2D Entertainment நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
நாயகனாக கார்த்தி நடிக்க, நாயகிகளாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.
கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், அம்மாவாக விஜி சந்திரசேகர், சித்தியாக பானுப்பிரியா, கார்த்தியின் அக்காள்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், சூரி, மனோஜ்குமார், பொன்வண்ணன், ஸ்ரீமன், சவுந்தரராஜா, மாரிமுத்து, சரவணன், இளவரசு, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – D.இமான், ஒளிப்பதிவு – R.வேல்ராஜ், கலை – வீரசமர், படத் தொகுப்பு – ரூபன், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், கலை இயக்கம் – வீரசமர், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன். தயாரிப்பு நிறுவனம் – 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – பி.பாண்டிராஜ்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியும், குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தியும் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தமிழ் மொழிக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடித்திருக்கும் கேரக்டர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்களை உச்சரித்தால் நிச்சயமாக நாக்கு சுழிக்குக் கொள்ளும். அந்த அளவுக்கு நல்ல, நல்ல தமிழ்ப் பெயர்களை பார்த்து, பார்த்து தேர்வு செய்து வைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதற்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்குள்..!
குடும்பத் தலைவரான சத்யராஜின் கேரக்டர் பெயர் ‘பெருநாழி ரணசிங்கம்’.
இவரது முதல் மனைவியான விஜி சந்திரசேகரின் கேரக்டர் பெயர் ‘வானவன் மாதேவி’.
இரண்டாவது மனைவியான பானுப்பிரியாவின் கேரக்டர் பெயர் ‘பஞ்சவன் மாதேவி’.
சத்யராஜ் – விஜி சந்திரசேகர் தம்பதிகளுக்கு 4 பெண்கள், 1 ஆண்.
இதில் மூத்த மகளான மெளனிகாவின் கேரக்டர் பெயர் ‘மங்கம்மா ராணி’.
இவரது கணவரான சரவணனின் கேரக்டர் பெயர் ‘தாமரை மணாளன்’.
இவர்களது மகனான சூரியின் கேரக்டர் பெயர் ‘சிவகாமியின் செல்வன்’.
இரண்டாவது மகளாக நடித்திருக்கும் தீபாவின் கேரக்டர் பெயர் ‘வேலு நாச்சியார்’.
இவரது கணவரான மாரிமுத்துவின் கேரக்டர் பெயர் ‘மல்லிகை மணாளன்’.
மூன்றாவது மகளான யுவராணியின் கேரக்டர் பெயர் ‘சம்யுக்தா’.
இவரது கணவரான இளவரசுவின் கேரக்டர் பெயர் ‘மாணிக்கம்’.
இவர்களது மகளான பிரியா பவானி சங்கரின் கேரக்டர் பெயர் ‘பூம்பொழில் செல்லம்மா’.
நான்காவது மகளான இந்துமதியின் கேரக்டர் பெயர் ‘பத்மாவதி ராணி’.
இவரது கணவரான ஸ்ரீமனுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் ‘அதியமான் நெடுங்கிள்ளி’.
சத்யராஜின் ஒரே மகனான கார்த்தியின் கேரக்டர் பெயர் ‘குணசிங்கம்’.
இவர் காதலிக்கும் முதன்மை நாயகியான சாயிஷாவின் கேரக்டர் பெயர் ‘கண்ணுக்கினியாள்’.
சத்யராஜின் இரண்டாவது மனைவியான பானுப்பிரியாவுக்கு பிறந்த மகளான ஜீவிதா கிருஷ்ணனின் கேரக்டர் பெயர் ‘ஜான்சி ராணி’. இவருக்கு பேச்சு வராது. இவரது கணவர் சிறு வயதிலேயே அதீத குடியினால் இறந்துவிட்டார்.
ஜான்சி ராணியின் மகளாக நடித்திருக்கும் அர்த்தனா பினுவின் கேரக்டர் பெயர் ‘ஆண்டாள் பிரியதர்ஷிணி’.
