‘கொம்பன்’ படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் மிக நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார் நடிகர் கார்த்தி..!
“கொம்பன்’ என்னை மனசுல வெச்சு எழுதின கதை. ஆட்டு வியாபாரி கொம்பையா பாண்டியனுக்கு பெத்த அம்மா எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு ஊரும் முக்கியம். ஊருக்குள்ள விஷேசமோ, பஞ்சாயத்தோ.. முதல் குரல் கொம்பனோடதுதான். ஊருக்கு ஒரு புள்ளை. ஊருக்கான புள்ளை அப்படி ஒரு கதை இது..!!
‘குட்டிப்புலி’ பபடம் இயக்கிய முத்தையாதான் ‘கொம்பன்’ இயக்குனர். அவர் ஸ்க்ரிப்ட் சொன்னப்பவே இராமநாதபுரத்துக்கும், மதுரைக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்குதானு ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா, சென்னையில் இருந்து பார்த்தா, தென் தமிழ்நாடு முழுக்க மதுரை மாதிரிதான் தெரியும் நமக்கு. ஆனா கலாச்சாரம், வட்டார வழக்குன்னு மதுரைக்கும் இராமநாதபுரத்துக்கும் ஊருபட்ட வித்தியாசங்கள் இருக்கு.
முக்கியமா படத்தில் ரொம்ப நல்லவனா நடிக்க வேண்டிய கேரக்டர். சரக்கு, சைட்டிஷ்னே நடிச்சுட்டு இருந்துட்டேன். ஆனா, இந்தப் படத்தில் அப்படி எந்த நெகடிவ் ஷேடும் இருக்காது. கிராமம், குடும்பம், உறவுக்குள் நடக்கும் விஷயங்கள், பங்காளிப் பகைனு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும்.
நிறையை அன்போடும் கொஞ்சம் அந்நியமாவும் இருக்கிற மாமனார்-மருமகன் உறவுதான் படத்தின் மெயின் கதை. பொதுவா மாமனார்-மருமகன் இடையிலான பாச, நேசம் தமிழ் சினிமாவில் பெருசா பேசப்பட்டது இல்லை. இத்தனைக்கும் அவங்க ரொம்ப பாசமா இருப்பாங்க. ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் அவங்களுக்குள்ள இருந்துக்கிட்டேயிருக்கும். அந்த அன்பையும், மரியாதையையும் ரொம்ப இயல்பா இதுல கொண்டு வந்திருக்கோம்.
சிலர்கிட்ட நல்ல கதை இருக்கும். ஆனா அதை அவங்க எப்படி எடுப்பாங்கன்னு நமக்குப் பயமா இருக்கும். முத்தையாகிட்ட நல்ல கதைகளும் இருக்கு.. அதை அச்சு அசலா அப்படியே பிரசன்ட்டும் பண்றார். அதுதான் இந்த சப்ஜெக்டின் பலம்.
அம்மா மட்டுமே வளர்த்த ஒரு பையன்.. அப்பா மட்டுமே வளர்த்த ஒரு பொண்ணு. இவங்களுக்கு கல்யாணம் ஆகுது. பொதுவா நம்மாளுங்க மாமனாருக்கு செம லந்து குடுப்போம்ல.. ‘என்ன உங்கப்பன் சாப்ட்டானா? மென்னு திங்க சிரமமா இருக்கும்… கறியை மிக்ஸில அடிச்சு வெச்சிருக்கலாம்ல..! வருஷத்துக்கு ஒரு தடவைதானே குளிப்பாங்க உங்க பரம்பரைல..!’ அப்படி இப்படினு கட்டையைக் குடுப்போம். பொண்ணுங்களும் அதைப் போய்க் கோபத்தோடு ரசிப்பாங்க.
அப்படிப் பேசிட்டு இருக்கும்போது மாமனாரே வந்து நின்னார்னா.. எப்படி இருக்கும்? தர்மசங்கடமும் அசட்டுச் சிரிப்புமா… நம்ம முகம் களைகட்டும்ல. இப்படித்தான் படம் முழுக்க எனக்கும் ராஜ்கிரண் சாருக்கும் இடையில் ரண்டக்க ரண்டக்கதான்.
நான்லாம் ‘என் ராசாவின் மனசிலே’ பார்த்துட்டு ராஜ்கிரண் நேரிலும் அப்படித்தான் இருப்பார்னு மிரண்டுட்டு இருந்தவன். இப்போ அவரே ஸ்பாட்ல என்னைப் பார்த்து, ‘உங்களுக்கு இந்தக் கிராமத்து கேரக்டர்லாம் நல்லா பொருந்துது தம்பி’னு சொல்றார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்னு ஒரு சினிமாவின் மொத்த டிராவலையும் புரிஞ்சு வெச்சிருக்கிறவர்கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள்… எனக்கு அவ்வளவு சந்தோசத்தை கொடுத்துச்சு..!!
படத்தில் லட்சுமி மேனனின் கேரக்டர் பெயர் பழநி. இந்த இடத்தில் ஒரு பார்வை பார்த்தாலே போதும்னு சொன்னா.. கரெக்டா புரிஞ்சிக்கிட்டு செம ஷார்ப்பா பண்ணிடுறாங்க. அவங்க இடத்தில் வேற யார் நடிச்சிருந்தாலும் இது சினிமான்னு ஞாபகம் வந்திருக்குமோன்னு தோணுது. அவ்வளவு நல்லா நடிச்சிருக்காங்க..” என்று வியக்கிறார் ‘கொம்பன்’ என்கிற கார்த்தி..!