இன்று காலை ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் சென்ற ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுகள் பரிசளிக்கப்பட்டன.
நடிகர் கமல்ஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட பலர் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றார்கள்.
இந்த விருதினைப் பெற்றது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவை பெற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல; என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டும் ஒரு முறை குடிமகனான என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்தபோது மனது ஏதோ நெகிழ்ந்து நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுணர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேச பக்தியுள்ள என் தாய், தந்தையரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித்தகர்களுடன் தோளுரசி நின்றதில் பெருமை அடைகிறேன். இன்னும் இப்பெருமையைப் பெறப்போபவர்களையும், பெறாவிட்டாலும் தன் கடமையைச் செய்யப் போகும் இந்தியர்களையும் என் மனம் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கியது.
அன்பன்
கமல்ஹாசன்