கன்னட சினிமாவின் மூத்த நடிகையான ஜெயந்தி காலமானார்

கன்னட சினிமாவின் மூத்த நடிகையான ஜெயந்தி காலமானார்

பழம் பெரும் கன்னட நடிகையான ஜெயந்தி உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயந்தி. பல மொழிகளில் நடித்திருந்தாலும் கன்னட சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் இவர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பிறந்த ஜெயந்தி, 1960-களில் தொடங்கி 1980-களின் இறுதிவரையிலும் கன்னட சினிமாவில் தன் நடிப்பால் கோலோச்சியவர்.

கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாருக்கு சரியான ஜோடி என்று அவரது ரசிகர்களால் போற்றப்பட்டவர் ஜெயந்திதான். ராஜ்குமாருடன்தான் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் ஜெயந்தி. அவர் மட்டுமில்லாமல் கன்னட சினிமாவின் அத்தனை ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த பெருமை ஜெயந்திக்கு உண்டு.

ஜெயந்தி. கன்னட சினிமா ரசிகர்களால் ‘அபிநய சாரதா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். சிறந்த நடிப்பிற்காக 6 முறை கர்நாடக மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். ‘மிஸ் லீலாவதி’ என்ற கன்னட படத்தில் சிறு வயது பெண்ணாக சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்றார்.

கன்னட சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான புட்டண்ணா கனகலின் பல புகழ் பெற்ற திரைப்படங்களில் ஜெயந்தி நடித்திருக்கிறார்.

ஜெயந்தி தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் முக்கியமானவை ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’, ‘புன்னகை.’ இந்த நான்கு படங்களுமே ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கியவை.

இவருடைய நடிப்பில் உருவான ‘இரு கோடுகள்’ படத்தில் இடம் பெற்ற ‘புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக’ என்ற பாடலும், ‘வெள்ளி விழா’ படத்தில் இடம் பெற்ற ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்ற பாடலும் இன்றும் சாகாவரம் பெற்ற பாடல்களாகத் திகழ்கின்றன.

வயதான பிறகு ஜெயந்தி பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில தொலைக்காட்சித் தொடர்களில்கூட நடித்துள்ளார்.

ஆஸ்துமா நோய் காரணமாக சமீப காலமாக நடிப்பில் இருந்து விலகியிருந்தார் ஜெயந்தி. இன்று காலை அவரது வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது.

அவரின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Our Score