full screen background image

“இனிமேல் நான் சம்பாதிப்பதெல்லாம் மக்களுக்குத்தான்..” – கமல்ஹாசன் பேச்சு..!

“இனிமேல் நான் சம்பாதிப்பதெல்லாம் மக்களுக்குத்தான்..” – கமல்ஹாசன் பேச்சு..!

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விக்ரம்’.

இப்படத்தில், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, கௌரவ தோற்றத்தில் சூர்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடி நடித்த பத்தல பத்தல’ பாடல் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் சர்ச்சையை கிளப்பினாலும் பாடல் இன்றுவரையிலும் மிகப் பெரிய அளவில் டிராண்டாகி வருகிறது.

இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை சென்னையில் தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “நடிகர் கமல் ஸாரை பார்த்துதான் சினிமாவை கற்றுக் கொண்டேன். என்னுடைய முதல் நன்றி கமல் ஸாருக்குத்தான். ‘விக்ரம்’ திரைப்படத்தில் திருப்திகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்” என்றும் லோகேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “படத்தில்கூட என்னை இவ்வளவு வேலை வாங்கவில்லை. தற்போது சுழன்று சுழன்றுதான் வேலை செய்ய வேண்டி உள்ளது. இங்கு நான் தாமதமாக வருவதற்கு இந்த ‘மாநகரம்’தான் காரணம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. இதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நல்லதொரு டீம் அமைந்து இருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதை ஒரு அளவுக்கு செய்திருக்கிறோம்.

கொரோனா எப்படி இருந்தது என்பதை இந்த நாடும், நாமும் அறிவோம். அது இல்லாத காலம் ஒன்றை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சுகாதாரம் இல்லாத இடத்தில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் பாதுகாப்பாக இருந்தோம். ரசிகர்களுக்கு இந்தப் படத்திலவ் நல்லதொரு விருந்து காத்திருக்கிறது.

அகண்ட திரையில் இந்தப் படத்தை பாருங்கள். உங்களுடைய அகண்ட மனதை ஏற்கனவே காட்டிவிட்டீர்கள். நான் ஒரு ரூபாய் செல்வு செய்தால் என்னுடைய ரசிகர்கள் 20 ரூபாய் செலவு செய்வார்கள். என்னிடம் பெரிய அளவில் பணம் இல்லை. என்னுடைய வருமானத்தை நான் இந்த மக்களுக்காகவேதான் பயன்படுத்துவேன்.

அனிருத், லோகேஷ் மற்றும் படக் குழுவினர் இனிமேல் நன்கு தூங்க வேண்டும். இந்தப் படத்தில் அந்த அளவுக்கு கடின உழைப்பை போட்டுள்ளனர். நல்ல படங்கள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

படத்தில் கடைசி நிமிடங்களில் சூர்யா வருவார். அவரது கேரக்டர், படத்தின் கதையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அது ‘விக்ரம்-3’-வது பாகமாகக்கூட இருக்கலாம்.

லோகேஷ் கனகராஜூக்கு நன்றி சொன்னால் அன்னியப்பட்டு போவார் என்பதால் சொல்லவில்லை. விக்ரம்-3 படத்திற்கும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குநர். ஏற்கெனவே நான் முடிவு செய்துவிட்டேன். நிச்சயம் இந்த விக்ரம்’ வெற்றி படமாக அமையும்…” என்றார்.

 
Our Score