full screen background image

“வீட்டுக்கு வராமல் போனால் காலை உடைப்பேன் என்றார் அம்பரீஷ்..” – கண் கலங்கிய ரஜினி..!

“வீட்டுக்கு வராமல் போனால் காலை உடைப்பேன் என்றார் அம்பரீஷ்..” – கண் கலங்கிய ரஜினி..!

நேற்று இரவு பெங்களூரில் காலமான நடிகர் அம்பரீஷுக்கு இன்று தென்னக திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

கன்னட படவுலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ். இவர்களில் முதல் இருவர் ஏற்கெனவே காலமாகிவிட்டதால் எஞ்சிய அம்பரீஷ் மட்டுமே பழமைக்கு எடுத்துக்காட்டான சூப்பர் ஸ்டாராக கன்னட திரையுலகத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

1972-ம் ஆண்டில் புகழ் பெற்ற இயக்குநரான புட்டண்ணா கனகல் இயக்கிய ‘நாகராஹாவு’ என்கிற கன்னடப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமாகி பின்பு வில்லன் வேடங்களை ஏற்று, ஒரு கட்டத்தில் நாயகனாக பரிமாணமடைந்து பின்பு கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக படிப்படியாக உயர்ந்தவர் அம்பரீஷ்.

ambareesh-sumalatha

அவருடைய மனைவி நடிகை சுமலதாவுடன் படங்களில் நடிக்கும்போது காதல்வயப்பட்டு 1991-ல் அவரை திருமணம் செய்து கொண்டார் அம்பரீஷ். இவர்களுக்கு அபிஷேக் என்றொரு மகன் உண்டு. இப்போது அவரும் கன்னட சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது 66 வயதான அம்பரீஷ் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மூன்று முறை மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மாண்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சராகவும், சீத்தாரமையாவின் மாநில அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

சமீப ஆண்டுகளாக உடல்நலக் குறைவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் அம்பரீஷ். 2 ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கப்பூர் மெளண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சென்று உடல்நலனை சீர்படுத்திவிட்டு திரும்பி வந்தார். வந்த பின்பு சமீப காலம்வரையிலும் தொடர்ச்சியாக படங்களிலும் நடித்து வந்தார் அம்பரீஷ்.

ambareesh-poster-1

இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம்  ‘Ambi Ning Vayassaytho’. இது தமிழில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இயக்கிய ‘பா.பாண்டி’ என்ற தமிழ்ப் படத்தின் கன்னட ரீமேக்காகும். இந்தப் படத்தில் தமிழில் ராஜ்கிரண்  நடித்த கேரக்டரில் அம்பரீஷ் கன்னடத்தில் நடித்திருந்தார்.

இப்போது ‘குருசேத்ரா’ என்ற மகாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படத்தில் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இத்திரைப்படம் இன்னமும் வெளிவரவில்லை.

ambareesh-2

இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாலை 7.30 மணிக்கு அவர் பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த வேளையில் திடீரென்று ஏற்பட்ட கடும் மாரடைப்பினால் இரவு 9.30 மணியளவில் அம்பரீஷ் உயிரிழந்தார்.

அவரது மரணச் செய்தியறிந்து மருத்துவமனையின் முன்பாக அவரது ரசிகர்கள் பெருமளவில் திரண்டார்கள். நள்ளிரவில் அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல் இன்று காலை 7.30 மணிக்கு பெங்களூர் கண்டரீவா மைதானத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது.

இன்று காலையில் இருந்து ஏராளமான பொதுமக்களும், அவரது ரசிகர்களும், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் அலை, அலையாய் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கன்னட திரையுலகின் ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து அம்பரீஷுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள்.

ambareesh-6

ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், சிவராஜ் ராஜ்குமார், புனீத் ராஜ்குமார், ராகவேந்தர் ராஜ்குமார், கிச்சா சுதீப், துனியா, தர்ஷன், உபேந்திரா, திக்நாத், நாயகிகள் ‘வசந்த காலப் பறவை’ ஷாலி, ‘இங்கேயும் ஒரு கங்கை’ தாரா, ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்த்தன், பிரியங்கா திரிவேதி, பிரேமா மற்றும் பல கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், ராதிகா, சுஹாசினி, அம்பிகா, வாணி கணபதி, பூனம் தில்லான், சிரஞ்சீவி, மோகன்பாபு, பிரகாஷ்ராஜ், அர்ஜூன் மற்றும் பல தென்னக நட்சத்திரங்களும் வந்திருந்து சுமலதாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.

