வரும் ஜுலையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.