full screen background image

“ஊர் வாயை மூட முடியாது…” – விமர்சனங்கள் பற்றிய விஜய் சேதுபதியின் அனுபவப் பேச்சு

“ஊர் வாயை மூட முடியாது…” – விமர்சனங்கள் பற்றிய விஜய் சேதுபதியின் அனுபவப் பேச்சு

ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பீல் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள புதிய படம் ‘கருப்பன்’.

இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க தான்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.

‘ரேணிகுண்டா’ படத்தின் இயக்குநரான ஆர்.பன்னீர்செல்வம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

படம் பற்றி பேசிய இயக்குநர் டி.இமான், “இதற்கு முன்பேயே ஒரு படத்தில் பன்னீர்செல்வமும் நானும் இணைந்து வேலை செய்தோம். ஆனால், அது வெளிவரவில்லை. இப்போது கருப்பன்தான் வெளி வரப் போகிறது.

d-imaan

‘மக்கள் செல்வன்’ பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய்சேதுபதிதான். அவர் மற்றவர்களுடன் பழகும்விதமே நம்மை வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும்.

ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி, தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.

நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உடல் எடையை குறைத்து வருகிறேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை…” என்றார்.

a.m.rathnam-1

“படம் ஆரம்பிப்பதற்கு முன்பேயே விஜய் சேதுபதியை சந்தித்து ‘நீங்கள் இன்னும் பெரிய இடத்துக்கு போவீர்கள்’ என சொன்னேன். அதன் பிறகு இந்த வருடம் வெளியான விஜய் சேதுபதியின் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்.

சஸ்பென்ஸ், திரில்லர் மாதிரியில்லாமல் இதுவொரு லைவ்வான படம். விஜய் சேதுபதி உட்பட படத்தில் பங்கு கொண்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்..” என்றார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

படத்தின் இயக்குநரான ஆர்.பன்னீர்செல்வம் பேசுகையில், “நான் பஸ்ஸூக்காக காத்திருந்து, காத்திருந்து தளர்ந்து போன நேரத்தில், ஒரு எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.

pannerselvam 

நான் நிறைய நடிகர்களிடத்தில் இந்தக் கதையை சொல்ல முயற்சி செய்து வந்தேன். ஆனால் அவர்களிடத்தில் கதையைச் சொல்லக்கூட முடியவில்லை. சிலரை பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் விஜய் சேதுபதியை மிக எளிதாக சந்திக்க முடிந்தது. இது தெய்வாதீனமான செயல். இரண்டு படங்களை இயக்கியிருக்கும் எனக்கே இந்த நிலை என்றால், முதல் படம் இயக்க காத்திருக்கும் உதவி இயக்குநர்களின் நிலை ரொம்பவே கொடுமையானது.

இயக்குநர் சீனு ராமசாமி என்னை அழைத்து விஜய் சேதுபதியை சந்திக்க சொன்னார். விஜய் சேதுபதி இருக்கிற பிஸியில் கதை கேட்க முடியவில்லை. பின்பு பல பேரின் உதவியால்தான் பார்த்து பேச முடிந்தது. கதையைக் கேட்டவுடனேயே ஒத்துக் கொண்டார். விஜய் சேதுபதியின் மேனேஜர் ராஜேஷ், இயக்குநர் ரத்தினசிவா, தயாரிப்பாளர் காமன்மேன் கணேஷ், ஸ்ரீதர் என இந்த படம் எனக்கு அமைய காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தின்போது விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். தூங்கும்போதுகூட படம் பற்றிய சிந்தனையில்தான் இருப்பார். ஜல்லிக்கட்டுக்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பற்றி எதையும் படத்தில் பேசவில்லை…” என்றார்.

படத்தின் நாயகனான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, “ஒரு கமர்சியல் படத்தை எப்படி எடுத்து செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏ.எம்.ரத்னம். அவருடன் இந்தப் படத்தில் இணைந்ததில் எனக்கு சந்தோஷம்.

vijay sethupathy-1

நான் பழகியதில் இதுநாள்வரையிலும் ஒருவரை பற்றிக்கூட பன்னீர்செல்வம் என்னிடம் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர். அவர் இயக்கிய ‘ரேணிகுண்டா’ படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தைக்கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார். அதில் துளிகூட கவர்ச்சி இருக்காது. இந்த படத்தில்கூட ஒரு முதலிரவு பாடல் காட்சியை மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை. ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தபோது, நான் பாபி சிம்ஹாவிடம் பேசினேன். அவனும் என் நண்பன் என்பதால் கதையைக்கூட கேட்காமல் ‘நீ சொல்லிட்டீல்ல. நான் நடிக்கிறேன்..’ என்று பெருந்தன்மையாய் ஒத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தான். 

‘சங்குத்தேவன்’ படம் டிராப் ஆனதில் எனக்கு பெரும் வருத்தம்தான். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்செயலாக ‘சங்குத்தேவன்’ படத்திற்காக எந்த இடத்தில் செட் போட்டிருந்தனோ அதே இடத்தில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி  படம் பிடிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர்.

பொதுவாக என் கருத்தை எந்த இயக்குநரிடமும் நான்  திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும்.  அதனால் அவர்கள் இயக்குநரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது.

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும்தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது…” என அனுபவப்பூர்வமாக பேசினார் நாயகன் விஜய் சேதுபதி.

படத்தின் நாயகி தன்யா, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

Our Score