full screen background image

‘கைதி’ – சினிமா விமர்சனம்

‘கைதி’ – சினிமா விமர்சனம்

Dream Warrior Pictures சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு,  S.R.பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து  இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு செய்துள்ளார். N.சதீஷ்குமார் கலை இயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து வசனம்  எழுதியுள்ளனர். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியான நரேன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றுகிறார். ஒரு இரவில் 900 கிலோ கோகையின் போதைப் பொருளைத் தன்னுடைய நெருக்கமான காவலர்கள் துணையுடன் கைப்பற்றுகிறார் நரேன். கூடவே போதை மருந்துடன் வந்த நபர்களையும் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லாக்கப்பில் அடைத்து வைக்கிறார்.

இந்த போதை மருந்து சாம்ராஜ்யத்தின் தளபதி ‘அடைக்கலம்’ என்பவன். அவனையும், அவன் தம்பியான ‘அன்பு’வையும் இதன் மூலமாக வெளியில் வரவழைத்து கைது செய்ய திட்டம் தீட்டுகிறார் நரேன். ஆனால் இதனை உடைத்து அந்தப் போதை பொருளை கடத்தல்காரர்களிடத்திலேயே ஒப்படைக்க நினைக்கிறார் ஊழல் பேர்வழியான மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் இயக்குநரான ஹரீஸ் பெராடி.

இவர் செய்யும் குழப்பத்தில் ஓய்வு பெறப் போகும் ஐ.ஜி.யான மாசிலாமணி கொடுக்கும் விருந்தில் கலந்து கொண்ட சென்னை மாநகர அனைத்து போலீஸ் உயரதிகாரிகளும் மயக்கமடைகிறார்கள். “இவர்கள் இப்படி மது அருந்தி மயக்கமடைந்திருப்பது வெளியில் தெரிந்தால் காவல்துறையின் பெயர் கெட்டுப் போய்விடும். அதோடு நானும் நிம்மதியாக ரிட்டையர்டாக முடியாது என்பதால் எப்படியாவது யாருக்கும் தெரியாமல் எங்களைக் காப்பாற்றிவிடு…” என்கிறார் ஐ.ஜி.

இதனால் மொத்த அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறார் நரேன். ஆனால், முந்தைய ஆபரேஷனில் கையில் காயம் பட்டு் கட்டுப் போட்டிருப்பதால் அவரால் எந்த வண்டியையும் ஓட்ட முடியாத நிலை.

இப்போது விருந்துக்கு வந்த ஒரு போலீஸ் அதிகாரி சந்தேகக் கேஸில் பிடித்து வந்த கார்த்தியை அங்கேயிருக்கும் லாரியை ஓட்டச் சொல்கிறார் நரேன். கார்த்தி அன்றைக்குத்தான் ஒரு கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார்.

இதுநாள்வரையிலும் தான் பார்த்திராத தனது மகளைப் பார்க்க திருச்சி போய்க் கொண்டிருக்கிறார். பேருந்து நிலையத்தில் அந்த போலீஸ் அதிகாரியிடம் எக்குத்தப்பாக சிக்கிவிட்டார். இப்போது நரேன் பல வாக்குறுதிகளை அளிப்பதையடுத்து, லாரியை ஓட்ட ஒத்துக் கொள்கிறார் கார்த்தி.

ஆனால் இதே நேரம் போதை மருந்து கும்பல் மொத்தமும் இரண்டு ஆபரேஷன்களில் இறங்குகின்றன. ஒன்று.. நரேனின் டீமை கொலை செய்து அவர்களது தலையை மட்டும் வெட்டிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்குப் பரிசாக கரன்ஸிகளை அள்ளுவது. இரண்டு போதை மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவற்றை மீட்பது.

இந்த இரண்டுக்காக இவர்கள் புறப்பட்டு வர.. இதைத் தடுக்க தனது ஒற்றைக் கையோடும், சரிவர புரிந்து கொள்ளாத டிரைவர் கார்த்தியோடும், அரைவேக்காட்டுத்தனமான புரிதல் உள்ள லாரியின் கிளீனருடனும் போலீஸ் அதிகாரி நரேன் போராடுகிறார்.