ரஜினிகாந்த், மோகன்பாபு, சிரஞ்சீவி, ஆனந்த்நாக், அர்ஜூன், கிச்சா சுதீப், அம்பிகா ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதார்கள்.

மேலும் மாநில முதலமைச்சர் குமாரசாமி, அவரது தந்தையும் முன்னாள் இந்தியப் பிரதமருமான தேவேகவுடா, முன்னாள் முதலமைச்சர்கள் கிருஷ்ணா, சதானந்த கவுடா, சீதாராமையா, எடியூரப்பா மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Ambareesh-7

காலையில் வந்து அஞ்சலி செலுத்திய கையோடு 1 மணி நேரம் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பின்பு பத்திரிகையாளர்களிடம் அம்பரீஷ் பற்றி பேசும்போது, “அம்பரீஷ் நிச்சயமா இன்னொரு மனிதராக பிறவியெடுப்பார். ஆனால் அவர் நாம் விரும்பிய அம்பரீஷாக இருக்க மாட்டார். அது இயற்கை. அவரைப் போன்ற ஒரு மனிதரை, எளியவரை பார்க்கவே முடியாது.

நான் ஒவ்வொரு முறையும் பெங்களூர் வரும்போது எப்படியும் மதிய விருந்தினை அவருடன்தான் சாப்பிடுவேன். ஆனால் கடந்த வாரம் என்னுடைய உறவினர் திருமணத்திற்காக நான் வந்திருந்தபோது அவரைப் பார்க்க போக முடியவில்லை. அதற்காக அவருக்கு போனில் மன்னிப்பு கேட்டேன். அப்போது அவர் ‘அடுத்த முறை நீ வரலைன்னா உன் காலை ஒடிப்பேன்’ என்றார். இப்போது அவரே விடைபெற்றுவிட்டார்.. என்றும் அம்பரீஷ் என்னுடன் இருப்பார்..” என்று கண் கலங்கி சொன்னார்.

இதற்கிடையில் இன்று காலையில் இருந்தே நடிகர் அம்பரீஷின் சொந்த ஊரான மாண்டியா மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால், மாண்டியாவில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

Ambareesh-4

அம்பரீஷின் உடலை மாண்டியாவிற்கு எடுத்து வரக் கோரி அவரது ரசிகர்கள் மாண்டியமா மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாண்டியா பாராளுமன்றத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக அம்பரீஷ் சேவை செய்திருப்பதால் அவருடைய சொந்த மாவட்டம் என்பதாலும் அவரது ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணி அவரது உடல் இன்று மதியம் 3.30 மணியளவில் கண்டரவீரா மைதானத்தில் இருந்து மாண்டியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பெங்களூர், ஹிந்துஸ்தான் ஏரோநோட்டிக்ஸ் வளாகத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அம்பரீஷின் உடல் மாண்டியா நகரில் உள்ள விஸ்வேஸரய்யா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது அங்கே வைக்கப்பட்டிருக்கும் அம்பரீஷின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

நாளை காலைவரை விஸ்வேஸ்வரய்யா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பெங்களூரு கண்டீரவா மைதானத்துக்கு அம்பரீஷின் உடல் கொண்டு வரப்படுகிறது.

“நாளை காலை 11 மணி அளவில் நடிகர் ராஜ்குமாரின் சமாதி இருக்கும் இடத்தின் அருகேயே அம்பரீஷின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டு அங்கேயே அரசு சார்பில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்…” என்று கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Our Score