full screen background image

கண்ணகி – சினிமா விமர்சனம்

கண்ணகி – சினிமா விமர்சனம்

அறிமுக இயக்குநரான யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘கண்ணகி’.

இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பெண்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் யஸ்வந்த் கிஷோர் இயக்கி இருக்கிறார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

நான்கு பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

அம்மு அபிராமிக்கு நீண்ட நாட்களாக திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால் எதுவும் அமையவில்லை. காரணம் அவரது அம்மா மௌனிகா வருகின்ற வரனை எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அனுப்பிவிடுகிறார். அவரது அப்பா மயில்சாமி கம்யூனிஸ்ட்வாதி.

இன்னொரு புறம் வித்யா பிரதீப் திருமணமானவர். இவரது கணவர் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் இவருக்கு விவாகரத்து தர மனமில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

கீர்த்தி பாண்டியன் தனது காதலருடன் ஏற்பட்ட உறவால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இன்னமும் திருமணமாகாததால் இவரும் காதலரும் சேர்ந்து கருவை கலைக்க முடிவெடுத்து மருத்துவமனைக்கு செல்கின்றனர். 

ஷாலின் ஜோயா திருமணத்தில் நம்பிக்கை இல்லாதவர். தனது ஆண் நண்பருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இவர்களது வாழ்க்கையில் அடுத்து என்ன ஆனது என்பதே இந்தக் ‘கண்ணகி’ படத்தின் திரைக்கதை.

நான்கு பெண்கள் அவர்களின் நான்கு கதைகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திய கிளைமாக்ஸ்.

பெண்ணின் நான்கு படிவங்களை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர்.

முதல் பாதியில் அதற்கு நியாயம் சேர்த்துள்ளார். அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக அம்மு அபிராமியின் கதை ரசிக்க வைக்கிறது. அப்பாவாக வரும் மயில்சாமி அனுபவ நடிப்பால் மனதை கவர்கிறார். அம்மாவாக மௌனிகா இயல்பான நடிப்பு, பெண்ணை பெற்ற அம்மாக்களின் முகமாக திரையில் ரசிக்கவும் கோபமும் கொள்ள வைக்கிறார்.

கோதண்டம், வழக்கறிஞராக நடித்துள்ள வெற்றி உள்ளிட்ட அனைவரும் நடிப்பில் தங்களது வேலையை நன்றாக செய்துள்ளனர்.

இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.‌

அம்மு அபிராமி கதையில் வரும் கிளைமாக்ஸ் காட்சி உருக்கம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் நன்றாகவே உள்ளது. வசனங்களும் அருமை.

இருந்தாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்.‌

ஷான் ரகுமானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை நன்றாக உள்ளது. ராம்ஜியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசத்தை கொடுத்துள்ளது. திரையில் பார்க்க அழகாக தெரிகிறது. எடிட்டர் சரத்குமார் தனது கத்தரியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் பெண்களுக்கான படமாக வந்துள்ள இப்படம் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் ஆண்களுக்கான படமாகவும் மாறியிருக்கும்.

RATING : 3.5 / 5

Our Score