full screen background image

ரஜினியின் ‘லிங்கா’ பட ஷூட்டிங்கை நடத்த கர்நாடகாவில் எதிர்ப்பு..!

ரஜினியின் ‘லிங்கா’ பட ஷூட்டிங்கை நடத்த கர்நாடகாவில் எதிர்ப்பு..!

பாவம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடத்தினால் வரும் கூ்டடத்தைச் சமாளிக்கவே பட்டாலியன் போலீஸை வரவழைக்க வேண்டியிருக்கும் என்பதால் சமீப காலமாக தனது படங்களின் ஷூட்டிங்கை அயல் மாநிலங்களிலேயே நடத்தி வருகிறார்.

இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் மைசூரில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, ரஜினியின் பிறந்த மண் என்பதால் அங்கே ரசிகர்களால் எந்தப் பிரச்சினையும் வராது என்று நினைத்தால் இப்போது கன்னட வெறியர்களால் எதிர்ப்பே கிளம்பியுள்ளது.

‘கஸ்தூரி கர்நாடக ஜனபிரவேதிகே’ என்ற கன்னட அமைப்பினர் ,ரஜினி காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவி்தது கர்நாடகாவிற்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் எந்த இடத்திலும் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ராம்நகர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ரஜினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் அவரின் உருவ பொம்மையைக்கூட எரித்து தங்களுடைய எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இந்த அளவுக்கு மண்ணின் மைந்தர் ரஜினிக்கு எதிராக எதிர்ப்பைக் கொட்ட என்ன காரணம் என்பதற்கு பதில் சொல்கிறார் அந்த  அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா.

“தன்னை கன்னடராக சொல்லிக் கொள்ளும் ரஜினி, இதுவரை கர்நாடக மக்களுக்காக எதுவுமே செய்ததில்லை. அவர் எங்களுக்கு நன்மை செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை… காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவையும் ஆறு கோடி கன்னடர்களையும் கடுமையாக‌ தாக்கி பேசிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் காவிரி, ஒகேனேக்கல் விவகாரங்களின்போதெல்லாம் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அந்த மாநிலத்துக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படி கன்னட மக்களுக்கும் கர்நாடகாவிற்கும் எதிரான கொள்கையுடைய ரஜினியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியாவில் மட்டுமல்ல, கர்நாடகாவில் எங்கும் நடக்கக் கூடாது. மீறி நடத்தினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்…” என்கிறார் ரமேஷ்கவுடா.

இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மைசூரில் ‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. நேற்றுதான் நடிகை சோனாக்சி சின்ஹா இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாராம்.

இந்த எச்சரிக்கை பற்றி தெரிந்தும் அது பற்றி கவலையில்லை என்றே சொல்லியிருக்கிறது லிங்கா டீம். கர்நாடகாவில் ஷூட்டிங்கை நடத்தி முடிக்கும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

ஒரு இந்திய குடிமகனுக்கு இந்தியாவின் ஒரு பகுதியில் ஷூட்டிங் நடத்தக்கூட அனுமதியில்லையெனில் அப்புறம் இங்கே ‘இந்தியா’ என்ற அமைப்பு இருந்தென்ன..? இல்லாமல் இருந்தாலென்ன..?

Our Score