இசையமைப்பாளர்கள் நடிகர்களாக உருமாறும் காலமிது. இப்போதுதான் ‘பென்சில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது நடிகராக அறிமுகமாவிருக்கிறார். இவருக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரும் ரெடி..
இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜே.வடிவேல் இயக்கத்தில், இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் ‘கள்ளப்படம் ‘ என்ற படத்தில், இசையமைப்பாளர் கே ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.
நான்கு இளைஞர்களையும், திரையுலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எதிர்கால கனவுகளையும் பற்றிய படம் இது.
அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே.வடிவேலு, இசை அமைப்பாளர் கே, மற்றும் இந்த படத்தின் ஒளிபதிவாளரும், படதொகுப்பாளரும் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர். ஒரு படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்களே, அப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருப்பது தமிழ்ச் சினிமாவில் இதுவே முதல் முறையாகும் .
கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி ப்ரியா, இவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் படத்தின் பிரதான பாத்திரங்களும் அமையப் பெற்றுள்ளன.
‘கள்ளப்படம்’ திரைப்பட பாடல்களின் முக்கிய அம்சம் பெண்களுக்காக மட்டுமேயான வகையில் கே இசை அமைத்து இருக்கும் பாடலாகும். ‘கும்கி’ புகழ் மகிழினி குரலில் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
பெண்களை கௌரவிக்கும் இந்த பாடலின் ஆசியோ என்னவோ, தயாரிபாளர்களின் சீரிய முயற்சியால் அடுத்த கட்ட இசை அமைப்புப் பணியை ஆஸ்திரேலியாவில் தொடர உள்ளனர். முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இசை பதிவு செய்யும் இந்திய இசை அமைப்பாளர் என்பதால் இசையமைப்பாளர் கே-வின் நடையிலும் கங்காரூவின் துள்ளல் தெரிகிறது, அது இசையிலும் வெளிப்படும் என்பது உறுதி.