“கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்” – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம்

“கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்” – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம்

கமலி ப்ரம் நடுக்காவேரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் படத் தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் பேசும்போது, “இயக்குநர் என்னிடம் முழு கதையையும் கூறவில்லை. ஒரு வரியைத்தான் கூறினார். சில காட்சிகளை மட்டும்தான் கூறினார். அதுவே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. படத் தொகுப்பு பணியின் போது எந்த அழுத்தமும் இல்லாமல் அமைதியாக செய்ய முடிந்தது.

இப்படத்தின் பள்ளி, மற்றும் கல்லூரி காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். குறிப்பாக காதல் காட்சிகள் வெகுளித்தனமாக இருக்கும். கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் அளவிற்கு இருக்கும்…” என்றார்.

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது, “எனக்குச் சொந்த ஊர் திருச்சி மாவட்டம்.  நான்தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம்தான் கமலி கதாபாத்திரம்.

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.

அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர், தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம்தான் இப்படத்தின் கருவாக எனக்குள் தோன்றியது.

இந்தப் படத்தை நாயகியை மையப்படுத்திய படமாக எடுத்தால்தான் முழுக்க, முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இதை உருவாக்க முடியும் என்று நினைத்தேன். அது போலவே செய்திருக்கிறேன்.

இந்தக் கதையை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. “நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள். பிடித்தால் பணியாற்றுங்கள்…” என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம்.

கதையைக் கேட்டு முடித்த அடுத்த நிமிடம் “எப்போது ஷூட்டிங் போகலாம். நான் என்ன செய்ய வேண்டும்..?” என்றார் ஆனந்தி. இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை அவர் கமலி’யாகவே வாழ்ந்தார்.

இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்..? மகளாக எப்படி இருப்பாள்..? என்று ஒவ்வொரு காட்சியையும் நான் எப்படி எதிர்பார்த்தனோ, அப்படியே நடித்துக் கொடுத்தார் ஆனந்தி.

பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன். இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார். இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல; அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்…” என்றார்.

படத்தின் நாயகியான ‘கயல்’ ஆனந்தி பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இதுவொரு முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும்விதமாக இந்தப் படம் இருக்கும். பெற்றோர்களை ஊக்கமளிக்கும்விதமாக இருக்கும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் “ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்..?” என்று என்னிடம் முன்பே கேட்டதுதான் என் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்தக் கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்தான். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் வந்து பார்க்க வேண்டும்…” என்றார்.

Our Score