ஒரு கிராமம் என்று சொல்லும் அளவுக்கு பரந்து விரிந்திருக்கும் இந்தக் குடும்பத்தில் நடைபெறும் கதைதான் ‘கடைக்குட்டி சிங்கம்’.
கூட்டுக் குடும்பம் உடையாமல் பார்த்துக் கொள்ள நினைக்கும் அக்குடும்பத்தின் கடைக்குட்டிப் பையன், அதற்காக எப்படியெல்லாம் போராடுகிறார்.. என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். விவசாயிகளை தரம் தாழ்த்தி பேசக் கூடாது. பார்க்கக் கூடாது என்பதையும் இந்தப் படம் அழுத்திச் சொல்லியிருக்கிறது.
குடும்பத் தலைவரான சத்யராஜூக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான விஜிக்கு வரிசையாக 4 பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆண் குழந்தைக்காக வேறொரு பெண்ணை மணக்க நினைக்கிறார் சத்யராஜ்.
எவளோ ஒருத்தி தனக்குச் சக்களத்தியாக வருவதைவிட தன்னுடைய தங்கையே தனக்கு சக்களத்தியாக வந்தால் நல்லதுதான் என்று நினைக்கும் விஜி தனது தங்கை பானுப்பிரியாவை கணவருக்கு இரண்டாம்தாரமாக திருமணம் செய்து வைக்கிறார்.
இந்த நேரத்தில் இவர்களின் மூத்த மகள் ஒரு பையனுடன் காதல்வயப்பட.. வேறு வழியில்லாமல் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் சத்யராஜ்.
இப்போது அந்த மகள் கர்ப்பிணியாகி வயற்றைத் தள்ளிக் கொண்டு வரும் வேளையில் பெண்ணின் சித்தியான பானுப்பிரியாவும் சத்யராஜின் கருவை தன் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார்.
பானுப்பிரியாவுக்கு பெண் குழந்தையே பிறக்கிறது. மீண்டும் சோகமாகிறார் சத்யராஜ். ஆனால் அவருக்கு பேரன் பிறக்கிறான். இந்தப் பேரனை மகன் போல வளர்த்துக் கொள்ளுங்கள் என்று மகளே சொல்லியும், சத்யராஜ் அதனை ஏற்க மறுக்கிறார். மீண்டும் தனக்கு பெண் பார்க்க கிளம்புகிறார்.
பரிசம்போடும் வேளையில் முதல் மனைவியான விஜி கருவுற்ற செய்தி கேட்டவுடன் அந்த சம்பந்தத்தையே தேவையில்லை என்று சொல்லிவிட்டு வருகிறார் சத்யராஜ்.
அவர் நினைத்ததுபோலவே விஜி மூலமாக அவருக்கு பையன் பிறக்கிறான். அவன்தான் அந்த வீட்டின் ‘கடைக்குட்டி சிங்க’மான ‘குணசிங்கம்’ என்னும் கார்த்தி.
இந்தக் கார்த்தி பத்தாம் வகுப்புவரையிலும் படித்துவிட்டு அதற்கு மேல் படிக்கப் போகாமல் குடும்பத் தொழிலான விவசாயத்தைப் பார்த்து வருகிறார். இதன் மூலமாகவே மாதம்தோறும் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். நல்ல குணமுள்ளனாகவும், பாசமுள்ளவனாகவும் இருப்பதால் குடும்பத்தினர் அனைவரும் கார்த்தியை தாங்குகின்றனர்.
கார்த்திக்கு இப்போது இரண்டு முறைப் பொண்ணுகள். ஒரு பொண்ணு, அவருடைய சொந்த அக்காள்களில் ஒருவரான யுவராணியின் மகள் பிரியா பவானி ஷங்கர். இன்னொரு பொண்ணு பானுப்பிரியாவின் பேத்தியும், ஒண்ணுவிட்ட அக்காவான ஜான்சி ராணியின் மகளான அர்த்தனா.
