full screen background image

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் டிரெயிலரை நீதியரசர் சந்துரு வெளியிட்டார்!

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் டிரெயிலரை நீதியரசர் சந்துரு வெளியிட்டார்!

‘அழகி’, ‘பள்ளிக்கூடம்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய இயக்குநர் தங்கர் பச்சான், தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

ரியோட்டா மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீ. லெனின் படத் தொகுப்புடன் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. வைரமுத்து எழுதிய இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் திரை முன்னோட்டமான டிரைலரை இன்று நீதியரசர் சந்துரு அவர்களின் இல்லத்தில் வெளியிட்டு தங்கர் பச்சானை வாழ்த்தினார்.

நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ திரைப்படம் நீதியரசர் சந்துரு அவர்களின் புகழை, தமிழக மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டு காட்டியது.

ஒய்வு பெற்ற பின்னும்கூட தமிழக அரசு அமைத்த மூன்று ஆணையங்களில் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெறாமல் தனது சொந்த செலவிலேயே பணியாற்றி வருகிறார்.

அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூலகத்திற்கு 5000-க்கும் மேற்பட்ட சட்ட நுணுக்கங்கள் நிறைந்த புத்தகங்களையும், இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் அருங்கொடையாக வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவரைப் போன்ற ஒரு நேர்மையான நீதியரசரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இந்தப் படத்தின் டிரைலரை நீதியரசர் சந்துருவை கொண்டு வெளியிட்டால் வெகு பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் விரும்பினர்.

இதனை ஏற்றுக் கொண்டு நீதியரசர் சந்துரு அவர்கள் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

வரும் செப்டம்பர் 1-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score