ஒளிப்பதிவாளர் – இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கடுகு’.
நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த ‘கடுகு’ திரைப்படத்தை, ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார்.
இந்தப் படத்தில் பரத், விஜய் மில்டனின் சகோதரர் பாரத் சீனி, ராதிகா பிரசித்தா மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் இயக்குநர் ராஜகுமாரனும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கடுகு’ படத்தின் விநியோக உரிமையை ‘2 டி என்டர்டைன்மெண்ட்’ சார்பில் வாங்கி இருக்கும் நடிகர் சூர்யா, இந்த படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன், “இந்த கதையை விஜய் மில்டன் என்னிடம் கூற வரும்போது எனக்கு உண்மையாகவே வியப்பாக இருந்தது. ஆனால் ‘கடுகு’ படத்தின் கதையைக் கேட்ட அடுத்த கணமே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன்.
அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் தரமான கதையம்சம் என இந்த இரண்டும் மிக அழகாக ஒருங்கிணைந்து இருக்கும் கடுகு படத்தில், என்னோட பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
புலி வேஷம் போடும் ஒரு கலைஞனாக நான் இந்த ‘கடுகு’ படத்தில் நடித்து இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக அமைய வேண்டும் என்பதற்காக, என்னை ஏறக்குறைய மூன்று மாதங்கள் தலை சிறந்த புலி வேஷ கலைஞர்கள் சிலரிடம் பயிற்சி மேற்கொண்டேன். பின்புதான் நடித்தேன்…” என்று உற்சாகமாக கூறுகிறார் ராஜகுமாரன்.