இந்த இருவருமே கார்த்தியை தாங்கள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் இருப்பவர்கள். கார்த்திக்கு சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ள தயக்கமாக இருக்கிறது. இருவரில் ஒருவரை திருமணம் செய்தாலும், இன்னொரு அக்கா கோபித்துக் கொள்வாரே.. குடும்பத்தில் குழப்பம் வருமே என்று யோசிக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு பேருந்து பிரயாணத்தில் சந்திக்கும் ‘கண்ணுக்கினியாள்’ என்னும் சாயிஷாவை பார்த்தவுடன் லவ்வாகிறார் கார்த்தி. சாயிஷாவின் சொந்த அத்தையான செந்தியைத்தான் சத்யராஜ் தனது மூன்றாவது சம்சாரமாக்க முயன்று பாதியிலேயே ஓடி வந்திருக்கிறார். இந்த விஷயம் கார்த்திக்கு தெரியாது.
அதோடு சாயிஷாவின் தாய் மாமன் அந்தப் பகுதியில் ஜாதி சங்கத்தின் முக்கியப் புள்ளி. தங்களுடைய சாதியில் இருந்து யார் சாதி விட்டு சாதி கல்யாணம் செய்தாலும் அதைத் தடுப்பதுதான் இவருடைய முதல் வேலை.
ஒரு நாள் பிரியா பவானி, தனது நண்பனுடன் ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது அவனை அடித்து உதைக்கிறான் வில்லன். இதனை கார்த்திக்கு பிரியா போனில் சொல்ல.. கார்த்தி ஓடி வந்து வில்லனின் ஆட்களை அடித்துத் துரத்துகிறார். இதைக் கேட்டு வில்லன் ஆவேசப்படுகிறான்.
இந்த நேரத்தில் கார்த்தியின் வீட்டில் கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் மனோஜ்குமாரின் மகனை தனது சாதியை சேர்ந்த பெண்ணை காதலிக்கிறான் என்கிற ஒரே காரணத்துக்காக கொலை செய்து பிணத்தையும் எரித்துவிடுகிறார் வில்லன்.
இதையறியும் கார்த்தி வில்லனை கைது செய்ய வைக்கிறார். நீதிமன்றத்தில் கடுமையான நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார் வில்லன். அந்த நிபந்தனையின்படி மதுரை, திருப்பரங்குன்றம் அருகே ரோட்டோரமாக இருக்கும் கருவேல மரங்களை வெட்டும் பணியைச் செய்கிறார் வில்லன்.
இதையெல்லாம் செய்துவிட்டு ஜாமீனை தளர்த்திவிட்டு ஊருக்குள் வரும் வில்லன் கார்த்தியை பழி வாங்கத் துடிக்கிறார். அதே நேரம் தனது சொந்த அக்காள் மகளை கார்த்தி காதலிப்பதை அறிந்து மேலும் சூடாகுகிறார்.
இந்தக் காதல் விவகாரம் சத்யராஜ் குடும்பத்திற்குள் தெரிய வர பூகம்பமே வெடிக்கிறது. கார்த்தியின் இந்தக் காதல் முடிவால் பிரியா பவானி ஷங்கரும், அர்த்தனாவும் ஏமாற்றமாகி பெரும் அதிர்ச்சியாகின்றனர். பிரியா விஷ மருந்தைக் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்படுகிறார்.
அர்த்தனாவின் பாட்டியான பானுப்பிரியா தனது பேத்தி அர்த்தனாவை இத்தனை நாட்கள் வீட்டு வேலைக்காரியைப் போல் பயன்படுத்திக் கொண்டு, கடைசியில் ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
மீண்டும் ஒரு பஞ்சாயத்து கூடுகிறது. இந்த நேரத்தில் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்க முனைகிறார் சத்யராஜ். இந்த நேரத்தில் எழும் ஒரு சாதாரண பிரச்சினையை வெளியில் இருந்து சாயிஷாவின் தாய் மாமன் தூண்டிவிட.. பிரச்சினை அடிதடியாகிறது. இதனால் அனைத்து மாப்பிள்ளைகளும் முறுக்கிக் கொள்கிறார்கள். மகள்களும் “இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே வர மாட்டேன்…” என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
சத்யராஜ் இத்தனை களேபரங்களையும் பார்த்து மனம் நொந்து போகிறார். தனது குடும்பத்தினர் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு குரூப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்பாவின் இந்த ஆசையை நிறைவேற்றவாவது பிரிந்து போன தனது குடும்பத்தை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும் என்று போராடுகிறார் கார்த்தி.
