full screen background image

மீண்டும் திரைக்கு வருகிறது கமல்ஹாசனின் ‘காக்கிச் சட்டை’ திரைப்படம்

மீண்டும் திரைக்கு வருகிறது கமல்ஹாசனின் ‘காக்கிச் சட்டை’ திரைப்படம்

புதிய திரைப்படங்களுக்கே தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடி வரும் நேரத்தில் பழைய, ஆனால் வெற்றி பெற்ற, புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படங்களை மறுபடியும் டிஜிட்டல் வடிவத்தில் மேம்படுத்தி தியேட்டர்களுக்கு கொண்டு வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் சில தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்..!

சென்ற வாரம்தான் கமல்ஹாசனின் ‘மீண்டும் கோகிலா’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இப்போது கமல்ஹாசனின் இன்னுமொரு வெற்றிப் படமும் திரைக்கு வரவிருக்கிறது.  அது ‘காக்கிச் சட்டை..!’

சத்யா மூவிஸ் தயாரிப்பில் 33 வருடங்களுக்கு முன்பாக 1985-ம் வருடம் வெளிவந்து அமோக வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘காக்கிச் சட்டை’.

kakki-sattai1-205x300-3

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் அம்பிகா, மாதவி, சத்யராஜ், தேங்காய் சீனிவாசன், ராஜீவ், செந்தாமரை, கல்லாப்பெட்டி சிங்காரம், ஒய்.விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ‘நம்ம சிங்காரி சரக்கு’, ‘பட்டுக் கண்ணம் தொட்டுக் கொள்ள’, ‘வானிலே தேனிலா’, ‘பூப்போட்ட தாவணி’, ‘கண்மணியே பேசு’ என்று ஐந்து பாடல்களுமே தேன் சொட்டும் சுவை.

படத்தில் சத்யராஜ் பேசும் ‘தகடு தகடு’ என்கிற ஒரேயொரு வசனமே படத்திற்கு இன்னொரு பெயரைப் பெற்றுத் தந்தது. சத்யராஜூக்கும் மிகப் பெரிய கேரியரை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் இதுதான்.

kakki-sattai1-205x300-5

படத்தில் வசனங்களை ஏ.எல்.நாராயணன் எழுதியிருந்தார். சத்யா மூவிஸின் கதை இலாகா படத்தின் கதையை எழுதியிருந்தது. திரைக்கதையை லிவிங்ஸ்டன், அவினாசி மணி, ஜி.எம்.குமார், பி.எல்.வீரண்ணன், ராதா வீரண்ணன், வி.தமிழழகன் ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர்.

ஒளிப்பதிவு – ரங்கா, படத் தொகுப்பு – கே.ஆர்.கிருஷ்ணன், சத்யா மூவிஸின் சார்பாக ஜி.தியாகராஜனும், வி.தமிழழகனும் இணைந்து தயாரித்திருந்தனர். ராஜசேகர் இயக்கம் செய்திருந்தார்.

இந்தப் படத்தை இப்போது திரும்பவும் டிஜிட்டல் மயமாக்கி திரைக்கு கொண்டு வருகிறது ‘டார்வின் பிக்சர்ஸ் நிறுவனம்’.

kakki-sattai1-205x300-6

இது பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போதைய தமிழ்ச் சினிமா இருக்கும் சூழலில் தொழில் நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் பல பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் வடிவத்தில் 5.1. டி.டி.எஸ். என்னும் உயர் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு திரைக்குக் கொண்டு வரப்பட்டு அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

kakki-sattai1-205x300-2

அந்த வரிசையில் எங்களது ‘டார்வின் பிக்சர்ஸ் நிறுவனம்’ உலக நாயகன் கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ் நடிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில், அப்போதைய புதுமை இயக்குநரான ராஜசேகரின் இயக்கத்தில் வெளியான ‘காக்கிச் சட்டை’ படத்தை 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைக்கு கொண்டு வரவிருக்கிறது.

வரும் மார்ச்  மாதம் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடாகாவிலும் இந்தப் படத்தை ஒரே நாளில் வெளியிடவிருக்கிறோம்..” என்று குறிப்பிட்டுள்ளது.

Our Score