நரேன் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

1976-ம் ஆண்டு John Carpenter என்ற அமெரிக்க இயக்குநரின் இயக்கத்தில் வெளியான ‘Assault on Precinct 13’ என்னும் ஹாலிவுட் படத்தின் கதையோடு, இந்தக் ‘கைதி’ படத்தின் கதை பெரும்பாலும் ஒத்துப் போகிறது..! முறைப்படி அனுமதி வாங்கினார்களா இல்லையா என்பது தெரியவில்லை..!

நாயகி இல்லை. டூயட்டுகள் இல்லை.. ஆனால் நாயகத்துவம் மட்டுமே இருக்கிறது. ஒரே இரவில் நடக்கிறது. அதுவும் சாலைப் பயணத்தில்.. அதிகப்படியான சண்டை காட்சிகள்.. இப்படியொரு சிக்கலான கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட கார்த்திக்கு முதற்கண் நமது பாராட்டுக்கள்.

கார்த்தி நாயகன் என்றாலும் கதையும், திரைக்கதையும்தான் நாயகர்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் கதையும், திரைக்கதையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட்டு இணைக்கப்பட்டுள்ளன.

முதலில் சாந்தமாக அறிமுகமாகும் கார்த்தி, பிரியாணியைப் பார்த்தவுடன் பதமாக அமர்ந்து விருந்துண்டுவிட்டு லாரியை ஓட்ட எத்தனிக்கும் தருணத்தில்தான் படமே துவங்குகிறது.

லாரியை ஓட்டிக் கொண்டே போகப் போக.. நரேனின் கதைக்குள் அவர் அடைக்கலமாகும்விதம் திரைக்கதையில் மிக அழகாக வரையப்பட்டிருக்கிறது. இதற்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள் நடிகர்கள். மிகவும் சிரமப்பட்டு இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

சண்டை காட்சிகளில் உச்சபட்சமான பல காட்சிகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் உக்கிரமாகப் படமாக்கியிருக்கிறார்கள். இதனாலேயே ஹீரோயிஸ படமாகவும் இது தென்படுகிறது. அடிதடியில் சளைக்காத வண்ணம் புதிய, புதிய வகையில் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் சண்டை இயக்குநரும் பாராட்டுக்குரியவர்.

கூடவே வரும் இளைஞன் தீனாவுடன் வாய் கொடுத்து அவனுடைய துடுக்குத்தனமான பேச்சிலும் லைட்டான காமெடியை வரவழைத்து அந்தத் தட தட லாரி ஓட்டத்திலும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் கார்த்தி.

இந்த நேரத்திலும் தீவிர சிவ பக்தனாக விபூதியை எடுத்து பூசிக் கொண்டு கச்சிராயாணம் பாடி சிவனை வணங்கும் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யமானது.

அப்படி ஒரு முறை விபூதியை தான் பூசும்போது பின்னால் இருக்கும் தீனாவிடம் நீட்ட.. அவனோ “இதிலெல்லாம் நம்பிக்கையில்லை…” என்று சொல்ல, சட்டென்று “வரும்…” என்று அமைதியாக கார்த்தி சொல்லும் பதில், அனைவருக்குமான பதிலாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“ரொம்ப பேசுற நீ..!!” என்று தீனாவை, நரேன் கடிந்து கொள்ளும் காட்சியில் அவன் சொல்லும் பதில் செம அலப்பறை.. அந்த அளவுக்கு தீனா என்ற அந்த இளைஞனுக்கும் உரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கார்த்தி “நான் இத்தனை வருஷமா கெட்டவங்ககிட்டயே வாழ்ந்துட்டதால முதல் முறையா ஒரு நல்லவனை பார்த்திருக்கேன். அவனுக்காக நான் இதை செய்றேன்…” என்று சொல்லும்விதம் அவருடைய அனைத்துவித அட்ராசிட்டிகளையும் நியாயமாக்கிவிட்டது.

