வருமான வரித்துறைக்கும் சினிமாக்காரர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.. படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தில் பாதியை வெள்ளையாகவும், மீதியை கருப்பாகவும்தான் வாங்குகிறார்கள் என்று பெட்டிக்கடைக்காரர்கள் முதல் சினிமாவுக்கு பைனான்ஸ் கொடுப்பவர்கள்வரையிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிதளவு உண்மையிருந்தாலும், ஒரு சிலர் விதிவிலக்காக வருமான வரித்துறைக்கு நாணயமான வாடிக்கையாளராக இருக்கிறார்கள். அதில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன்.
தனது வருமான வரிக்கணக்கை முறைப்படி குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவும், ஒரு ஆண்டுக்கான வரியை அந்த ஆண்டிலேயே செலுத்தியும் பல ஆண்டுகளாக வருமான வரித்துறையிடமிருந்து சிறந்த நேர்மையான மனிதர் விருதை பெற்று வந்திருக்கிறார். வருமான வரித்துறையின் சார்பில் தயாரிக்கப்படும் சின்னச் சின்ன விளம்பரப் படங்களில்கூட அவர்களுக்காக நடித்துக் கொடுத்தார் கமல்ஹாசன். வருமான வரித்துறையை ஆதரித்து டிவிக்களில் தோன்றி பேசியிருந்தார். அதேசமயம் வருடாவருடம் வருமான வரித்துறை சார்பில் நடக்கும் விழாக்களுக்கும் கமல்ஹாசன் தவறாமல் ஆஜராகிவிடுவார்.
இந்த வருடமும் வருமானவரித் துறையின் சார்பில் நடந்த தேசிய கலை விழாவின் துவக்க நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கமல்ஹாசன். வருமான வரித்துறையின் பல்வேறு பிரிவு ஆணையர்களும் உடன் இருக்க குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார் கமல்ஹாசன்.
விழாவில் பேசிய கமல்ஹாசன், “நாம் அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும். என் தந்தையும் எனக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். உண்மையில் வரி செலுத்துவது என்பது நாட்டின் உள்கட்டமைப்புக்கு நம்முடைய பகுதியாக அல்லது பங்காக நினைத்து நாம் செலுத்தவேண்டும். நானும் அப்படி நினைத்துதான் செய்து வருகிறேன். அடிப்படையில் இந்த எண்ணம் இருந்தால், வரி செலுத்துவதில் எந்த பிரச்சினையும், தயக்கமும் வராது…” என்றார்.
எங்களுக்கும் அப்படியொரு எண்ணம் இருக்கத்தான் செய்யுது. ஆனால் வருமான வரி கட்டுமளவுக்கு வருமானம் வரலியே..?