full screen background image

“பரதக் கலைக்கு கமல், அஜித் இருவரும் துரோகம் செய்துவிட்டனர்..” – அறிமுக இயக்குநர் ஸ்ரீராமின் கோபம்..!

“பரதக் கலைக்கு கமல், அஜித் இருவரும் துரோகம் செய்துவிட்டனர்..” – அறிமுக இயக்குநர் ஸ்ரீராமின் கோபம்..!

முழுக்க, முழுக்க பரதக் கலையை மையமாக வைத்து ‘குமார சம்பவம்’ என்ற தமிழ்த் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம்.

மேலும், படத்தில் நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் பரதத்தை மையமாக வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் ஏன் வந்தது என்ற நமது கேள்விக்கு விரிவாகப் பதில் சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீராம்.

“நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத் துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக் கலைஞராக இருந்தவர். ஏழை படும் பாடு’, ‘சுதர்ஸன்’, ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘மாங்கல்யம்’ போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இப்போது இதே துறைக்கு வந்து விட்டேன்.

நான் பரதத்தை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக  பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். பஞ்ச பூதங்கள் பற்றியும், ஐந்திணைகள், நவக்கிரகங்கள் பற்றியும் நாட்டியத்தில் சொல்லி வருகிறேன்.

கிராமத்துக் காவல் தெய்வங்களான ஏழு முனிகள் பற்றிய  நாட்டியத்தையும் ஆடியிருக்கிறேன். கார்கில் போர் நடந்தபோது அதைப் பற்றியும் பரதத்தில் சொல்லியிருக்கிறேன்.

இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். ‘பரதம் கற்றுக் கொண்டால் பெண் தன்மை வந்து விடும்’ என்ற தவறான ஒரு  விஷயத்தை சினிமாவில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித் நடித்த ‘வரலாறு’ படத்தில் பரதம் கற்றுக் கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக காட்டப்படும். அதே போல ‘விஸ்வரூபம்’ படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக் கலைஞராக இருப்பதால் அவரை, அவரது மனைவி  வெறுப்பதாக காட்டப்பட்டிருக்கும். இது இரண்டுமே தவறு.

பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி  யாருமே கவலைப்படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக் கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றுதான் சொல்வேன்.

இப்படி பரதம் தொடர்பான தவறான செய்திகள் சினிமாவில் தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நானே ‘குமார சம்பவம்’ என்ற படத்தை இப்போது எடுத்து முடித்திருக்கிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக் கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம். படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது. படம் விரைவில் வெளியாகும்…” என்றார் ஸ்ரீராம்.

Our Score