கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து ‘விஸ்வரூபம்’ படத்திற்காக அரசுக்கு எதிராக பொங்கித் தீர்த்த அதே எல்டாம்ஸ் ரோடு வீட்டில் இன்று ‘உத்தமவில்லன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.
இரண்டே இரண்டு ஹைதர் காலத்து பேன்கள் மட்டுமே இருக்கும் அந்த ஹாலில் 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருக்க.. ஒருவருக்கொருவர் மூச்சுக் காற்றை சுவாசித்து, வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சுவையாகவும், ருசிகரமாகவும் பேசினார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றி அவர் பேசியதில் இருந்து சில பகுதிகள் :
கமல்ஹாசனின் பேச்சு :
“பல இடையூறான நேரங்களில் இதே இடத்தில் நான் உங்களை சந்தித்திருக்கிறேன். மகிழ்ச்சியான இந்த நேரத்தில் இங்கேயே சந்திக்கலாம்னு நினைச்சேன். அதனால்தான் இங்கே வரச் சொன்னேன்.
அது மட்டுமல்ல, இந்த வீட்டிலிருந்துதான் நான் பாலசந்தர் சாரிடம் வாய்ப்பு கேட்பதற்காக சைக்கிளில் போனேன். ராஜ்கமல் நிறுவனத்திடமிருந்துகூட பாலசந்தர் சார் சம்பளம் வாங்குனதில்ல. ஆனால் இந்த படத்திற்காக நானே நேர்ல வந்துதான் சம்பளத்தை வாங்குவேன் என்று இந்த வீட்டுக்கு தேடி வந்து செக்கை வாங்கினார். இது போன்ற நிறைய நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கு இந்த வீடு. அதனால்தான்.
இந்தப் படத்தின் கதையை முடிவு செய்துவிட்டு கே.பி.யிடம் ‘நடிக்கிறீர்களா..?’ என்று கேட்டபோது, ‘பாதியில் நிறுத்த வேண்டியது வரும் பரவாயில்லையா..?’ என்று கேட்டார். அவர் எதைச் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டு, ‘அப்படியொரு சூழல் வந்தால் எடுத்தவரைக்கும் காட்சிகளை வைத்துக் கொண்டு மீதிக் கதையை மாற்றி எழுதிக் கொள்கிறேன் சார்..’ என்றேன். ‘ஒரு வாரத்தில் யோசித்து சொல்கிறேன்..’ என்றவர், பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார்.
நடிக்க வந்த முதல் நாளில் என்னிடமும், ரமேஷ் அரவிந்திடமும், ‘இப்போதும் ஒன்றும் பிரச்சினையில்லை. எனது படத்தில்கூட பல நடிகர்களை ஒப்பந்தம் செய்து, பிற்பாடு வேறு நடிகர்களை வைத்து படமெடுத்திருக்கிறேன். இப்போ பாருங்க. எவ்வளவு வயசானவனாக இருக்கிறேன்..’ என்றார். ‘எனக்கு தெரிந்து வயதான இளைஞர் நீங்கதான் சார்’ என்று சொன்னேன். அது படத்தில்கூட ஒரு வசனமாக வருகிறது. பிறகு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்தவுடன், ‘சீக்கிரமா டப்பிங்கை முடிங்க’ என்றார். டப்பிங் முடித்தவுடன், ‘சீக்கிரம் படத்தைக் காட்டுங்கள்..’ என்றார்.
நான் வெளிநாட்டுக்கு இந்தப் படத்தின் பணிகளுக்கு சென்றிருந்தபோது, அவரது உடல்நலம் சரியில்லை என்றார்கள். அவருக்கு போன் போட்டு, ‘நான் வேணா திரும்ப வந்திருட்டுமா சார்.?’ என்றேன். அதற்கு ‘படத்தின் வேலையை முதலில் முடி. நான் எனது வேலையை முடித்துவிட்டேன்..’ என்றார். அதற்கு பிறகு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இறுதியில் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. நான் படத்தை முடிச்சிட்டு வர்றதுக்குள்ள இப்படி ஆயிருச்சு. அவருக்கே ஏதோ மனசுக்குள்ள பட்டிருக்கு.
நான் கே.பி.யிடம் இப்போது நடிக்கக் கேட்கவில்லை. ரொம்ப நாளாக கே.பி.யிடம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ‘மாட்டேன்’, ‘மாட்டேன்’ என்று அவர்தான் விலகிப் போய் கொண்டிருந்தார்.
நான், சிவாஜி, கே.பி. மூவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது நண்பர் பிரதாப்போத்தனிடம் இருந்து தலைப்பை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். அந்தத் தலைப்புதான் ‘பிதாமகன்’. இது ‘தேவர் மகன்’ படத்திற்குப் பின்பான காலக்கட்டம்.
