கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது புதிய திட்டமான ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
‘ஸ்வச் பாரத்’ அல்லது ‘தூய்மை இந்தியா’ என்ற இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மக்களிடையே தூய்மை குறித்து புதிய விழிப்புணர்வை உருவாக்கி இதையே ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும்படியும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் அன்றைக்கே காந்தியடிகளின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்த கையோடு டெல்லியில் தெருவில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியை தானே முன்னின்று நடத்தினார்.
தன்னுடைய வழியைப் பின்பற்றி பொதுமக்களும் தெருவில் இருக்கும் குப்பைகளை அகற்றி அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் #mycleanindia என்ற ஹாஷ் டாக்கை பயன்படுத்தி இணையத்தில் பதிவேற்றுமாறு கோரிக்கையும்விடுத்தார்.
மேலும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் சல்மான்கான், நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ், உள்ளிட்ட இந்திய பிரபலங்களிடம் இந்தத் தனது தூய்மை இந்தியா சவாலுக்கு உதவுமாறு அழைப்பும் விடுத்தார்.
இதனை உடனேயே ஏற்றுக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் “மிக விரைவில் பிரதமரின் இந்தத் திட்டத்தை நான் செயல்படுத்துவேன்…” என்று உறுதி கூறியிருந்தார். அதன்படி வரும் நவம்பர் 7-ம் தேதி தன்னுடைய பிறந்த தினத்தன்று இந்தத் தூய்மை திட்டத்தை தன் தலைமையில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அன்றைக்கு கமல்ஹாசன் நற்பணி இயக்கத் தன்னார்வலர்கள் நீர் நிலைகனை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யவிருக்கிறார்கள்.
இந்தத் தூய்மைப்படுத்தும் பணி தாம்பரம் வேளச்சேரி முதன்மைச் சாலையில் உள்ள ராஜா கீழ்ப்பாக்கம் சந்திப்பு அருகில் இருக்கும் மாதம்பாக்கம் ஏரியிலிருந்து துவங்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் அவரது திரையுலக நண்பர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
அன்று மாலை 3 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘தூர்தர்ஷன்’ அலுவலகத்திற்கு எதிரில் இருக்கும் அண்ணா அரங்கத்தில் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், நற்பணி இயக்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் கமல்ஹாசன் உரையாற்றப் போகிறாராம்.
வாழ்க வளமுடன்..!