full screen background image

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்திற்குக் கிடைத்த விருதுகள்..!

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்திற்குக் கிடைத்த விருதுகள்..!

தனது அனைத்து படங்களினாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவர் இயக்குநர் சீனு ராமசாமி. அவருடைய திரைப்படங்கள் அனைத்துமே யதார்த்தமான கதையும்,  கதாபாத்திரங்கள் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியவிதமும் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் சென்றன.

இது அவரை தமிழில் மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளிலும் சிறந்த இயக்குநராக பேசப்பட வைத்தது. இப்போது, அவரது சமீபத்திய படமான ‘கண்ணே கலைமானே’ இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, ‘பூ’ ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். 

kannea kalaimaanea-stills-1

2020-ம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழா’வின் 30-வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ இந்தக் ‘கண்ணே கலைமானே‘ திரைப்படம் வென்றிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்ட, தேசிய விருது இயக்குநரான சீனு ராமசாமி கூறும்போது, “இது நம் ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட உலகிற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதைவிட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி கடந்து திரைப்படங்களை நேசிக்கும் அனைவரையும் ஈர்க்கும்வகையிலான படைப்புகளைத்தான் நான் இதுவரையிலும் உருவாக்கியிருக்கிறேன்.

இது போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே என்னுடைய படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப் படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன.

ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் ஒரு சேர பெற்றிருப்பதை பார்க்கும்போது, எதிர்காலத்தில் இது போன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.

தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..!

Our Score