“கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல முடியாது…” – இந்து மக்கள் கட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் நெத்தியடி பதில்..!

“கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல முடியாது…” – இந்து மக்கள் கட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் நெத்தியடி பதில்..!

விஜய் டிவியில் நடந்து வரும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் மற்ற நடிகைகளை பார்த்து ‘சேரி பழக்க வழக்கம்’ என்று தலித் மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார் எனவும் ஆபாசமாக பேசியும், நடித்தும் வருகிறார் எனவும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது. 

இந்த நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சி அளித்துள்ள புகாரில், “தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக்கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, அருள், தரணி, சினேகன், கணேஷ் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்…” என்று கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

“பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணணும்.. உங்களை அரெஸ்ட் பண்ணணும்னு சிலர் வழக்கு தொடர்ந்திருக்காங்களே..?”

“நீதிமன்றத்தை நானும் நம்புகிறேன். கைதாவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்தக் கைதுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். என்னை கைது செய்ய சொல்பவர்கள் கிரிக்கெட் மைதானத்தில் குட்டைப் பாவாடையுடன் ஆடும் சியர்ஸ் கேர்ள்ஸை தடை செய்ய ஏன் கோரவில்லை..? இந்துத்துவாவே சேர்ந்த அடிப்படைவாதிகள் என்னை எப்போதுமே தவறாகவே புரிந்து வைத்துள்ளனர்.

அவர்களுக்கு நான் கம்யூனிஸ்ட்டாகவே தெரிகிறேன். ஆனால் அடிப்படையில் நான் ஒரு பகுத்தறிவுவாதி. இரு தரப்பிலிருந்தும் தர்க்க ரீதியாக நல்ல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டால் அதனை நான் ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறேன். அவர்கள் என்னை அச்சுறுத்தவில்லை. ஆர்வப்படுத்துகிறார்கள்.”

“இந்து மக்கள் கட்சி உங்களைக் குறி வைக்கிறார்களா..? அல்லது விஜய். டிவியைக் குறி வைக்கிறார்களா..?”

“இந்து மக்கள்… அப்படிங்கும்போதே காரணம் நான்தான். என் சட்டைக் கலர். தேவையில்லாம அவர்களையும் வம்புக்கு இழுத்து நிக்க விரும்பல. ஆனால் அது விஜய் டிவியைக் குறிவைத்திருந்தால் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்…”

“பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த வகைல சமூகத்துக்கும், கலாசாரத்துக்கும் தேவையான ஒண்ணு…?”

“கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குத் தேவையான ஒன்று. மேலும் அடுத்த வீட்ல புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப் பார்த்தா ‘இந்த மாதிரிலாம் பண்ணிடாத’ம்பாங்க. அப்டி கத்துக்க இது ஏதுவாக இருக்கும்…”

“சமூக ஊடகங்கள்ல உங்களுக்காகத்தான் நிகழ்ச்சியைப் பார்ப்பதாக, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே..?”

“நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். நம்பாதவர்கள் கோவத்தின்பேரிலாவது இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நல்லதுதான்.. பார்க்கட்டும்..!”

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என்று சொன்னதுக்கு பரவலாகப் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?”

“காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக் கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும்..? நான் வாழும் சொசைட்டில அதவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க. சாதினு பேசறாங்க. அதையே நீக்க முடியல.”

“நீங்கள்கூட கஞ்சா கருப்பிடம் ‘சைவம் சாப்பிடும் உங்களுக்கு கோவம் வரலாமா?’ என்று கேட்டீர்கள். அப்படியானால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கோவம் அதிகம் வருமா…?”

“மற்ற எல்லா மொழிகளிலும் ‘சைவம்’ என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. தமிழில் மட்டுமே அது மதத்தின் பெயரால் உலவுகிறது. ‘அசைவம்’ என்றால் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. மற்றபடி இது வரலாற்று ரீதியாக, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று..”

“பிக்பாஸ் மூலமா இந்தச் சமூகத்திற்கு என்ன கருத்தைச் சொல்ல வர்றீங்க..?”

“கூடி வாழ்தல். இதனால் உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றோர் ‘பணமா பாசமா’, ‘பூவா தலையா’, ‘எதிர்நீச்சல்’ மாதிரியான படங்களில் கூட்டுக் குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அதுதான் ‘பிக்பாஸ்’. அதில் பாலசந்தர் என்ற ஒருவர் எழுதுகிறார். இதில் அவங்கவங்க எழுதிக்கறாங்க…”

“தமிழ்த்தாய் வாழ்த்தை கிண்டல் செய்யலாமா..?”