அவரது ஆசை நிறைவேறியதா..? பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா..? கடைசியில் கார்த்தி யாரை திருமணம் செய்தார்…? என்பதுதான் இந்தக் கூட்டுக் குடும்பக் காவியத்தின் திரைக்கதை.
கார்த்தியின் நிஜமான கேரக்டருக்கும், தோற்றத்திற்கும் ஏற்ற கேரக்டர். அல்வா போல் கிடைத்த வாய்ப்பை அல்வா துண்டாக மாற்றி பரிமாறியிருக்கிறார்.
குடும்பத்தினருக்கு செல்லப் பிள்ளை.. விவசாயத்தை காதலிக்கும் ஒரு பையன்.. குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக காதலிக்கத் தயங்காதவர்.. காதலிக்காக தனது குடும்பத்தை விட்டுக் கொடுக்க மறுப்பவர்.. காதல் என்பதே கல்யாணத்திற்காகத்தான் என்பதை புரிய வைக்கும் கேரக்டர்.. ஜாதிப் பிடிப்பு என்பதெல்லாம் தமிழகத்திற்கு தேவையில்லை என்பதைச் சொல்லும் இளைஞர் என்று பலவித பரிமாணங்களில் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் கார்த்தி.
பேருந்தில் சாயிஷாவுக்காக பரிந்து பேசத் துவங்கி.. பின்பு அவருடைய கல்லூரியிலேயே போய் விவசாயத்தை பற்றிப் புகழ்ந்து பேசி நல்ல பெயர் எடு்த்து காதலுக்கு ஓகே வாங்குவது என்பதுவரையிலும் சராசரியான காதலனாகவும், படமாகவும் இருக்கிறது. பின்புதான் கதையின்போக்கில் கார்த்தியின் கேரக்டரும் திசை மாறுகிறது.
குடும்பத்தை ஒன்று சேர்க்க அவர் படும் அல்லலும், கோவிலில் தான் காதல் திருமணம் செய்ய முடிவெடுத்தது ஏன் என்பதை அவர் சொல்லும்விதமும், அக்காள்களுக்காக அப்பாவிடம் மன்றாடுவதும், குடும்பத்திற்காக அப்பாவிடம் பேசுவதுமாக ஒரு கடைக்குட்டி பையனின் கஷ்டம் என்றால் என்னவென்பதை இடைவேளைக்கு பின்பாக உணர்த்தியிருக்கிறார் கார்த்தி.
இவருடைய நடிப்பினாலேயே படம் பார்க்க வந்த ரசிகர்கள் நிச்சயமாக தங்களது குடும்பக் கதையுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்பது உறுதி.
இவருக்குத் துணையாக அக்காள் மகனாக வரும் சிவகாமியின் செல்வனான சூரி சிற்சில இடங்களில் பலத்த கை தட்டலை வாங்குகிறார். பாட்டி தனது சேலை முந்தானையால் லேசாக விசிறிக் கொண்டிருப்பதை கமெண்ட் செய்யும்போது தியேட்டரே அதிர்கிறது.
இதேபோல் சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜூவல்லரி உரி்மையாளர்கள் விளம்பரங்களில் நடிப்பது பற்றி சொல்லி “டிவில அதைப் பார்க்குறவங்களுக்குத்தான் தெரியும் அது எவ்ளோ பெரிய கஷ்டம்ன்னு..” என்று கடிக்கும் இடத்திலும் கை தட்டல்கள் திரள்கின்றன.
இடையிடையே சமரசம் பேச வரும்போது ஒவ்வொரு சித்திகளுக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்து ‘ரத்தக் கண்ணீர்’, ‘பாசமலர்’, ‘உளவுத்துரை’ என்று அழைத்து பேசுவது நல்ல நகைச்சுவை. சூரியின் இருப்பு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.
