டாஸ்மாக் காட்சிகளே இல்லாமல் இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’

டாஸ்மாக் காட்சிகளே இல்லாமல் இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’

ஆச்சரியம்தான்.. ஆனால் இது உண்மைதானாம்.. சூடம் ஏத்தி சத்தியம் செய்யாத குறையாகச் சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

இதுவரையிலான அவரது அனைத்து படங்களிலுமே 5 நிமிடங்களுக்கு ஒரு முறை டாஸ்மாக்கை காட்டிவிடுவார். ஹீரோயின்களை கட்டிப் பிடிக்கிறார்களோ இல்லையோ.. பாட்டிலை தொடாத ஹீரோக்களே இல்லை ராஜேஷின் படத்தில்.

ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது அவர் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் ஒரு டாஸ்மாக் காட்சியோ, குடிக்கும் காட்சிகளோ இல்லையாம்..

அம்மா கிரியேஷன் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - ஜி.வி.பிரகாஷ் குமார், படத் தொகுப்பாளர் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - நா.முத்துக்குமார், இணை தயாரிப்பு - ஆர்.சரவணக்குமார், தயாரிப்பு - டி.சிவா, எழுத்து, இயக்கம் - ராஜேஷ்.

ரோடு பிலிமான 'சரோஜா'விற்கு பின் மீண்டும் ஒரு ஜாலியான ரோடு பிலிமை தயாரிக்கிறார் அம்மா கிரியேஷன் டி.சிவா.

"இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த அழகான ஒரு ரோடு பிலிமாக இருக்கும்.

ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை முக்கிய சாலைகளில் வைத்து படமாக்க வேண்டியிருந்தது. ஆதலால் சென்னையில் ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி, கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கினோம்.

அது தவிர, இப்படத்தில் வழக்கமாக என்னுடைய படத்தில் இடம் பெறும் டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இப்படத்தில் இருக்காது. என்னுடைய முந்தைய படங்களைபோல் இப்படமும் ‘யு’ சான்றிதழ் படமாக இருக்கும். இப்போது படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள்  மிக வேகமாக நடைபெற்று வருகின்றன…" என்றார் இயக்குநர் ராஜேஷ்.