தனது மகளின் குரலை முதன்முதலாகக் கேட்டவுடன் அவர் காட்டும் நடிப்பும், சொட்டுக் கண்ணீரும், கூடுதலாக தேங்கி நிற்கும் கண்ணீருமாய் அவருடைய முகத்தில் தெரியும் அப்பன் என்ற பாசமும் அற்புதமான இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.

தான் ஆசையாய் வாங்கி வந்த தோடை நரேனின் கையில் கொடுத்து அவருடைய பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதும் கார்த்தியின் கேரக்டரை வெகுவாக உயர்த்தியிருக்கிறது.

ஒற்றைக் கையோடு மிகுந்த கஷ்டத்திற்கிடையில் இஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் நரேன். தன்னுடைய ஆபரேஷனை கார்த்திக்கு புரிய வைக்க அவர் படும் கஷ்டமும்.. கூடவே ஒரு செவ்வாழை இருப்பது தெரியாமல் வழி முழுவதும் எதிரிகளை சந்தித்துவிட்டு அவர் படும் துயரமும் தாங்க முடியாதது. அத்தனைக்கும் அவர் அடிக்கடி சொல்லும் “இத்தனை போதை மருந்தும் மார்க்கெட்டுக்கு வந்தால் நமது இளைய சமுதாயத்தின் கதை என்னாவது..?” என்பதுதான் நரேனின் இத்தனை கஷ்டத்தையும் நியாயப்படுத்துகிறது..!

வழமையான வில்லன்களாக ‘அடைக்கலம்’ என்னும் ஹரீஷ் உத்தமன்.. அன்பு.. கடத்தல் கும்பலில் இருக்கும் போலீஸ் அதிகாரி.. என்று இந்தப் பக்கமும் வில்லத்தனத்தை கொட்டியிருக்கிறார்கள்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஜார்ஜுக்கு இத்திரைப்படம் மிக முக்கியமான படம். இன்னும் டூட்டிலேயே ஜாயிண்ட் செய்யவில்லை. அதற்குள்ளாக ஒரு ஆபரேஷனில் ஈடுபட்டு தனது டிபார்ட்மெண்ட் விசுவாசத்தைக் காட்டும் இவரது நடிப்பில் அட்சர சுத்தம்.

இத்தனை களேபரத்திலும் சின்னச் சின்ன லைட் காமெடியாகவும் சில காட்சிகள் படத்தில் தானாகவே அமைந்துள்ளன. “என்ஜீனீயரிங் படிச்சுட்டு இப்படி குடிச்சு கூத்தடிக்கலாமாப்பா…?” என்று ஜார்ஜ் கேட்கும்போது பட்டென்று “அதனாலதான் குடிச்சோம்..” என்று வரும் பதிலில் தியேட்டர் அதிர்கிறது.

அடைக்கலத்தின் பேச்சுக்களை வெளியில் கேட்காமல் தடுக்க வேண்டி மாணவர்களில் ஒருவன் செய்யும் டேப் ரிக்கார்டர் செட்டப் தூள்.. அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளையெல்லாம் எப்படித்தான் இயக்கினார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு உயிர்ப்பாக இருக்கின்றன அந்தக் காட்சிகள்.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘மாநகர’த்திலும் இரவு நேரத்தில்தான் அதிகக் காட்சிகளை படமாக்கியிருந்தார். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் லைட்டிங்ஸை மிகச் சரியான விதத்தில் கலந்து கொடுத்திருந்தாலும் ஆபரேட்டிவ் கேமிராவில்தான் வித்தை காட்டியிருக்கிறார் சத்யன் சூரியன்.

மொத்தச் சண்டை காட்சிகளையும் படமாக்கியிருக்கும்விதத்திற்கே இந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் இன்னும் அதிகமான ஒரு பெயரை இவருக்குப் பெற்றுத் தருகிறது. லாரியை பல்வேறு இடங்களில் மடக்கும் காட்சியும், வெறும் லாரியை ஓட வைத்து இவர்கள் மூணு பேரும் பின்னாலேயே ஓடி வந்து ஏறும் காட்சியும் பரபரப்பின் உச்சக்கட்டம்.

