இந்தப் படத்தை Yasho Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.Murali Krishnan தயாரித்துள்ளார்.
படத்தில் தினேஷ். ரேஷ்மா வெங்கடேஷ். மதுநிகா, மன்சூரலிகான். சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாஸ்கர் ஆறுமுகம், இசை – இன்பா, எழுத்து, இயக்கம் – எஸ்.முரளி கிரிஷ்.
இறந்து போன ஒரு காளையின் ஆவி, ஒரு கருப்பு பல்சர் பைக்கில் தொற்றிக் கொள்கிறதாம். இதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.
மன்சூர் அலிகான் தண்ணி கேன் போடும் தொழிலை செய்து வருகிறார். இப்பொழுது தொழிலை மேம்படுத்த மதுரைக்கு சென்று அவருக்கு நன்கு தெரிந்த வில்லன் அஜய் பிரின்ஸிடம் பணம் கடன் வாங்குகிறார்.
அவர் அங்கிருந்து கிளம்பும்போது தான் வைத்திருந்த கருப்பு பல்சர் பைக்கையும், உடன் வேலை பார்த்த ஒருவனையும்கூட அழைத்து போய் தொழிலை கற்றுக் கொடுக்கும்படி சொல்கிறார் வில்லன். இதனால் அந்த கருப்பு பல்சர் பைக்கை சென்னைக்கு கொண்டு வருகிறார் மன்சூர் அலிகான். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு மன்சூரலிகானுக்கு பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.
சென்னையில் மன்சூர் அலிகானிடம் வேலை பார்த்து பின் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக தண்ணி கேன் போடும் வேலையை செய்து வருகிறார் படத்தின் நாயகன் தினேஷ்.
தொழில் போட்டியால் தினேஷை கொலை செய்வதற்காக மன்சூர் அலிகான் ஆளெல்லாம் செட்டப் பண்ணி அனுப்பி வைத்தாலும், கொலை செய்ய வந்தவர்கள் காமெடியன்களாக இருந்ததால் அது நடக்கவில்லை.
இந்த நேரத்தில் தினேஷூக்கு ஆன்லைன் மேட்ரிமோனியல் மூலமாக ஒரு காதலி கிடைக்க.. அவரிடம் சும்மாவாச்சும் “பல்சர் பைக்கெல்லாம் வைச்சிருக்கேன்” என்று கதைவிட.. காதலியும் அதை நம்பி “அந்த பைக்கில் நாம் ஊர் சுத்தணும்” என்று சொல்ல… பல்சர் பைக்கை தேடி அலைகிறார் தினேஷ்.
தினேஷ், மன்சூரிடம் போய் ஒரு உதவி கேட்க… தன்னிடம் இருந்த அந்த கருப்பு பல்சர் பைக்கை தினேஷ் தலையில் கட்டுகிறார் மன்சூர் அலிகான். அந்த பைக்கை வாங்கிக் கொண்ட தினேஷ் தன்னுடைய காதலியுடன் அந்த பைக்கில் போகும்போது விபத்து ஏற்படுகிறது. அந்த பைக்கில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை தினேஷ் உணர்கிறார்.
இந்த நேரத்தில் வில்லன் அஜய் பிரின்ஸ், மீண்டும் அந்த பைக்கை எடுப்பதற்காக சென்னைக்கு வருகிறார். மன்சூரலிகானிடம் கேட்டுவிட்டு தினேஷிடம் வந்தவர் அவரைக் கொலை செய்ய முயல்கிறார்.
கடைசியில் என்ன ஆகிறது?.. அந்த பைக்கில் இருக்கும் மர்மம்தான் என்ன?.. தினேஷூக்கும் அந்த பைக்கிற்கும் இருக்கும் தொடர்புதான் என்ன?.. இதுதான் இந்த ‘கருப்பு பல்சர்’ படத்தின் திரைக்கதை.
