பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கைலா.’
இந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் கௌசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர், மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா, இவர்களுடன் சர்வதேச கராத்தே பயிற்சியாளரும், படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – பாஸ்கர் சீனுவாசன், ஒளிப்பதிவு – பரணி செல்வம், இசை – ஸ்ரவன், பாடல்கள் – வடிவரசு, கலை இயக்கம் – மோகன மகேந்திரன், படத் தொகுப்பு – அசோக் சார்லஸ், நடன இயக்கம் -எஸ்.எல்.பாலாஜி, மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.சுப்புராஜ்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் பேசும்போது, “இது வழக்கமான பேய் படமாக இல்லாமல் வித்தியாசமான விஞ்ஞானப்பூர்வமான பேய் படமாக உருவாகியிருக்கிறது. இது முழுக்க, முழுக்க திரில்லர் படமும்கூட.
உலகம் முழுவதும் இன்றுவரை பேய் என்றால் ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. உலகில் ஆவிகள் இருக்கிறதா…? அப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்கள் பழி வாங்குமா…? இந்தக் கேள்விகளுக்கு இப்போதுவரையிலும் விஞ்ஞானப்பூர்வமாக பதில்கள் இல்லை. ஆனாலும் நம்மைச் சுற்றிலும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘கைலா’ திரைப்படம்.
நாயகி தானா நாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மர்மம் நிறைந்த வீடு. அந்த வீட்டில் ஏற்கெனவே இரண்டு தற்கொலைகள், மூன்று எதிர்பாராத திகில் சம்பவங்கள்.. நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. அந்த வீட்டில் நாயகி நுழைந்தவுடன் அடுத்து நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை. இது படம் பார்க்கும் ரசிகர்களை வியப்படைய செய்யும்.
தேவ் என்ற வில்லன் கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காக 8 வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அந்தக் காட்சி மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது..” என்றார் தயாரிப்பாளரும், இயக்குநருமான பாஸ்கர் சீனுவாசன்.