நேற்று காலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் தயாரிப்பாளர் சந்திரஹாசனின் நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “தனக்கு மரியாதையை கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாசன்தான்…” என்று புகழ்ந்தார்.
கமல்ஹாசன் பேசும்போது, “எனக்குத் தெரிந்து திரு.சந்திரஹாசன் இல்லாமல் நான் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுதான். இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கணும்..? எத்தனை பேர் வருவாங்க..? நீ என்ன பேசணும்..? எப்படி நடத்தணும்ன்றதையெல்லாம் முன்னாடியே சொல்லிருவார்.
கேமிரா முன்பாக நிற்கும்போது எப்படி வசனங்களை ஞாபகத்தில் வைத்திருந்து பேசுகிறோமே, அதேபோல் இனிமேலும் அவர் சொல்லிக் கொடுத்ததை போலவே.. இனிமேல் நான் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கும். அது அசரீரியெல்லாம் அல்ல. அது நானாகவே மாறிவிட்டது.
ஒரு சகோதரன் எப்படியிருக்க வேண்டும் என்பதை சொன்னவர் திரு.சந்திரஹாசன். அதனால்தான் இத்தனை பேர் வந்திருந்து ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று சொன்னார்கள். ஒரு சகோதரனாக இருப்பதுகூட ஒரு பொறுப்புதான். அந்தப் பொறுப்பை நான் கற்றுக் கொண்டது என் சகோதரர் திரு.சந்திரஹாசனிடத்தில்தான்.
எப்போதும் தான் சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லிவிடுவார். செல்போன் இல்லாத காலக்கட்டத்தில்கூட அப்படித்தான். யாரையும் மரியாதைக் குறைவாக பேசவே மாட்டார். ஒருமையிலோ, ‘ஏய்’ என்றோ யாரையும் அவர் அழைத்து பேசியதில்லை.
ஒரு குழந்தை பிறந்தவுடன் என் சகோதரர்களை அழைத்துக் காட்டியவுடன், அது அவர்களது குழந்தை போல தூக்கி வளர்த்ததை என்னிடம் சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். அப்படி அவர் வளர்த்தெடுத்த குழந்தையை ஒருமுறைகூட வேறு நபர்களிடம் பேசும்போது, ‘கமல் வந்தானா..?” என்றுகூட அவர் கேட்டது கிடையாது. அவரைப் பார்த்துதான் மரியாதை எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
நான் மூன்றரை வயதில் சினிமாவில் நடிக்க வந்தபோது பெரிய விஷயமாக இருந்தது எனது குடும்பத்திற்கு இருந்த மரியாதைதான். பொதுவாக சினிமாக்காரர்களை பற்றி பேசும்போது ‘அவன் வந்தான்யா’.. ‘நடிச்சான்யா’.. ‘போனான்யா’ என்று உரிமையோடு ஒருமையில் பேசுவார்கள். ஆனால் அது எங்கள் வீட்டில் இருந்த்தே கிடையாது.
‘யார்ரா வீட்டு வாசல்ல..?’ என்று வீட்டில் யாராவது கேட்கும்போது ‘பிச்சைக்காரர் பிச்சை கேட்கிறார்’ என்று நானே மூன்றரை வயதில் இருக்கும்போது பேசியிருக்கிறேன். அதையெல்லாம் கற்றுக் கொடுத்தவர் திரு.சந்திரஹாசன்.
ஆரம்பத்தில் அதட்டியும், உருட்டியும் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர், பின்பு அறிவுரைகளெல்லாம் ஒப்பீனியன்களாக வந்த்து எனக்கு. மற்றவர்களெல்லாம் ஒப்பீனியனை அறிவுரை மாதிரி சொல்வார்கள்.
எனது அண்ணனாக அவருடன் எனக்கிருந்த தொடர்பு ரத்த உறவு. ஆனால் ஒரு சகோதரனாக அவருடன் எனக்குக் கிடைத்த தொடர்பு தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
சில நேரங்களில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஏனெனில் எனக்குக் கிடைத்த சந்திரஹாசன், கே.பாலசந்தர் போன்ற குருநாதர்கள்.. இப்படிப்பட்ட சகோதரர்கள்.. நாங்களெல்லாம் இருக்கிறோம் என்று இவர்களெல்லாம் சொல்லும்போது அதனை நான் மிகவும் சீரியஸாகவே எடுத்துக் கொள்கிறேன்.
