நம்ம உலக நாயகனுக்கு எங்கேயிருந்துதான் நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை. ஒரு நாளைக்கு 24 மணி நேரமென்றால் இவருக்கு மட்டும் கூடுதலான சில மணி நேரத்தை, இவர் நம்பாத கடவுள் ஒதுக்கியிருக்கிறானோ என்று சந்தேகம் வருகிறது.
இப்போதுதான் ‘உத்தமவில்லன்’ படம் ரிலீஸாகி இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து ‘பாபநாச’மும், ‘விஸ்வரூபம்-2’-ம் தியேட்டர்களுக்கு வரக் காத்திருக்கும் சூழலில் தனது அடுத்தப் படத்தையும் அறிவித்துவிட்டார்.
ஒரு திரைப்படம் ஷூட்டிங்கிற்கு ரெடியென்றால் அதற்கு முன்பாகவே pre production என்றழைக்கப்படும் கதை தேர்வு, திரைக்கதை எழுதுதல், வசனம் எழுதுதல், படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்தல்.. நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வது.. படப்பிடிப்பு நாட்களை முடிவு செய்வது.. ஒட்டு மொத்த யூனிட்டும் தயாராகி நிற்பது என்று எத்தனையோ வேலைகள் இருக்கின்றன.
இதற்கெல்லாம் குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஆகும். அதுவும் உலக நாயகன் கமல்ஹாசன் படமென்றால் மிகத் துல்லியமான திட்டமிடல் இருக்கும். அதில்லாமல் அண்ணன் களத்தில் குதிக்கவே மாட்டார்.
இப்போதுதான் ‘உத்தமவில்லனை’ ரிலீஸ் செய்துவிட்டு அதனுடைய பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு உலகம் சுற்றிவிட்டு வந்தார். அதற்குள்ளாக தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டாராம்..!
புதிய படத்திற்கு ‘தூங்காவனம்’ என்று பெயர் வைத்திருக்கிறார் உலக நாயகன். தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசனே இதனைத் தயாரிக்கிறார்.
உலக நாயகனிடத்தில் தொடர்ச்சியாக சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ் எம். செல்வா என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளாராம். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். படத்திற்கு ஒளிப்பதிவு சானு வர்கீஸ். எடிட்டர் விஜய் சங்கர். இசையமைப்பு ஜிப்ரான்தானாம்.
வரும் மே 24-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 40 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாம். இதில் சென்னையில் மட்டும் 35 நாட்கள் நடைபெறவுள்ளதாம்.
உழைப்பின் மறுபெயர்தான் உலகநாயகனோ..?