நாயகிகளில் சாயிஷா அளவுக்கு மற்ற இருவருக்கும் வாய்ப்பு அதிகமில்லை என்றாலும் சாயிஷா அழகிலும், நடனத்திலும், நடிப்பிலும் குறை வைக்காமல் இருக்கிறார். பிரியா பவானிக்கு ஒரேயொரு அழுகை காட்சியிலும் தனது சீரியல் நடிப்பு அனுபவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இன்னொரு நாயகி அர்த்தனாவுக்கும் அழுகையுடன் கூடிய நடிப்பைக் காட்டும் காட்சிகள் கிடைத்திருக்கின்றன. கிடைத்ததை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
அக்காள்மார்களில் மெளனிகாவும், யுவராணியும், இந்துமதியும், தீபாவும் தங்களுக்கான வேடத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறார்கள். அதோடு இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்கூட நிஜத்தில் நடப்பது போலத்தான் உள்ளது.
எப்போதும் மஞ்சள் பூசிய முகத்துடன் எப்போது வேண்டுமானாலும் சாமி இறங்கும் தன்மையுடன் இருக்கும் மெளனிகாதான் சூரியின் அம்மா. இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கிறது. கல்யாணத் தகவலை சொல்ல வரும்போது இவர்களது வீட்டில் நடக்கும் சம்பவங்களே இதற்கு சாட்சி..!
இதேபோல் யுவராணி சொத்துக்களை பிரித்துக் கொடுக்கும் காட்சியில் “இப்போதே கோடி சேலையைக் கொடுத்திரு. வாங்கிட்டு போயிடறோம்…” என்று பிளாக் மெயில் செய்ய.. மிகப் பெரிய அழுவாச்சி காவியத்தையே அந்தக் காட்சியில் படைத்திருக்கிறார் இயக்குநர்.
மூத்த அக்காள், அடுத்த அக்காள்களின் கணவர்களான சரவணனும், மாரிமுத்துவும் அண்ணன், தம்பிகளாக இருந்தும் சொத்துப் பிரச்சினையில் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருப்பதும், இது தொடர்பான காட்சிகளும் ஒருவகையில் தமிழ்ச் சமூகத்தை பிரதிபலிப்பதுதான்.
சரவணன், மாரிமுத்து, உளவுத்துறை அதிகாரியாக பந்தா காட்டும் கடைசி மாப்பிள்ளை ஸ்ரீமன், பிரியாவின் அப்பாவான இளவரசு என்று மாப்பிள்ளைகளின் அட்டூழியத்தையும் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கார்த்தி, பிரியாவை புறக்கணித்தது பற்றி கொதித்து எழும் இளவரசு வீட்டுக்குள் போய் கட்டிங்கை போட்டுவிட்டு வெளியில் வந்து, வந்து பேச.. “இந்தாளுக்கு மட்டும் எங்கிட்டிருந்து லீவு நாள்லகூட பாட்டில் கிடைக்குது..?” என்று சகலைகள் மாநாடு போட்டு பேசுவதெல்லாம் அக்மார்க் காமெடி.
சத்யராஜுக்கு குடும்பத் தலைவர் கேரக்டர் என்பதால் அதற்கான தோரணையுடன் மட்டுமே நடித்திருக்கிறார். அவரது வழக்கமான ஸ்டைலை விட்டுவிட்டு ரணசிங்கமாகவே மட்டும் காட்சியளிக்கிறார்.
அடக்கமான மனைவிகளாக விஜியும், பானுப்பிரியாவும். தனது பேத்தியை கார்த்தி புறக்கணித்ததால் கோபமடையும் பானுப்பிரியா, “என்னை அத்து விட்ருங்க…” என்று கோபப்படும் காட்சியிலும், வீடு திரும்பினாலும் வெளி வாசலிலேயே நின்று பஞ்சாயத்து பேசும் காட்சியிலும் தனது இரண்டாவது மனைவிக்கான கதாபாத்திரத்தை நன்கு செய்திருக்கிறார்.