அவரிடம் வம்பாக, ‘நீங்கள் நடித்தே ஆக வேண்டும்’ என்றேன். ஆனால் முடியவில்லை. அப்புறம்தான் அந்தப் பெயரில் பாலா படம் எடுத்தார். இவர் மட்டுமல்ல ‘ராஜபார்வை’ல நடிக்க சாவித்திரிக்குக்கூட அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் அதுவும் அவங்க உடம்பு சரியில்லாம போனதால முடியாம போயிருச்சு.
கே.பி. ஏதாவது அதட்டிச் சொன்னால் நான் பதில் பேசாமல் வந்துவிடுவேன். ஆனால் இந்த முறை நான் வாதாடி செய்ததால் எனக்காக நடித்துக் கொடுத்தார். ‘உத்தமவில்லன்’ படத்தில் கே.பி அவர்களின் பாத்திரம் ரொம்ப முக்கியமான ஒன்று.
நான் முதன்முதலாக அவரைச் சந்தித்தது இன்னமும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு முறை அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உதவி இயக்குனராகத்தான் சேர்த்துக்கொள்ளப் போகிறார் என்று நினைத்தேன்.
போகும்போது என் தாயார், ‘போறதுதான் போற… கையில் ஒரு போட்டோவை எடுத்துக்கிட்டு போடா’ என்றார். அவர் எதிர்பார்த்தது என்னவென்றால், பாலசந்தர் என்னை நடிக்க வைக்கப் போகிறார் என்று. ஆனால் நான் போட்டோவை கொண்டு போக மறுத்துவிட்டேன். நான்தான் உதவி இயக்குநர் ஆசையில் இருந்தனே..? அதற்கெதுக்கு போட்டோ..?
ஆனாலும் என் அம்மா வலுக்கட்டாயமாக ஒரு போட்டோவை என் கையில் திணித்தார். அப்போது நான் மிகவும் இறுக்கமான பேண்ட், சர்ட் அணிவேன். பேண்ட்டில் பாக்கெட் கிடையாது. அதனால், கிடைத்த இடத்தில் அந்த போட்டோவை கசக்கிப் பிழிந்து நான்காக, எட்டாக மடித்து வைத்துக்கொண்டு, கடுமையான வெயிலில் வியர்க்க, விறுவிறுக்க வாடகை சைக்கிளில் பாலசந்தர் வீட்டுக்கு சென்றேன்.
என்னைப் பார்த்த அவர், ‘போட்டோ எடுத்துக்கிட்டு வந்தியா?’ என்று கேட்டார். அப்போது என் அம்மாவை மனதிற்குள் திட்டினேன். மடங்கி, கசங்கிப் போயிருந்த அந்த போட்டோவை கே.பி.யிடம் கொடுத்தேன். என்னை உதவி இயக்குனராக தேர்வு செய்யாத அவர், திடீரென்று நடிகனாக்கிவிட்டார்.
அந்த போட்டோவில் இரண்டு கைகளையும் பலசாலி போல் தூக்கியபடி போஸ் கொடுத்திருப்பேன். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டோ என்னவோ, அவர் இயக்கிய அந்த ‘அரங்கேற்றம்’ படத்தில், அதுபோல் என்னை போஸ் கொடுக்க வைத்து ஒரு காட்சியைப் படமாக்கினார்.
கே.பாலசந்தரை நான் இயக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. இதை பல இயக்குநர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நான் பாலசந்தருடைய பள்ளியில் பயின்றவன். பல சமயங்களில் தன்னுடைய உதவி இயக்குநரைக்கூட இயக்க விட்டுவிடுவார். அந்த மாதிரி நிறைய நேரம் அனுபவித்தவன் நான்.
கேமிரா பேட்டரியை தூக்கிக் கொண்டு வரும் நடிகரை, கே.பி.யின் படப்பிடிப்பில் மட்டுமே பார்க்க முடியும். ‘ஏண்டா இரண்டு பொருளை தூக்கிட்டு வர்றேன்.. உதவி பண்ணக் கூடாதா..?’ என்பார். எங்கே அவர் வாங்கிவிடக் கூடாதே என்று நான் தூக்கி கொள்வேன். இந்த மாதிரி நான் வியந்த விஷயங்கள் அவரிடத்தில் நிறைய இருக்கிறது. ஆகையால், நான் இயக்கவில்லை என்ற வருத்தமெல்லாம் எனக்குள் இல்லை.
பாலசந்தர் இல்லை என்றால், இந்த கமல்ஹாசன் இல்லை. திரையுலகில் நான் இந்தளவு வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் கே.பி. மட்டும்தான். அவருக்கு நன்றி செலுத்தும்விதமாகத்தான், இந்த ‘உத்தம வில்லன்’ படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறோம்..” என்றார் கமல்ஹாசன்.