கே.பாலசந்தருடனான முதல் சந்திப்பு பற்றி கமல்ஹாசன்…!

கே.பாலசந்தருடனான முதல் சந்திப்பு பற்றி கமல்ஹாசன்…!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் மறைவதற்கு சில தினங்களுக்கு முன்பு வாராவாரம் ‘குமுதம்’ பத்திரிகையில் வெளிவரும் ‘கமல்ஹாசனின் பதில்கள்’ பகுதிக்காக கேள்விகளை அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்கள்தான் மிகப் பொருத்தமாக இந்த வாரம் இடம் பிடித்திருக்கிறது.

இயக்குநர் சிகரத்தின் கேள்வி-1 : நம் முதல் சந்திப்பு எங்கே, எப்போது நிகழ்ந்தது? அப்போது நமக்குள் என்ன உரையாடினோம்? நினைவிருக்கிறதா உனக்கு..?

கமல்ஹாசன் பதில் : “நினைவிருக்கிறது ஐயா. திரு.ஜெமினி கணேசன் மாமாவின் அறிமுகத்துடன் உங்களை வாஹினி படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தேன்.

ஜெமினி மாமா என் திறமைகளை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து செய்த அந்த அறிமுகத்தால் கன்னம் சூடேறி நாணி நின்ற என்னைப் பார்த்து நீங்கள், ‘ரொம்ப சின்னப் பையனா இருக்கானே…’ என்று உங்கள் மூக்குக் கண்ணாடியை கழட்டி கைக்குட்டையால் முகம் துடைத்தீர்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜெமினி மாமா உங்கள் கண்ணாடியைப் பிடுங்கி எனக்கு மாட்டிவிட்டு, ‘இப்போ பாருங்கோ மெச்சூர்டா இல்ல..?’ என்றார். ‘கண்ணாடியில்லாம சரியா தெரியாது. படுத்தாதீங்க அண்ணாச்சி.. இன்னும் 2 வாரம் கழிச்சு வா..’ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தீர்கள்.

வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ‘திரு.கே.பாலசந்தர் பாயிண்ட் ஆஃப் வியூல கொஞ்ச நேரம் உலகத்தைப் பார்த்தேன்…’ என்று பீற்றிக் கொண்டது நினைவிருக்கிறது ஐயா.

ஒரு நீண்ட உறவின் எளிமையான ஆரம்பம்.. என்னை அடுத்த கணமே வேலை மும்முரத்தில் மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். மறக்காமல் கூப்பிடனுப்பி வாழ்வு கொடுத்தீர்கள். நன்றி..!

இயக்குநர் சிகரத்தின் கேள்வி-2 : சினிமா நட்சத்திரங்கள் மேடை நாடகங்களிலும் நடித்தால் மட்டுமே மீண்டும் அது உயிர் பெறும். உன்னைப் போன்றவர்கள் அதைத் தொடங்கி வைத்தால், மற்ற இளம் நடிகர்களும் பின்பற்றுவார்கள். செய்வாயா..?

கமல்ஹாசனின் பதில் : “நீங்கள் பார்க்க இதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை வைத்திருந்தேன். ‘பால சண்முகம்’ என்ற நாடக அரங்கைக் கட்டி அதில் நவீன நாடகங்கள் பல நடத்தும் திட்டம் மனதில் இருந்தது. எனது இரு ஆசிரியர்களின் பெயரில் ஒரு நாடக அரங்கம். எல்லா பணத்தையும் சினிமாவுக்கே செலவு செய்ததால் திட்டம் நிறைவேறாமலே இருந்தது. இப்போது நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது.”

Our Score