பாடல்களே இல்லை என்றாலும் பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் ஒரு சின்ன கல்லின் சப்தத்தைக்கூட மறவாமல் பதிவு செய்திருக்கிறார். பாராட்டுக்கள். இதேபோல் ஒலி வடிமைப்பு செய்தவருக்கும் ஒரு ஷொட்டு. அற்புதமாக அனைத்து ஒலிகளையும் இணைத்திருக்கிறார். எதுவும் குறைவில்லை.

சண்டை இயக்குநருக்கும், படத் தொகுப்பாளருக்கும் சிறப்பு பாராட்டுக்கள். சிறப்பான சண்டை காட்சிகளை அதைவிட சிறப்பாக படத் தொகுப்பாளர் தொகுத்தளித்திருக்கிறார். அதிலும் லாரி மீது மரத்தின் கிளைகள் பட்டு அதன் கண்ணாடிகள் நொறுங்குவதை போன்ற செட்டப் சண்டையை தொகுத்தளித்திருக்கும்விதம் அருமை.

இப்படி பல வல்லுநர்கள் சேர்ந்துதான் இந்தப் படைப்பை சிறப்பாகப் படைத்திருக்கிறார்கள்.

இருந்தும் கதையில் மிகப் பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுவது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை இப்படி ஒரு ரவுடி கும்பல் முற்றுகையிட தைரியமாக வருவார்களா என்பதுதான்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் நான்கு கான்ஸ்டபிள்களும் வரும் ஆபத்தை பார்த்து பயந்து ஓடி விடுவதைப் போல வைத்திருப்பதும் நிச்சயம் ஏற்புடையதல்ல.

இப்படியொரு சம்பவம் நடைபெறப் போகிறதென்றால் அடுத்த நொடியே போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். அல்லது தகவல் தானாகவே போயிருக்கும்.

மொத்த போலீஸ் உயரதிகாரிகளும் இப்படி மயங்கிக் கிடக்க… அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்பதெல்லாம் இந்தக் கதைக்காக இயக்குநர் வகுத்துக் கொண்ட திரைக்கதையாகத்தான் இருக்க முடியும். நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.

இவ்வளவு தூரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தாக்கப்பட்டு வரும் வேளையில் யாருமே அதைக் கவனிக்கவில்லை என்னும் விஷயத்தை, இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது புரியவில்லை.

மேலும், ஒரு முறை லாரியில் இருக்கும் ஹரீஷ் பெராடியின் உளவாளி நரேனின் துப்பாக்கியைப் பிடித்திழுக்கும்போது சட்டென்று அவர் சுதாரித்திருக்க வேண்டாமா.. யாரோ ஒருவன் முழித்திருக்கிறான்.. நமக்கு எதிரியாக இருக்கிறான் என்று..! ஆனால் நரேன் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் போவது இத்திரைக்கதையில் இருக்கும் இன்னுமொரு சொதப்பலைக் காட்டுகிறது.

அதேபோல் இத்தனை கத்திக் குத்துக்களையும், அடிகளையும் வாங்கிக் கொண்டு கார்த்தி மறுபடியும் எழுந்து வந்து சண்டையிடுவதும், ஜெயிப்பதும் கொஞ்சம் நம்மையும் யோசிக்க வைக்கிறது..!

இவ்வளவையும் திரைக்கதையில் மிக எளிதாக சமன்படுத்தியிருந்தால் நிச்சயமாக இத்திரைப்படம் போலீஸ்-திருடன் ஸ்டோரி ஹிஸ்டரியில் முக்கியமான திரைப்படமாக இடம் பெற்றிருக்கும்.

எப்படியிருந்தாலும் கார்த்தியின் திரையுலக வரலாற்றில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இடம் பிடித்துவிட்டது. காரணம், இதன் பரபர திரைக்கதையும், ஆக்சன் காட்சிகளும், அழகான இயக்கமும்தான்..!

இந்த 2019 தீபாவளியில் நம்மை கைது செய்த ‘கைதி’ படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

Our Score