“கிண்டல் செய்யவில்லை. கற்றுக் கொடுக்கப்பட்டது. நம்பியார் தமிழ்பேசும்போதுகூட மலையாள தொனி இருக்கும். கண்டசாலாவுக்கு பல மொழி சாயல் இருக்கும். பிக்பாஸில் பல மொழி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்..”

“நடிகர் வையாபுரியின் மனைவி ‘அவர் ரெண்டு வாரத்துல வந்துடுவார்’னு சொல்ற ஆடியோ ஒண்ணு சுத்துதே…”

“அவர் சொல்லிட்டுப் போயிருக்கலாம். ‘நான் ரெண்டு வாரத்துல வந்துடுவேன்’னு. அதை அவர் மனைவி சொல்றாங்க.”

“பிக்பாஸ் ஷோவில், உங்கள் கருத்தைச் சொல்ல சேனல் நிர்வாகம் தடையாக இருக்குமா..?”

“இல்லை. நான் எடுப்பதுதான் முடிவு.”

“விளம்பரம், டி.வி நிகழ்ச்சில பங்கேற்கறதுலாம் உங்கள் பணத் தேவைக்கா.. அல்லது விரும்பி செய்கிறீர்களா..?”

“விரும்பித்தான் செய்கிறேன். ஆனால் ‘பணத்துக்காகச் செய்யவில்லை சமூக சேவைக்காகச் செய்கிறேன்’ என்று சொல்ல நான் அரசியல்வாதி இல்லை. இதுதான் என்னுடைய சம்பாத்தியம். இதிலிருந்துதான் என் வீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது…”

“ஜி.எஸ்.டி வரும்னு செய்திகள் வந்தப்ப ‘ஜி.எஸ்.டி வந்தால் நான் சினிமாவை விட்டு வெளியேறுவேன். ஜி.எஸ்.டி. கட்டமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்களே…?”

“இல்லல்ல. எல்லாருமே தப்பா ‘Quote’ பண்றீங்க. ‘நான் கட்டபொம்மன் அல்ல. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி அல்ல’ன்னு நான் சொன்னத, ‘நான் கட்டபொம்மன் அல்ல.. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி’னு மாத்திட்டீங்க. உங்களை குற்றம் சொல்லல. என் பேச்சு புரியாமல் இருந்திருக்கலாம்.

இப்போ அமைச்சரோட பேசற அளவுக்கு வம்புல மாட்டி விடறீங்க. இது என்னுடைய அரசு. எனக்கு இவர்களது முகம் பிடிக்காமல் இருக்கலாம். அவர்களின் உடுப்பு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நான் உருவாக்கின அரசு இது.

ஜி.எஸ்.டியைக் குறைக்கணும்னு கேட்டுகிட்டோம். குறைச்சாங்க. குறைச்சதுக்காக நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. 28-ல் இருந்து 18-க்கு குறைச்சதுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். ஆனால் இதுவும் போதாதுன்னும் சொல்லணும். இன்னமும் இது பரிசீலனைக்கு உரிய விஷயம்தான். என் அரசைப் பார்த்து நான் கோவிச்சுக்குவேன். அது எந்த அரசாக இருந்தாலும்..!

“நீங்கள் உங்கள் கருத்துகளை அடிக்கடி வலியுறுத்திப் பொதுவெளியில் பேசுவதால், உங்களைக் குறிவைத்தே விமர்சிக்கிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா..?”

“37 வருஷமா.. அதாவது என்னை நோக்கி ஒரு கேமரா திரும்பும்னு நான் நம்பினதுல இருந்து நான் என் கருத்தைப் வெளிப்படையா பேசிட்டுதான் இருக்கேன். கமல்ஹாசன் ‘சட்டம் என் கையில்’ படத்துல முத்தக் காட்சில நடிச்சப்போ கெடாத கலாச்சாரம், இப்போ ‘பிக்பாஸுல’ கெட்டுப் போகுதுன்னா, காலதாமதமாக என் கைதை அவர்கள் கோருகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்…!”

“விஸ்வரூபம் ரிலீஸ் சமயத்தில் படங்களை DTH-ல ஒளிபரப்பணும் நீங்க சொன்னப்ப திரைத்துறையினர் எதிர்த்தாங்க. இப்ப ஜி.எஸ்.டி பிரச்னையப்ப சிலர் இனிமே DTH-லதான் ஒளிபரப்பணும்னு சொல்றாங்களே…?”