படத்தின் நாயகன் தினேஷா, மன்சூர் அலிகானா என்று சந்தேகம் வருவது போல இந்தப் படத்தில் மன்சூரலிகான் நிறைய காட்சிகளில் நடித்திருக்கிறார். எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். வழக்கம்போல தன்னுடைய அடியாட்களை முட்டாளாக வைத்திருந்து அவர்களை அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவ்வப்பொழுது அவர் பல்பு வாங்கும் பொழுதெல்லாம் அவர் பேசுகின்ற பேச்சு நம்மை கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறது.
நகரத்தில் வாழும் தினேஷ், மற்றும் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் திறமை வாய்ந்த கிராமத்து வாலிபனாகவும் இரட்டை வேடத்தில் நடத்திருக்கிறார்.
தண்ணி கேன் போடும் வாலிபனாக நடித்திருக்கும் தினேஷ் என்ன மாதிரியான கேரக்டர் என்பதை இயக்குநர் தெளிவாகச் சொல்லவில்லை. அவர் தைரியமாக பேசுகிறாரா என்பதுகூட நமக்கு தெரியவில்லை. மேலும் தினேஷ் பேசுகின்ற பல வசனங்களை நம்மால் கேட்க முடியவில்லை. டப்பிங்கை அவ்வளவு சொதப்பல் செய்து வைத்திருக்கிறார்கள்.
அவருக்கு நண்பனாக வந்த பிரான்க் ஸ்டார் காமெடியாக பேசுகிறாரா… சீரியசாக பேசுகிறாரா.. என்பதைக்கூட நம்மால் உணர முடியவில்லை. இந்த அளவுக்குத்தான் இயக்கம் இருக்கிறது.
தண்ணி கேன் போடும் தினேஷின் காதலியாக நடித்த ரேஷ்மாவும் கிராமத்து தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் மதுனியாவும் தங்களால் முடிந்த அளவுக்கு நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள்.
படத்தில் குறிப்பிட்டுச் செல்லும்படியாக அமைந்திருப்பது ஜல்லிக்கட்டு காட்சிகள்தான். நிஜமாக நடந்த ஜல்லிக்கட்டையும் அதற்கு பிறகு தினேஷை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் மிக அழகாக படத்தின் தொகுப்பாளர் கட் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
அந்த கருப்பு பல்சர் பைக் எதனால் ஓடி வந்து முட்டுகிறது… பயணம் செய்தவர்களை கீழே தள்ளி விடுகிறது என்பதற்கான விளக்கத்தை இன்னமும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். அதிலும் ஒரு விதிவிலக்காக ஜோடியாக போனால்தான் பிரச்சனை செய்கிறது. தனி ஆளாக போனால் எதுவும் செய்வதில்லை என்பதையே கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாகத்தான் தினேஷ் கண்டுபிடிக்கிறார். இதுவும் நமக்கு கிடைத்த சோதனைதான்.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவில் பட்ஜெட் படம் என்பது தெளிவாக தெரிகிறது. ஓரளவுக்கு படத்தை பார்க்கத் தகுந்த வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டு காட்சிகளைத் தனியாக படமாக்கியிருக்கும் விதம் சிறப்பு.
இன்பாவின் இசையில் பாடல்களையும் தாண்டி பின்னணி இசை ரொம்பவே நம்மை சோதித்துவிட்டது.
பேய் கதை என்கின்ற வகையில் படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் வித்தியாசமாக ஒரு பைக்கில் பேய் புகுந்தால் எப்படி இருக்கும் என்பதை நமக்கு காட்டுவதற்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
ஆனால், அதிலும் பாதிதான் நமக்கு ஃபீலிங்கை கொடுத்திருக்கிறது. இன்னமும் கொஞ்சம் சிறப்பாக படத்தை எடுத்திருந்தால் வாழ்த்தி இருக்கலாம். ஆனால், இந்த பைக் ஸ்டார்ட்டே ஆகவில்லை என்பதுதான் உண்மை.
RATING : 2.5 / 5









