எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்கும் படம் ‘களவு தொழிற்சாலை’.
இந்தப் படத்தில் ஜெய்ருத்ரா என்ற கதிர் – வம்சி கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் மூ.களஞ்சியம் நடிக்கிறார். மற்றும் நட்ராஜ்பாண்டியன், செந்தில்,ரேணுகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டி. கிருஷ்ணசாமி எழுதி, இயக்கியிருக்கிறார்.
“படத்தின் கதையை படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க..” என்றே சொல்லிப் பழகிய திரையுலகத்தில் “படத்தின் கதை இதுதான் ஸார்…” என்று வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் இயக்குநர் டி.கிருஷ்ணசாமி..
“சர்வதேச சிலை கடத்தல்காரன் ஒருவனின் பயணம்தான் இந்த படத்தின் மையக் கரு. கதையின் முக்கிய பகுதி கோவிலின் உள்ளேயும், சுரங்கத்தின் உள்ளேயும் நடைபெறுவதால் அதற்குத் தோதான கோவில்களையும், சுரங்கங்களையும் தேடி கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ மீட்டர் அலைந்திருக்கிறோம்.
தென்னகத்தில் உள்ள பாழடைந்த புழக்கத்தில் இல்லாத பல சுரங்கங்களை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்த பின்பு அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த சிலருடன் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறிய சில வரலாற்றுக் குறிப்புகளை வைத்து தீவிரமாக அலசி இருநூறு அடி நீளத்திற்கு அமைக்கப்படிருகிறது சோழர் காலத்திய சுரங்கம் செட். 200 அடி நீளமுள்ள அந்த சுரங்கத்தில் இரவு, பகல் என்று பத்துக்கும் மேற்ப்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காற்றும் ஒளியும் புகமுடியாதபடி அமைக்கப்பட்ட அந்த சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்குள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மிகவும் சிரமப்பட்டுவிட்டனர்.
சுரங்கத்தின் நுழைவு வெளிப்பகுதி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாழடைந்த நிலையில் இருக்கும் ஒரு சாதுக்கள் மண்டபத்தை பல மாதங்களாக அலைந்து தஞ்சை பகுதியில் தேடி கண்டுபிடித்து படமாக்கினோம். அந்த பாழடைந்த மண்டபத்திற்கு அருகில் உள்ள அந்த கிராம மக்களே மண்டபத்திற்குள் சென்று பல தலைமுறை ஆகிவிட்டது என்றார்கள். படத்தின் திரைக்கதைக்கு இந்த மண்டபம் பெரிதும் வலு சேர்த்திருக்கிறது..” என்கிறார் இயக்குனர்.
களவுத் தொழிற்சாலையின் தலைப்பு இந்தக் கதைக்கு மிக பொருத்தமாகத்தான் இருக்கிறது..!