வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘கங்காரு’ படத்தை தயாரிப்பவர் சுரேஷ் காமாட்சி. ஏற்கெனவே ‘அமைதிப்படை’ பாகம் 2-ஐ தயாரித்த இவருக்கு இது 2-வது படம்.
“முதலில் படத்தின் பாடல்களைக் கேட்டேன். பிடித்திருந்தது. பிறகுதான் கதையையே கேட்டேன். பாடல்கள் கேட்காதிருந்தால் எடுத்திருப்பேனா என்று தெரியாது. சாமி, சமரசமில்லாமல் படம் எடுப்பவர். வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதியது எங்களுக்குப் பெரிய பலம். ‘கங்காரு’வைத் தொடர்ந்து 2 படங்களை தயாரிக்க உள்ளேன்…” என்கிறார்.
இசையமைப்பாளர் கிடைத்த கதையைச் சொல்கிறார் இயக்குநர் சாமி. ‘இந்தப் படத்துக்கு புது ‘இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த எண்ணி தேடியபோது ஒரு நண்பர் மூலமாக ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே பல இசை மெட்டுக்களை எனக்குப் போட்டுக் காட்டினார். எனக்குப் பிடித்திருக்க அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டோம்.
வைரமுத்து அவர்களை அணுக எனக்கு பயமாக இருந்தது. அவருக்கு சம்பளம் எப்படியோ என தயக்கம். ஸ்ரீநிவாஸ் மூலம்தான் அவரிடம் போனோம். எங்கள் பட்ஜெட் நிலையறிந்து எழுதிக் கொடுத்தார்.. தன் 5 பாடல்கள் மூலம் இந்தப் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார் வைரமுத்து. படத்தின் மீதும், என் மீதும் அக்கறையுடன் ஆலோசனைகள் கூறி வளர்ச்சிக்கு உதவி வருகிறார். இப்படத்தின்மீது மிகவும் ஆர்வமாக இருக்கிறார். பாடல்கள் வெற்றி பெற்று விட்டன. இத்திரைப்படத்தின் மூலமாக அவருக்கு இன்னொரு தேசிய விருது நிச்சயம்…” என்று பாராட்டுகிறார் இயக்குநர் சாமி.
எப்படிப்பட்ட படத்திலும் தன் முத்திரையைப் பதிப்பவர் வைரமுத்து. இப்படத்திலும் ஐந்து பாடல்களை பஞ்சரத்ன கீர்த்தனைகள் போல பிரமாதமாக எழுதியுள்ளார். காதல், பாசம், தத்துவம் என்று பலவித நிறங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார் வைரமுத்து.
“பேஞ்சாக்கா மழைத்துளியோ
மண்ணோடு – நான்
வாழ்ந்தாக்கா வாழுவது
ஒன்னோடு”
இந்தப் பாடல் காலர் ட்யூனில் கலக்குகிறது.
“கருவழியா வந்த எதுவும்
நிரந்தரமில்ல
கட்டையில போறவரையில்
சுதந்திரம் இல்ல
தாயும் கொஞ்ச காலம்
தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் – வந்த
உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சுப் பாத்தாக்கா
நீயும் கொஞ்ச காலம் – ஒன்
நெனப்பும் கொஞ்ச காலம்’
இந்தப் பாடல் தத்துவ முத்து.
‘ஒழக்கு நிலவே ஆராரோ
ஒனக்கு நானே தாயாரோ
அழுக்குத் தங்கமே ஆராரோ
எனக்கு நீதான் தாயாரோ
எட்டுவச்ச நெலவே கண்ணுறங்கு
கொட்டிவச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு
இந்தப் பாடல் பாசப் பூங்கொத்து.
இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ், வைரமுத்துவை நினைத்து உருகுகிறார். ”தமிழில் இசையமைப்பது என்றதும் வைரமுத்து அவர்களின் பாடல்கள்தான் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த பாடல்கள் வெற்றி பெற்றதற்கும் பேசப்படுவதற்கும் அவரது பாடல் வரிகள்தான் காரணம். அவர் என் முதல் தமிழ்ப் படத்துக்கு, வரிகளை மட்டுமல்ல; வாழ்த்து ஆசிகளையும் வழங்கியுள்ளார்…”என்கிறார்.
‘கங்காரு’ படம் பற்றி வைரமுத்து கூறியபோது, “தமிழ்ச் சினிமாவில், சாமி தவிர்க்க முடியாத இயக்குநர். அண்ணன் தங்கை பாசத்தை அருமையாக எடுத்துள்ளார். இப்படம் சாமியின் பழைய பிம்பத்தை உடைக்கும்…” என்கிறார் உறுதியாக.