இந்த ஆண்டு சிறு பட்ஜெட், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியான படங்களில் கதையம்சம் உள்ள படங்களே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது ‘கறுப்பு பெட்டி’ திரைப்படம்.
இந்தக் கருப்புப் பெட்டி படத்தை ஜே.கே.பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சி.பி. மிதுன் சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாகவும், பரபரப்பான அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தேவிகா வேணு, நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அருண் இசையமைக்க, சிற்றரசு பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.மோசச் டேனியல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலசிவா படத் தொகுப்பு செய்துள்ளார். திவாகர் கலை இயக்குநராக பணியாற்ற ரவி ராஜா சண்டைக் காட்சிகளையும், மாஸ்டர் சக்ரவர்த்தி நடனக் காட்சிகளையும் வடிவமைத்து உள்ளனர்.
தரமான படைப்புகளை வழங்கிய மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் நீண்ட கால நண்பர் எஸ்.தாஸ், இப்படத்தை எழுதி, இயக்கி உள்ளார்.
‘கருப்புப் பெட்டி’ படம் குறித்து இயக்குநர் எஸ்.தாஸ் பேசும்போது, “மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் என்னுடைய ஆத்ம நண்பர். அவருடனான நட்பே சினிமாவையும் என்னையும் இணைத்தது. ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ தொடங்கி ‘லாபம்’ வரை அவரது அனைத்துப் படங்களிலும் உடன் பயணித்திருக்கிறேன். பிறகு அவரது உதவியாளர் கல்யாண் இயக்கிய ‘பூலோகம்’, ‘அகிலன்’ படங்களில் பணிபுரிந்தேன்.
அந்தப் படங்களின் வழியாக ஜெயம் ரவியின் நட்பு கிடைத்தது. அவருடைய சகோதரர் மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ படங்களில் பணி புரிந்தேன். இப்படி 30 ஆண்டுகள் நட்பின் வழியாக வரும் அழைப்புகளை ஏற்று, ஒரு படத்தின் முன் தயாரிப்பு, எழுத்து, இயக்கம், நிர்வாகத் தயாரிப்பு, பின் தயாரிப்பு என அனைத்துக் கலைப் பிரிவுகளிலும் பணிபுரிந்த அனுபவம்தான் எனது பலம். என்றாலும் எழுத்தும் இயக்கமுமே என களம்” என்றார்.
“கருப்புப் பெட்டி’ என்கிற தலைப்பு கதாபாத்திரங்களின் மனதைக் குறிப்பிடுகிறதா?” என்று கேட்டதற்கு, ” மிகச் சரி! கவியரசு கண்ணதாசன், ‘உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை; சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி’ என்று எழுதினார். ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் தூங்கிக் கிடக்கும் மீதிதான் இந்தப் படம். மனித மனம் அத்தனை எளிதாக ‘என்கோட்’ செய்ய முடியாத ‘கருப்புப் பெட்டி’ போன்றதுதான். அதனால்தான் அந்தத் தலைப்பை வைத்துள்ளோம்..” என்றார்.
படத்தின் கதை குறித்து சொல்லும்போது, “இந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு மாதச் சம்பளக்காரர். தானுண்டு தனது வேலையுண்டு என இருக்கும் பொறுப்பான குடும்பத் தலைவர். அவருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக, அவர் தூக்கத்தில் காணும் கனவுகளை எழுதி வைக்கும் ஒரு விநோதப் பழக்கம். நாயகனின் மனைவி வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு, குடும்பத் தலைவியாக இருப்பவர். அவருக்கு கணவனின் நடத்தைமேல் சந்தேகம் வருகிறது.
இந்தச் சமயத்தில் கணவனின் டைரி அவர் கையில் சிக்க, கணவர் ஒரு பெண் பித்தர் என நம்புகிறார். அதற்கு ஏற்ப தற்செயலாகப் பல சம்பவங்கள் நடக்கின்றன. அவை உண்மையா – இல்லையா என்கிற குழப்பம் இருந்தாலும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார். இறுதியில் இவர்கள் இருவரும் பிரிந்தார்களா, சேர்ந்தார்களா என்பது கதை. பார்வையாளர்கள் எளிதாக தங்களை ‘கனெக்ட்’ செய்துகொள்ளும் கதை. நாயகன் படும் அவஸ்தைகள்தான் திரைக்கதை” என்றார்.
“இந்தப் படத்துக்கு கே.சி.பிரபாத்தை நாயகனாக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்” என்று கேட்டதற்கு, “அவர் ‘பில்லா பாண்டி’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி கலக்கியவர். அதன் பிறகு முத்தையா இயக்கிய ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்திப் பாண்டி’ ஆகிய படங்களில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘அங்காரகன்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் கதைக்கு பொருத்தமாக இருந்தார். மலையாளத்திலிருந்து தேவிகா வேணுவை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்கிறோம். அனைவரும் விரும்பும் படமாக இந்த ‘கருப்புப் பெட்டி’ இருக்கும்” என்றார்.
வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கருப்பு பெட்டி’ படத்தை தென்னிந்தியா முழுவதும் கே.சி.பி. புரொடக்க்ஷன்ஸ் வெளியிடுகிறது.