சாயிஷாவின் அப்பாவாக பொன்வண்ணன் சில காட்சிகளே ஆனாலும் யதார்த்தமான அப்பாவாக நடித்திருக்கிறார். வில்லனாக நடித்தவருக்கு இத்தனை ஹிப் கொடுத்து.. பேச வைத்து.. கடைசியில் அவர் எதுவுமே செய்யாமல் போவதைக் காண்பித்து வீணாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்திற்கு வில்லன் தேவையே இல்லை. காதலுக்கு வில்லன் இல்லை என்றும், வீட்டுக்குள் எழும் போராட்டத்தை ஹீரோ சமாளிப்பதே படம் என்றும் மாற்றியிருந்தால் நிச்சயமாக படம் இதைவிட சிறப்பாகத்தான் இருந்திருக்கும்.
அதிலும் சண்டை காட்சிகளும் இந்தப் படத்தில் தேவையில்லாதது. இது அக்மார்க் ஒரிஜினல் குடும்பப் படமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். கார்த்தியின் ஹீரோயிஸத்திற்காக சில சண்டை காட்சிகளை வைத்திருக்கிறார்கள் போலும். அதிலும் கடைசி சண்டை காட்சி தேவையே இல்லாதது. முன்பே படம் முடிந்துவிட்ட பீலிங்கை கொடுத்துவிட்டதால்.. அதில் ரசிகர்கள் யாருக்கும் மனம் லயிக்கவில்லை.
அதிலும் வில்லன் கடத்தி விட்டதாகச் சொல்லும் மூன்று பெண்களுமே காருக்குள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருப்பதும், ஹீரோவை சண்டையிடுமாறு ஏற்றிவிடுவதுமாக அந்தக் கிளைமாக்ஸ் காட்சி சட்டென்று காமெடியாகிவிட்டது. “விவசாயிகளெல்லாம் இந்தப் பக்கம் வந்திருங்க. நான் விவசாயிகளையெல்லாம் அடிக்க மாட்டேன்…” என்று கார்த்தி ஹீரோயிஸம் பேசுவது காமெடியாக இருந்தாலும் தேவையில்லாதது..!
வேல்ராஜின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் பச்சைப் பசேலேன்று காட்சியளிக்கிறது. கிராமத்து வயல் வெளிகளையும், வீடுகளையும், தெருக்களையும், ஊரையும் காண்பித்து அழகுபடுத்தியிருக்கிறார் வேல்ராஜ்.
ரேக்ளா ரேஸ் காட்சி அதகளம். தமிழ்ச் சினிமாவில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு ரேக்ளா ரேஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகளில் மாண்டேஜ் காட்சிகளாக திரைக்கதையை நகர்த்தியிருந்தாலும் அவைகளும் ருசிகரமாக தெரியப்படுத்த கேமிராமேன்தான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். சாயிஷாவுக்கு மிகப் பெரிய உதவியை ஒளிப்பதிவாளர்தான் செய்திருக்கிறார்.
டி.இமான் இசையில் ‘சண்டைக்காரி’ பாடலும், ‘வா ஜிக்கி’ பாடலும் கேட்கவும் பார்க்கவும் வைத்திருக்கிறது. ரூபனின் படத் தொகுப்பும் இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கிறது. இத்தனை பெரிய கூட்டத்தை.. இத்தனை பேரின் பேச்சுக்கள் மூலமாய் நகரும் திரைக்கதையை எப்படித்தான் கத்தரித்து ஒட்டினார்களோ தெரியவில்லை. ரூபனுக்கு ஒரு பெரிய சல்யூட்..!
முதற்பாதியில் பாதி காட்சிகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் எடு்த்துக் காட்சிகளை திரைக்கதையில் அழகாக புகுத்தியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இவருடைய சிறப்பான திரைக்கதைதான் படத்தை முதற்பாதியை மிக, மிக சுவாரஸ்யமாக ரசிக்க வைத்திருக்கிறது.
இருந்தும் படம் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறது என்கிற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. சத்யராஜின் ஆண் குழந்தைக்கான ஏக்கம் சரி என்றும், தவறு என்றும் சொல்ல நிறையவே விஷயங்கள் உள்ளன என்றாலும் குழந்தைக்காகவே இன்னொரு திருமணம் என்று போவதும், அதிலும் மூன்றாவது திருமணத்திற்கும் தயாராவது கண்டித்தக்கது என்று எங்கும் சொல்லப்படவே இல்லை. அதனை கடைசியிலாவது காட்சிப்படுத்தியிருக்கலாம்.