இதே அன்பை என்னால் திருப்பித் தர முடியும் என்பதை கற்றுக் கொடுத்தவர் திரு.சந்திரஹாசன். என்னுடைய வாழ்க்கையில் என்னை பாதித்தவர்களை பற்றி தினமும் ஒரு முறையாவது பேசுவேன். கே.எஸ்.ரவிக்குமாருக்கு தெரியும். பாலசந்தரை பற்றி அவர் என்னை ஷூட் செய்தபோதெல்லாம் ஒரு நாளாவது பேசியிருப்பேன். நாகேஷ் அவர்களைப் பற்றியும்தான். திரு.சந்திரஹாசன் பற்றி பேசவே வேண்டியதில்லை. அவர் என்றென்றும் என் நிழலாகவே இருந்து கொண்டிருப்பார்.
இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. எனினும் என்னுள் அவர் இருக்கிறார். நான் இருக்கும்வரையிலும் அதனை நான் அனுமதிப்பேன். இந்த நிகழ்ச்சி பற்றிகூட முன்பேயே என்னென்ன செய்யணும், பேசணும் என்று லிஸ்ட் போட்டு பேசியிருக்கோம்.
திரு.சந்திரஹாசன் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்கவே மாட்டார். அவருடைய அப்பா சீனிவாசன் மாதிரி. எங்கப்பா சீனிவாசன் பிளைட்ல வர மாட்டார். கே.பி. டிராவல்ஸ் பஸ்லதான் வருவார். இவரும் அப்படித்தான். அவரை மாதிரியேதான் இருந்தார்.
இன்னொரு விஷயம் சொல்லணும். அது அவருக்கு நிச்சயம் பெருமையா இருக்கும். எங்கண்ணனுக்கு தனியா லாண்டரி கிடையாது. அவர் துணியை அவரே துவைச்சு போடுவாரு. சமயத்துல அவரே அயர்ன் செஞ்சுக்குவாரு.
வருஷத்துக்கு மூணே மூணு டிரெஸ்தான் வாங்குவாரு. அதையே மாத்தி, மாத்தி துவைச்சு போட்டுக்குவாரு. அவருக்கு பாடத் தெரியும். சமைக்கத் தெரியும். துணி துவைக்கத் தெரியும். அதையெல்லாம் எனக்கும் சொல்லிக் கொடுத்தார். நான்தான் என்னுடைய சோம்பேறித்தனத்தாலும், இதெல்லாம் நமக்கு வேண்டாமே என்பதாலும் ஒதுக்கிவிட்டேன்.
இதெல்லாம் எதுக்குன்னு கேட்டால் ‘ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது காலையில் துணி துவைத்துவிட்டுத்தான் அலுவலகத்திற்குக் கிளம்புவார்’ என்று சொல்வார். இதையெல்லாம் இனிமேல் நானும் பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.
அண்ணன் இல்லாத வாழ்க்கை கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கான பயிற்சியைக் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அந்தச் செயலை செய்ய உறுதுணையாய் இருப்போம் என்று நீங்கள் கொடுத்த உறுதி, என் மனதை உறுதிப்படுத்துகிறது.
பிறப்பதும், இறப்பதும் எல்லோருக்கும் நடப்பதுதான். ஆனால் மக்கள் நினைத்துப் பார்க்கும்படி வாழ்ந்து காட்டிவிட்டு இறப்பது பெரிய விஷயம். என்னால் அதனை செய்ய முடிகிறதா என்று முயல்கிறேன்.
ரஜினி சொன்னதை போல பணம் சம்பாதிக்கத் தெரியாத லிஸ்ட்டில் கலைஞானம் உள்ளிட்ட பல அண்ணன்கள் எனக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். இப்போது ரஜினியும் எனக்கு ஒரு அண்ணன்தான்…” என்றார்.