“இந்தச் சுவர் நான் இது பற்றிப் பல முறை பேசி கேட்டிருக்கு. இந்த சுவருக்கு அறிவிருந்தால் புரிந்து கொண்டிருக்கும். ஆனால் அவர்கள்தான் இதனை இவ்வளவு காலதாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்…”

“கேளிக்கை வரி இல்லாத படங்களுக்குக்கூட மக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கிறார்களே.. அப்ப நீங்க திரைத்துறையை எதிர்த்துக் குரல் எழுப்புவீர்களா..?”

“மக்களாகிய நீங்கள் யோசியுங்கள். நாங்கள் செய்யும் தொழில் எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியும். கருப்புக் கலரோ, செவப்புக் கலரோ கலந்திருக்கற சோடாவுக்கு குடுக்கற மரியாதையைவிட என் சினிமாவுக்கு விலை வடிவில் நிர்ணயிக்கப்படும்போது எனக்குக் கோபம்தான் வரும்.

ஏன்னா அரைமணி நேரத்துக்கும் மேல அந்த சோடாவை வைத்துக் குடித்தால் போரடித்துவிடும். அதன் காட்டம் குறையும். நாங்க ரெண்டரை மணி நேரம் தாக்குப் பிடிக்கறோமே…?”

“கேளிக்கை வரி சம்பந்தமா தமிழக அரசுக்கு உங்க வேண்டுகோள் என்ன…?”

“சினிமாவை நசுக்கும் எந்தவிதமான வரியையும் விதிக்காதீர்கள். மேசைக்கடியில் நடக்கும் எந்த வியாபாரத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்..”

“சத்யமேவ ஜெயதே’ மாதிரியான நிகழ்ச்சியை நீங்க பண்ணியிருந்தால் இந்த மாதிரி கேள்விகள், எதிர்ப்புகள் வந்திருக்காதே…?”

“நான் என் லைஃப்லயே சத்யமேவ ஜெயதே’வைத்தான் பாலோ பண்றேன். காசு வாங்காமல் 37 வருஷமா எனது நற்பணி இயக்கங்கள் மூலமா அதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதுக்காக பிடிக்காதுன்னு சொல்லி ‘ஹேராம்’, ‘விருமாண்டி’லாம் எடுக்காமல் இருக்க முடியாதே..?”

“உங்கள் நண்பர் ‘சிஸ்டம் சரியில்லை’ என்றார். நீங்கள் ‘சட்டசபைக்கு மறுதேர்தல் வைக்கணும்’னு சொன்னீங்க..?”

“ரெண்டும் ஒரே கருத்துதான். ஒரே திசையை நோக்கிச் செல்லும் வெவ்வேறு கருத்து. இன்னொண்ணு, ‘சிஸ்டம் சரியில்லை’னு மொதல்ல சொன்னது நான். ஒன்றரை வருஷம் முந்தி சொன்னேன். இப்போ அவர் சொல்லியிருக்கார். ரொம்ப நன்றி அவருக்கு.”

“ரஜினி கட்சி தொடங்கினால் உங்கள் நிலைப்பாடு என்ன?”

“நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்…”

“தமிழகத்தில் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடுதுனு நீங்க சொன்னதுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் ‘கமல்ஹாசன் பொத்தாம்பொதுவாகச் சொல்வதை ஏற்க முடியாதுனு சொல்லிருக்காரே?”

“ரோடு சரியில்லைனு சொல்றேன். நான் ஒரு ரோடு வழியா கடந்து போயிருப்பேன், காட்டுன்னா சொன்னால் எப்படி..? சரி.. நான் சொல்றேன். எல்லாத் துறையிலயும்.. மறுபடியும் சொல்றேன்.. எல்லாத் துறையிலும்..!”

“கேரளாவில் ஒரு நடிகர், நடிகை ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகியிருக்கிறாரே.. அது பற்றி..”

“நீதிக்கு உண்டான மரியாதையாக அதை நான் பார்க்கிறேன்…”

“கேரளாவில் நடிகைகள் தங்கள் பாதுகாப்பிற்காக அணி திரண்டிருக்கிறார்கள். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்…?”

“அது என்ன சினிமாவில் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். ஒரு பெண் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் ஒவ்வொரு ஆணின் கடமை…”

இத்தனை பேட்டியிலும் ஹைலைட்டானது ‘இந்து மக்கள் கட்சி’க்கு அவர் கொடுத்த சூடுதான்..!

“நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்குறீர்கள் என்று இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறதே…?” என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “ஆராய்ச்சி மணியை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால், கன்றை இழந்த மாட்டுக்குதான் பதில் சொல்ல வேண்டும். கண்ட மாடுகளுக்கும் அல்ல..” என்றார் நெத்தியடியாக..!

Our Score