அதேபோல் சத்யராஜின் ஆணாதிக்க சிந்தனைதான் “எனக்கு இப்போ என் பிள்ளை நல்லாயிருந்தாலே போதும்…” என்று நினைப்பது. கார்த்தியின் நல்ல எண்ணத்தை அவர்தான் மகள்களிடம் எடு்த்துச் சொல்லியிருக்க வேண்டும். அதைச் சொல்லாமல் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி, கோபப்படுத்தி, இவரும் அதனால் கோபமடைந்து கோடி சேலை கொடுக்கும் அளவுக்கு போவதெல்லாம் டூ மச் மட்டுமல்ல.. திரி மச்சான திரைக்கதையும்கூட.
இரண்டாவது மனைவியான பானுப்பிரியாவை சமாதானம் செய்யக்கூட மனமல்லாமல், போனவரை திரும்ப அழைத்துவரக்கூட பிரியப்படாமல் தனது மகன் மூலமாக அவர் செய்யும் சமாதானப்படலம் ஏற்புடையதல்ல. இதையெல்லாம் அவர்தான் முன்னால் நின்று செய்திருக்க வேண்டும்.
இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் தொலைக்காட்சி தொடர்களின் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொல்லும் சில காட்சிகளில் ரொம்பவே போரடிக்கிறது.
ஆனால், திரைக்கதையில் அனைத்து கேரக்டர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர். கோவிலில் நடைபெறும் மோதலின்போது பிரியா பவானி ஷங்கர் படித்த பெண் என்பதால் புரிந்து கொண்டு விலகுவதும், கார்த்தி அர்த்தனாவை திருமணம் செய்ய தயார் என்பதும், அர்த்தனாவின் தாயார் அதைத் தடுத்து கையோடு அழைத்து வந்திருந்த சாயிஷாவை கொண்டு வந்து நிறுத்துவதும்.. அக்மார்க் சீரியல்தனம். சினிமாத்தனம்தான்..! ஆனால் சுவாரஸ்யம்.
அதுவரையிலும் பேசவே பேசாமல் அமைதியாக இருந்த அந்த அக்காதான் கடைசியாக அனைவரைவிடவும் கார்த்தியை புரிந்து கொண்டு செயல்பட்டு குடும்பத்தை ஒன்று சேர்க்க வைக்கிறார். இயக்குநர் பாண்டிராஜின் இந்தத் திரைக்கதையைப் புரிந்து கொண்டால் படம் நிச்சயமாக உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும்..!
விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விவசாயத்தின் மகத்துவம், விவசாயப் பெரியாழ்வார் நம்மாழ்வாரின் பேச்சுக்கள், எழுத்துக்கள்.. “ஒரு நாள் விவசாயியா இருந்து பாரு.. அந்தக் கஷ்டம் தெரியும்..?” என்று காய்கறி மூட்டையை ஏற்ற மறுக்கும் நடத்துனருக்கு பாடம் புகட்டுவது.. ‘விவசாயி’ என்று பத்திரிகைகளில் பெருமையாகப் போட வேண்டும் என்று விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உணர்த்துவது..!
“ஜாதியில் இல்லையடா மனிதம்..” என்று ஜாதி வெறியர்களுக்கு உணர்த்துவது.. ஜாதி வெறி பிடித்த தலைவர்கள் தொண்டர்களை திசை திருப்பும்விதம்.. ஆணவக் கொலைகளை அலட்சியமாகச் செய்யத் துடிக்கும் இன்றைய ஜாதி வெறியர்கள்.. – இப்படி இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான விஷயங்களையும் இந்த இரண்டரை மணி நேர திரைப்படத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
இப்போது தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் தேவையான திரைப்படம் இந்தக் ‘கடைக்குட்டி சிங்கம்’.
அவசியம் பாருங்கள் மக்களே..!